ராயன், காதலிக்க நேரமில்லை திரைப்படங்களுக்கு பிறகு அடுத்தடுத்த புரோஜக்ட்களாக கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் 45வது திரைப்படம் மற்றும் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருந்துவரும் ரஹ்மான், தீடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூகவலைதளங்களில் வெளியான தகவலின் படி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகளின் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என்றும் அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டதால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனால் மேற்கண்ட எந்த தகவல்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போதுவரை திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஏஆர் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு எதனால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதற்கான விளக்கம் விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.