The Pope's Exorcist
The Pope's Exorcist  Sony
திரை விமர்சனம்

The Pope's Exorcist விமர்சனம்: இந்த பேய்க்குப் பிடிச்ச ஒரே வார்த்தை 'மன்னிப்பு'..!

karthi Kg

பேசியே பேய்களையெல்லாம் விரட்டும் கேப்ரியல் அம்ரோத் என்பவருக்கும், 'கடவுளே உன்னை மன்னிச்சாலும் நீ உன்னைய மன்னிச்சியான்னு உன்னை நீயே கேட்டுட்டு வா' என அந்த கேப்ரியல் அம்ரோத்தையே சுற்றவிட்டு பொடணியில் அடிக்கும் பேய்க்குமான உரையாடலே... இந்த வாரம் வெளியாகியிருக்கும் The Pope's Exorcist படத்தின் ஒன்லைன்!

The Pope's Exorcist

பாடியே பால் கறக்கும் ராமராஜனைப் போல, எங்கெல்லாம் பேய் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று பேசியே பேயை விரட்டுகிறார் கேப்ரியல் அம்ரோத். அப்படியாப்பட்ட அம்ரோத்தை, மீட்டிங்கிற்கு அழைக்கிறது ஹை கமிட்டி. "நீங்கள் செய்யும் இந்த விஷயங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் இனி பேயை ஓட்டக்கூடாது. இதுவே எங்கள் கட்டளை. எங்கள் கட்டளையே சாசனம்" என ஹை கமிட்டி பஞ்ச் பேச, "என்னை அப்பாயின்ட் பண்ணினதே போப் தான். எதா இருந்தாலும் அவர்ட்டயே பேசிக்க" என கூலாக சொல்லிவிட்டு, 'வர்ட்டா மாமே டுர்ர்ர்' என ஸ்கூட்டரில் கிளம்பிவிடுகிறார் அம்ரோத்.

அம்ரோத் அடுத்ததாக போப்பைச் சந்திக்க, அவரோ "நீ நேரா போய் மூணாவது தெரு ஓரத்துல இருக்குற முக்கு வீட்ல தங்கியிருக்குற சின்ன பையன பாரு. அவனுக்குள்ள ஒரு பெரிய சாத்தான் வந்திருக்கு" என வெத்தலை - மை இல்லாமலேயே புட்டு புட்டு வைக்கிறார். உடனே இவரும் மீண்டும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு டுர்ரென ஸ்பெயின் கிளம்புகிறார். அங்கு அந்தச் சின்னப் பையனுக்குள்ளிருக்கும் பேயோ கூலாக, "உன்னோட பாவங்களை எல்லாம் கடவுள் மன்னிச்சு இருக்கலாம். ஆனா உன்னால உன்னோட பாவத்தை மன்னிக்க முடியுமா கேப்?" என 'உன்னாலயே உன்ன தூக்க முடியுமா சொல்லு' என்ற பார்த்திபன் ஸ்டைலில் திருப்பிவிட, கதிகலங்கிப் போகிறார் அம்ரோத். இந்த வாயாடிப் பேயை எப்படி சமாளித்து, சிறுவனைக் காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த The Pope's Exorcist படத்தின் மீதிக்கதை.

படத்தில் இருப்பவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போது முதுகை சொறிவது, அங்கு நின்று பயம் காட்டுவது; கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டு இரவில் மட்டும் வெளியே வந்து பீதியைக் கிளப்புவது; சீலிங் ஃபேனில் தொங்குவது போன்ற ஜம்ப் ஸ்கேர் (jump scare) காட்சிகளையெல்லாம் முடிந்தளவு குறைத்து திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள் மைக்கல் பெட்ரோனியும், ஈவன் ஸ்பிலியோடோபௌலஸும்.

வசனங்களில் கொஞ்சமே கொஞ்சம் வரும் காமெடி கூட, ரஸல் க்ரோவின் நக்கல் தொனியால் கூடுதலாக நம்மை சிரிக்க வைத்துவிடுகிறது. படத்தின் பெரும்பலம், பேய்ப்படம் என்பதால் வெறுமனே சம்பிரதாய பேய் ஓட்டுதல் காட்சிகளை மட்டுமே வைத்து படத்தை நிரப்பவில்லை. கூடுதலாக சர்ச்சின் பெயரால் கடந்த காலங்களில் நடந்த சில பாலியல் அத்துமீறல்களையும் படம் பேசியிருக்கிறது. பேய் பிடித்த சிறுவனாக வரும் பீட்டர் மிரட்டியிருக்கிறார். பேயின் குரலாக வரும் ரால்ஃப் இனிசன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் நக்கல் அடித்திருக்கிறார்.

அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும்.
யோவான் 8:7

பைபிளில் வரும் புகழ்பெற்ற வாசகம் இது. கிட்டத்தட்ட பேயாக, ஃபாலன் ஏஞ்சலாக வரும் டீமனும் சொல்வது இதுதான். "கடவுள் நீங்கள் செய்த பிழையை மன்னித்ததாகவே இருக்கட்டும். ஆனால், நீங்கள் உங்களை அந்த பிழைகளுக்காக மன்னித்திருக்கிறீர்களா? அப்படி மன்னித்துவிட்டு, என்னிடம் வந்து பேச்சுவார்த்தைக்கு அமருங்கள்" என்னும் டீமனின் வரிகளை, இந்த படத்தை விட்டு வெளியே வந்தபின்னும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

பெரிதாக பீதியைக் கிளப்பும் காட்சிகள் இல்லாததால், பேய்ப்பட விரும்பிகளுக்கு இந்தப் படம் பிடிப்பது சற்று கடினமே.

இன்னமும் பழைய பங்களாவைப் பார்த்து பேய் குடியிருப்பது போன்ற சில க்ளிஷேக்கள் படத்தில் இருந்தாலும், ஒரு வித்தியாசமான பேய்ப்படம் பார்க்கலாம்பா என நினைப்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.