இந்தியத் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” கே. பாக்யராஜ் மாரடைப்பால் சென்னையில் காலமானது திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜா உதவியாளராக தொடங்கி, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், நடுத்தர வர்க்க வாழ்க்கையை நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் திரையில் கொண்டு வந்தார்.
செய்தியாளர் -
இந்தியத் திரையுலகின் "திரைக்கதை மன்னன்" என்று அழைக்கப்படும் கே.பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை மற்றும் குடும்பக் கதைகள் மூலம் முத்திரை பதித்த பழம்பெரும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானாது திரைத்துறையினர் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பாக்யராஜ். இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமாகி 17 நாட்களில் பாக்யராஜ் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1979-ம் ஆண்டு வெளியான "சுவரில்லாத சித்திரங்கள்" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாக்யராஜ், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
நடுத்தர வர்கம் மற்றும் கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துப் நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், காதல் மற்றும் சமூகக் கருத்துக்கள் கலந்த ஒரு படத்தை உருவாக்குவதில் நேர்த்தியானவர் பாக்கியராஜ்.
மேலும், இவருடைய படங்கள் பிரம்மாண்டமோ, மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும். மிகக் கூர்மையான, அதே சமயம் சாமானிய மக்களும் ரசிக்கும்படியான வசனங்களை எழுதுவதில் வல்லவர் ஆவார்.
முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுவரில்லாத சித்திரங்கள் ஆகிய படங்களை இயக்கி நடத்திருக்கிறார். தனது பல தமிழ் வெற்றிப் படங்களை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். உதாரணமாக, அவர் இயக்கி நடிகர் கமல், ரேவதி நடித்த ஒரு கைதியின் டைரி படத்தை இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சனை வைத்து 'ஆக்ரி ராஸ்தா' என்ற திரைப்படத்தை இயக்கினார்.
1981-ல் வெளியான அந்த 7 நாட்கள் திரைப்படம் அவரது வெற்றி படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதைக்கு இப்படம் ஒரு மிக முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் மிகச் சிலரே திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்தையும் கவனிப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளனர். பாக்யராஜ் இந்த சாதனையை 1980களில் தொடர்ச்சியாகச் செய்து காட்டினார். 'இது நம்ம ஆளு', 'ஆராரோ ஆரிரரோ' போன்ற படங்களுக்கு அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றினார்.
தமிழ் திரையுலகில் 'முருங்கைக்காய்' என்றாலே அது பாக்யராஜைத்தான் குறிக்கும் அளவுக்கு ஒரு குறியீடாக மாற்றினார். 1983 இல் அவர் இயக்கி, நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சாதாரண ஒரு காய்கறியை, குடும்பப் படத்தில் மிக சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் காதல் குறியீடாகப் பயன்படுத்திய அவரது திரைக்கதை நுணுக்கம் இன்றுவரை பேசப்படுகிறது.
1983ல் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளில் SIIMA - 2014 வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
சினிமா மட்டுமன்றி 'பாக்யா' என்ற புகழ்பெற்ற வார இதழின் ஆசிரியராகவும், பல நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் . பாரதிராஜாவின் காலத்தால் அழியாத படங்களான 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களின் கதை மற்றும் வசனத்தில் இவரின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.