சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி வருண் ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார் என மனுதாரர் வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வருண் ராஜேந்திரன் ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்பட்டாகவும் தகவல். இதனையடுத்து இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனிடையே, செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பதிலளித்த முருகதாஸ் " இந்த விஷயம் மிகவும் ஒருதலைபட்சமாக உள்ளது. இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள்" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் சர்க்கார் பட கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் முருகதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் கதை தொடர்பாக வழக்குத் தொடர்ந்த வருண் என்கின்ற ராஜேந்திரனுக்கு சமரசம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமரசம் குறித்து மனுதாரர் வருணும் ஆஜராகி கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.