Vijay Sethupathi Kaataan Review
திரை விமர்சனம்

வெட்டப்பட்ட தலையின் மர்மத்தைச் சுவாரஸ்யமாக சொல்கிறதா `காட்டான்'? | Vijay Sethupathi | Kaataan Review

விஜய் சேதுபதி சீரிஸ் முழுக்க தன்மீது ஒரு மர்மத்தைத் தக்கவைத்தபடியே வருகிறார். கிராமத்து மக்களிடம் கேலியாகப் பேசி புழுக்கை வியாபாரம் பார்ப்பது, ஒரு மரணத்தைக் கண்டு கலங்குவது, ஆக்ரோஷமாகப் பழி தீர்ப்பது எனப் பல காட்சிகளில் கவர்கிறார்.

Johnson

வெட்டப்பட்ட தலையைச் சுற்றிய மர்மங்களும், அதன் விடைகளுமே `முத்து என்கிற காட்டான்'.

பெரியவீரம்பட்டி ஊர், அங்கேயொரு போலீஸ் ஸ்டேஷன். அது `இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா' என்பது மாதிரியான இடம் என்பதால், ’அங்கே எதற்கு போலீஸ் ஸ்டேஷன்? மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு, திருமங்கலம் வாருங்கள்’ என உத்தரவு பறக்கிறது. அதிகாரியான சித்தார்த்தன் (முத்துக்குமார்) மற்றும் அவரது குழு தங்கமுடி (சிங்கம்புலி), காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) ஸ்டேஷனை காலி செய்ய தயாராகிறார்கள். அப்போது ஊர் எல்லையில். உடல் இல்லாமல் தலை மட்டும் (விஜய் சேதுபதி) வெட்டப்பட்டு கிடக்கிறது.

Kaataan

மூட இருக்கும் ஸ்டேஷனுக்கு வருகிறது `தலை' வலி. விசாரணையை உள்ளூரில் இருந்து ஆரம்பிக்கும் காவல் குழுவுக்கு அவரது பெயர் முத்து என தெரிய வருகிறது. அவன் வாட்ச் மெக்கானிக்காக, யானை பாகனாகா, நடனக்குழுவில் டிரைவராக எனப் பல பணிகள் செய்திருக்கிறார் என்பதும், காசை வாரி இறைக்கும் ஆள் என்பதும் தெரிகிறது. யார் இந்த முத்து என்கிற கேள்விக்கு பதில் தேடி அலையும் விசாரணை பயணமே `காட்டான்' கதை.

சீரிஸின் முதல் எபிசோடிலேயே சிரித்தபடி இருக்கும் வெட்டப்பட்ட தலை, அவன் யார் என்ற மர்மம் என நறுக்கென ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்கள் சீரிஸின் இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார்.

Kaataan

விஜய் சேதுபதி சீரிஸ் முழுக்க தன்மீது ஒரு மர்மத்தை தக்கவைத்தபடியே வருகிறார். எவரோடும் நெருங்கிப் பழக தயங்குவதும், அதேவேளையில் கிராமத்து மக்களிடம் கேலியாக பேசி புழுக்கை வியாபாரம் பார்ப்பதும், ஒரு மரணத்தை கண்டு கலங்குவதும், ஆக்ரோஷமாக பழி தீர்ப்பதும் எனப் பல காட்சிகளில் கவர்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிந்து பாத்திரத்தில் நடித்த கலைவாணி மனதில் நிற்கிறார். வழக்கமாக துள்ளல் பாடல்களில் மட்டுமே பார்த்த ரிஷா ஜேக்கப், இதில் மீனா பாத்திரத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி மீது காதல் கொள்வது, பின்னர் சந்தேகிப்பது, அவர் இல்லாமல் தவிப்பது என நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். லலிதாவாக வரும் பார்வதி நடிப்பும் சிறப்பு.

இதற்கு அடுத்தாக கவர்வது காளை பாண்டியன் பாத்திரத்தில் வரும் வடிவேல் முருகன். ஊரிலேயே இருக்க வேண்டும், போலீஸாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அவர் செய்யும் விஷயங்கள், அம்மாவையும் - மனைவியையும் கையாளத் திணறுவது, முத்து பற்றிய விசாரணையை தொடர்வது எனப் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் கேரளாவில் சென்று வழக்கை விசாரிக்கும் முத்துகுமார் - சிங்கம்புலி தங்களால் முடிந்த அளவு காமெடிக்கு உதவுகிறார்கள். மிலிந்த் சோமன், இர்ஷாத் அலி, பாலாஜி சக்திவேல் போன்றோர் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடிக்கிறார்கள். சுதேவ் நாயர் மிக வழக்கமான வில்லனாக வந்து போகிறார்.

Kaataan

இந்தக் கதை ஒரு பக்கம் முத்துவைத் தேடிய விசாரணைகளாக ஒரு பக்கம் நீள, இன்னொரு பக்கம் காளை பாண்டியன் அவரது மனைவி மற்றும் அம்மா சார்ந்த குடும்பச் சண்டைகள் என நகர்கிறது. ஒரு சுவாரஸ்யமான சீரிஸ்க்குத் தேவையான பல கதாபாத்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. கதையாகவும் ஒரு கொலை நடந்திருக்கிறது, அதனைச் செய்தது யார் என்பதற்கு முன்பாக, கொலை செய்யப்பட்டது யார் என்பது சார்ந்து திரைக்கதையைக் கொண்டுசென்றது புதிதாக இருந்தது.

தொழில்நுட்பரீதியாக என்.சண்முகசுந்தரம் மற்றும் மது நீலகண்டன் இருவரது ஒளிப்பதிவு தரமான ஒரு தயாரிப்பைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது. ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும் கதையின் தன்மைக்கு ஏற்ப பொருந்திப் போகிறது.

Kaataan

இதன் பிரச்னை என்ன எனப் பார்த்தால், துவக்கத்தில் முத்து யார் என இருக்கும் ஆர்வம் அடுத்தடுத்த எபிசோட்களில் வேகமாகக் குறைகிறது. அதற்கு முக்கியமான காரணம், கதையில் எந்த எமோஷனல் கனெக்ட்டும் நமக்கு ஏற்படவில்லை. மேலும் 2004 - 2017 வரை கதை முன்னும்பின்னும் மாற்றி மாற்றிச் சொன்ன விதம் சுவாரஸ்யமாக இல்லை, கூடவே இது என்ன காலகட்டம் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. முத்து - சிவேட்டன் இடையே அப்படி என்ன நட்பு? சிவேட்டன் திடீரென துறவிபோல இயற்கை பற்றிப் பேசுவதும், எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் எனப் பேசுவது ஏன்? சிவேட்டன் - ஜானி இடையிலான பகைதான் என்ன? வெறும் பணத் தகராறு என வழக்கமான ஒன்றுக்கு ஏன் இவ்வளவு பில்டப் எனப் பல கேள்விகளுக்கு விடையே இல்லை.

மேலும் இந்தக் கதையில் ஒரு முழுமையை உணரவே முடியவில்லை என்பது மிகப்பெரிய பிரச்னை. அதெப்படி ஒரு தலை சிரித்தபடி வெட்டப்பட்டிருக்கிறது என்பது இந்த தொடருக்கான அறிமுக ஈர்ப்பாக இருந்திருக்கும். அதற்கு கடைசி வரை விடை சொல்லாமல் முடித்திருப்பது சுத்த போங்காட்டம். 10 எபிசோட் ஓடுகிறது தொடர். ஆனால் அதற்கு ஏற்ப அழுத்தமாக கதையோ, காட்சிகளோ சுவாரஸ்யமாக அமைக்கப்படவே இல்லை.

Vijay Sethupathi

மொத்தத்தில் ஓர் ஆர்வத்தைத் தூண்டி ஆரம்பிக்கும் சீரிஸ், மிக வழக்கமாக மற்றும் ஒரு சுமார் ஹாட்ஸ்டார் தொடராக முடிகிறது. நிறைய நேரம் இருப்பவர்கள், டைம் பாஸ் செய்ய வேண்டும் என்றால் பார்க்கலாம். அவசியம் பார்க்க வேண்டும் என்ற சீரிஸ் இது இல்லை.