அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலை நடக்கும் என வில்லன் அறிவிக்க, அக்கொலைகளை ஹீரோ தடுத்தாரா என்பதே ஆர்யன்!
மிகப்பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொள்கிறார் அழகர் (செல்வராகவன்). அதில் விருந்தினராக கலந்து கொண்ட நடிகரை அழகர் சுட, தான் வந்த நோக்கத்தை சொல்கிறார். நகரத்தில் அடுத்த ஐந்து நாட்களில், ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்றும், கொலை நடக்க போகும் ஒரு மணிநேரத்துக்கு முன் அவர்கள் பெயரை வெளியிடுவேன் எனவும் சொல்கிறார் அழகர். இந்த வழக்கை விசாரித்து கொலைகளை தடுக்க அழைக்கப்படுகிறார் காவலதிகாரி நம்பி (விஷ்ணு விஷால்). அடுத்த ஐந்து நாட்களில் நடக்கும் கொலைகள் நடக்கிறதா? நம்பி கொலைகாரனை பிடிக்கிறாரா? அழகர் ஏன் இதை செய்கிறார்? என்பதெல்லாம் தான் ஆர்யன் படத்தின் மீதிக்கதை.
வழக்கமான சீரியல் கில்லர் கதையாக இந்தப் படம் அமையக் கூடாது என முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பிரவீன். வழக்கமாக இறந்தவர்களை காட்டிவிட்டு பின்பு கொலையாளியை தேடி செல்லும் கதையில் இருந்து மாறுபட்டு, முதலில் கொலைகாரனை காட்டிவிட்டு பின்பு அவனின் இறை நோக்கி செல்லும் படி அமைக்கப்பட்டிருக்கிறது கதை. 
நடிப்பாக விஷ்ணு விஷால் மனைவியுடனான கருத்து வேறுபாடு, கொலையாளியை பொறுமையாக தேடுவது, குழம்புவது என முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். சீரியல் கொலைகாரன் அழகராக செல்வராகவன், வழக்கமான அதே நடிப்பு, ஆனால் இந்தப் பாத்திரத்திற்கு ஏனோ அது கச்சிதமாக பொருந்துகிறது. போலீஸுக்கு தேவையான க்ளூ கொடுப்பது, இறுதியாக பேசுவது என கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், மனசா சௌத்ரி, கருணாகரன் போன்றோருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை, வந்து போகிறார்கள் அவ்வளவே.
படம் முழுக்க சுத்தமாக இல்லாத த்ரில் உணர்வை தன் இசையால் ஜிப்ரானும், ஒளிப்பதிவால் ஹரீஸ் கண்ணனும் கொடுக்க போராடுகிறது. படத்தில் தேவை இல்லாத காட்சிகளை மிகக் கருணையோடு அணுகி இருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்.
படத்தின் குறைகள் என எடுத்துக் கொண்டால், கண்டிப்பாக படத்தின் எழுத்து + திரைக்கதை. சீரியல் கொலைகாரன் யார் என்பதை முன்பே அறிவித்து, இறக்க போகும் நபர் என்பதில் சஸ்பென்ஸ் வைப்பது என புதிதான விஷயம் முயற்சிப்பது ஓகே. ஆனால் அதனை துளியும் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்த்துவதும், இறுதியில் இந்தக் கொலைகளுக்காக சொல்லப்படும் காரணமும் சுத்தமாக நம்பும்படி இல்லை. எனவே படம் முழுக்க யார் இறந்தாலும், யார் யாரை துரத்தினாலும் கொஞ்சமும் படம் மேல் ஆர்வமே நமக்கு ஏற்படவில்லை. அதிலும் படம் முழுக்க விஷ்ணு விஷால் மற்றும் அந்த விசாரணைக் குழு ஏதாவது ஒரு அறையில் நின்று எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்களே தவிர, புத்திசாலித்தனமாக எதையும் செய்யவில்லை.
திடீரென ஒரு காட்சியில் ஷ்ரத்தா, விஷ்ணுவுக்கு போன் செய்து நேரில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என அழைப்பார். அங்கு சென்று பார்த்தால் அவர் சொல்லும் விஷயம் எந்த முக்கியத்துவமும் இல்லாததாய் இருக்கும். இதனை போனிலேயே அவர் சொல்லி இருக்கலாமே என நமக்கு தோன்றும். இப்படி படத்தில் பல குறைகள். இதற்கு முன் விஷ்ணு விஷால் நடித்த சீரியல் கில்லர் படமான `ராட்சசன்', அதற்குள் கருத்து ரீதியாக நிறைய தவறுகள் நிறைந்திருக்கும் படம். ஆனால் அப்படம் வென்றதற்கு முக்கியமான காரணம் பார்வையாளர்களை கட்டிப் போடும் திரைக்கதை. ஆனால் கருத்து ரீதியாக சரியான ஒரு படத்தை கொடுக்கிறேன் என திரைக்கதையில் நிறைய தூக்க மாத்திரைகளை கலந்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மிக மிக மைனஸ் ஆனா விஷயம் என்ன என்றால், வில்லன் தன் கொலைகளுக்கு சொல்லும் லாஜிக் தான். இப்படியான ஒரு வில்லன் என்றால், எப்போதும் தத்துவார்த்த ரீதியாக அவனின் கருத்து மிக அழுத்தமாகவும் தவறு சொல்ல முடியாத அளவிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் வில்லனின் லாஜிக் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், ஏற்புடையதாக இல்லை. 
த்ரில்லர் என்ற களத்துக்கு ஏற்ப, கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்திருந்தால் வென்றிருப்பான் இந்த ஆர்யன்.