பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட காதலனை, மீட்க காதலி எடுக்கும் முயற்சிகளே தெலுங்குப் படமான `தண்டேல்'ன் ஒன்லைன்.
9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என தங்களது வாழ்க்கையை நடத்துகிறார்கள் ஸ்ரீகாகுளம் மக்கள். அந்த ஊர் மீனவர்களில் ஒருவர் ராஜூ (நாக சைதன்யா). ராஜூ - சத்யா (சாய் பல்லவி) இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். அதுவரை மீனவராக இருந்த ராஜூ, எப்போதும் மக்களின் பக்கம் நிற்கிறார் என்பதால் தண்டேல் (தலைவன்) ஆக அறிவிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் 9 மாதம் ராஜூவை பிரிந்திருக்கிறோம் என்பது சத்யாவுக்கு பரிதவிப்பாக மட்டுமே இருந்தாலும், கடலுக்கு சென்று மரணமடையும் சில மீனவர்களை பார்த்த பின், பெரிய பயமாக மாறுகிறது. எனவே, இனி மீன் வேட்டைக்கு செல்ல வேண்டாம் என ராஜூவிடம் சத்தியம் வாங்குகிறார் சத்யா. ஆனால் அதையும் மீறி கடலுக்கு செல்கிறார் ராஜூ. ஒரு பக்கம் சத்யாவின் கோபம், இன்னொரு பக்கம், புயலால் குஜராத்தின் எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைகிறார்கள் ராஜூவின் தலைமையில் சென்ற 22 மீனவர்கள். இதன் பின் நடப்பவை என்ன?
ஸ்ரீகாகுளம் மீனவர்கள் நிஜத்தில் சந்தித்த ஒரு பிரச்னையை சினிமாவாக மாற்றியிருக்கிறார்கள் இயக்குநர் சந்து மொன்டேட்டி மற்றும் கதாசிரியர் கார்த்திக் தீடா. படத்தின் மையத்தை காதலாக வைத்து, அதை சுற்றி நிஜ சம்பவத்தை பேச முயன்றது படத்திற்கு ஓரளவு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. நடிப்பாக நம்மைக் கவர்வது சாய் பல்லவி தான். காதலனின் போன் காலுக்காக, அவனது வருகைக்காக காத்திருப்பது துவங்கி, இந்தக் காதல் வேண்டாம் என முடிவு செய்வது வரை பல இடங்களில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாக சைதன்யா வழக்கம் போல் ஒரு மையமான ரியாக்ஷன்களையே கொடுக்கிறார். பெரிதாக ஈர்க்கும் படி காட்சியோ, உணர்வுப் பூர்வமான காட்சியோ அவருக்கு இல்லை. பிரதான பாத்திரங்களான இந்த இருவர் தவிர, ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை, பிரகாஷ் பெலவாடி, கருணாகரன் ஆகியோர் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
கடற்புற காட்சிகள், கடற்கரை காட்சிகள், சிறை என ஒவ்வொரு இடத்தையும் திருத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஷ்யாம்தத்தின் ஒளிப்பதிவு. படத்தின் பெரிய பலம் தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை. எமோஷனல் காட்சிகள், மாஸ் காட்சிகள், காதல் என எல்லாவற்றிலும் கூடுதலாக அழுத்தம் சேர்க்கிறது.
ஒரு கட்டத்துக்கு மேல் படம் எதை பற்றியது என்ற தெளிவில்லாமல் போவதுதான் படத்தின் பெரிய மைனஸ். உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்வது என ஆரம்பித்து, அதை ஒரு காதல் கதை வடிவத்தில் சொல்வது என்பது வரை ஓகே. ஆனால் இரண்டிலுமே எந்த அழுத்தமும் இல்லாமல் படம் நகர்வது தான் பிரச்சனை. மேலும் படத்தில் இருக்கும் மாஸ் பில்டப்கள், படத்தின் இயல்புத் தன்மையை மொத்தமாக கெடுக்கிறது. ஹீரோ ஓப்பனிங் சீனில் ஒரு சண்டை, ஊரை காப்பாற்ற ஒரு சண்டை, பாகிஸ்தான் சிறையில் ஒரு சண்டை... என துவம்சம் செய்கிறார். யாரையும் அவர் அடித்து விடுவார் என்பதால் எப்படியும் இவர் எல்லா பிரச்ச்னையில் இருந்தும் தப்பிவிடுவார் என்ற எண்ணம் துவக்கத்திலேயே நமக்கு வந்துவிடுகிறது. எனவே எமோஷனலாக எந்த பதற்றமும் இல்லை. ராஜூ கடலுக்கு செல்வதை மறுக்க சத்யாவின் காரணம் மிக அழுத்தமாக இருக்கிறது, அவரது பயத்தில் இயல்பும் இருக்கிறது. அப்போதெல்லாம் இருக்கும் இயல்புத்தன்மை, குஜராத் சென்று, போராட்டம் செய்து மீனவர்களின் பாக்கி வருமானத்தை பெறுவது, மணக்கோலத்தில் சென்று ஒருவரின் கவனத்தை கவர்வது, கலவரத்திலிருந்து தப்பி மீண்டும் சிறைக்கு வரும் கைதிகள் என மிகவும் கமர்ஷியலாக மாறும் போது காணாமல் போகிறது.
மொத்தமாக பார்த்தால், இந்த தண்டேல் ஒரு உண்மை சம்பவத்துக்கு சினிமா சாயம் பூசியது போல் தான் இருக்கிறதே தவிர. அந்த உண்மையை நெருக்கமாகவும் நேர்த்தியாகவும் சொன்னதாக இல்லை. வழக்கம் போல் ஒரு கமர்ஷியல் படமாகவே பத்தோடு பதினொன்றாய் எஞ்சுகிறது.