இரு காவலர்களும், ஒரு குடும்பமும் கடக்கும் ஒரு திகில் இரவு தான் `க்ராணி'
கேரளா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், 10 சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள், அவரது உடலில்லிருந்து இருதயம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏட்டு சிங்கம்புலியுடன் இணைந்து விசாரிக்கிறார் திலீபன். இன்னொரு பக்கம் லண்டனில் இருந்து தனது மனைவி, மற்றும் செவித்திறன் சவால் கொண்ட இரண்டு குழந்தைகளுடன் தமிழகத்தில் இருக்கும் தன் பூர்வீக வீட்டில் குடியேறுகிறார் ஆனந்த் நாக். பழைய வீடு என்பதால் அதன் மராமத்து வேலைகளையும், இயற்கை விவசாயம் செய்ய தேவையானவற்றையும் ஏற்பாடு செய்யும் வேளையில், அவர் வீட்டு வாசலில் வந்து மயங்கி விழுகிறார் ஒரு மூதாட்டி. அவருக்கு வீட்டில் தங்க இடம் கொடுக்கிறார் ஆனந்த் நாக். ஒரு கட்டத்தில் அந்த மூதாட்டி பற்றிய உண்மை தெரியவர அதன் பின் என்ன ஆனது? காவலரின் வழக்கிற்கும் இந்த மூதாட்டிக்கும் என்ன சம்பந்தம்? என்பதை எல்லாம் சொல்கிறது இந்த க்ராணி.
ஒரு பாட்டி, ஒரு வீடு, ஒர் இரவு என எளிமையான விஷயங்களை வைத்துக் கொண்டு திகிலூட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய குமரன்.
வடிவுக்கரசி 108 வயது ஒச்சாயியாக வில்லத்தனம் காட்டும் பொறுப்பு, ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மோசமான மேக்கப்பை தாண்டி துளியும் அவரது நடிப்பு வெளியே தெரியவில்லை. ஆனாலும் ஒரு மூதாட்டியின் பாத்திரத்தை தன் உடல்மொழி மூலம் கொடுக்க கடுமையாக மெனக்கெட்டிருக்கிறார். திலீபன் புகழேந்தி, சிங்கம்புலி, கஜராஜ், ஆனந்த் நாக், அபர்ணா ஆகியோர் நடிப்பிலும் பெரிய ஈர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஒரு ஊர்ல பிசாசு இருந்துதாம் என்ற ரீதியிலான ஒரு நாடோடி பேய் கதை தான் படத்தின் களம். அதனை கதையாக கேட்கும் போது இருக்கும் திகில் கூட பார்க்கும் போது ஏற்படவில்லை. ஒச்சாயி சம்பந்தமாக சொல்லப்படும் ஃபிளாஷ்பேக் கூட எந்த சுவாரஸ்யமும் சேர்க்கவில்லை. மேலும் ஒரு திகில் படத்துக்கு தேவையான காட்சிகளும் படத்தில் இல்லை.
தொழில்நுட்ப ரீதியிலும் படம் மிக பலவீனமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் இரவில் நடக்கும் கதை என்பது ஓகே தான். ஆனால் பல காட்சிகள் என்ன நடக்கிறது என்பதே புரியாத அளவு கடும் இருளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சிஜி சார்ந்த காட்சிகளும் தரமற்றதாகவே இருக்கிறது.
மொத்தத்தில் கதையாக கேட்க திகிலாகவும், பார்க்க மிக மிக சுமாரான படமாகவும் மட்டுமே மிஞ்சுகிறது இந்த `க்ராணி'