SuperMan Review Jessica Miglio/Warner Bros Pictures
திரை விமர்சனம்

Superman Review |நல்லா இருக்கேப்பா இது..!

மொத்தத்தில் SuperMan என்ற ஒரு க்ளாஸிக் சூப்பர்ஹீரோவுக்கு சரியான ஒரு REBOOT-ஐ கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கன்.

Johnson

உலகறிந்த சூப்பர்ஹீரோ இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா என வந்திருக்கும், REBOOT MISSIONனே சூப்பர்மேன்.

தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப சூப்பர்மேன் கதைகளும் விதவிதமாக சொல்லப்பட்டன. 1940-களில் திரையில் இருந்து சொல்லப்படு வரும் சூப்பர்மேன் கதைகள் பல பரிமாணம் எடுத்திருக்கிறது. 2013ல் ஸாக் ஸ்னைடர் எடுத்த சூப்பர்மேன் ரீ பூட் ஒரு நல்ல துவக்கம் என்றாலும், போகப் போக ஆர்வத்தை நீர்த்துப் போக செய்தது. இம்முறை மார்வல் இயக்குநரான ஜேம்ஸ் கன், டிசி-க்குள் வந்து சூப்பர்மேன் கதையை ரீ பூட் செய்திருக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை சேர்த்தது.

30 ஆண்டுகளுக்கு முன் க்ரிப்டோ கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த Kal-El, பத்திரிகையாளர்  Clark Kent அடையாளத்துடன் வாழ்ந்து, ரகசியமாய் சூப்பர்மேனாக நகரத்தை காத்து வருகிறார். இந்த சூழலில் Jarhanpur மீது Boravia போர் தொடுக்க அதனை தடுத்து நிறுத்துகிறார் சூப்பர்மேன். இதனால் Boraviaவுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு சூப்பர்மேன் மேல் கடும் கோபம். இன்னொரு பக்கம் சூப்பர்மேனை எப்படியாவது அழிக்க காத்திருக்கும் லெக்ஸ் லூத்தருக்கு இந்த சூழல் கைகொடுக்கிறது. சூப்பர்மேன் பூமிக்கு வந்ததே மக்களை அடிமைப்படுத்தி அதனை ஆளதான் என்பதை ஒரு ஆதாரத்தை கொண்டு நிரூபிக்கிறார் லூத்தர். அதுவரை சூப்பர்மேன் மேல் நம்பிக்கை வைத்திருந்த அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள், சூப்பர்மேன் கைது செய்யப்படுகிறார். இதன் பின் என்ன ஆனது? Jarhanpur - Boravia இடையேயான போர் என்ன ஆகிறது என்பதை எல்லாம் சொல்வதுதான் சூப்பர்மேன் பட மீதிக்கதை.

எப்போதுமே சூப்பர்மேன் கதையை, கிரிப்டோ கிரகத்தில் இருந்து தப்பி பூமி வந்தார், விபத்தில் இருந்து மக்களை காப்பாற்றி ஹீரோ இன்ட்ரோ ஆனார் என இருக்கும் பழமைகளை புறம்தள்ளி, நேரடியாக கதைக்குள் நுழைந்ததில் இருந்தே ஜேம்ஸ் கன் கைவண்ணம் தெரிகிறது. அதிலும் சூப்பர்மேன் எவ்வளவு பலமான ஆள் தெரியுமா என இதற்கு முன் வந்த ஒவ்வொரு படமும் நிறுவ முயற்சித்தால், இப்படத்தில் சூப்பர்மேனை ஒரு மனிதனாக நிறுவ முயற்சித்திருக்கிறார் ஜேம்ஸ். அதையே படத்தின் மையச்சரடாக வடிவமைத்திருக்கிறார். இப்படத்தில் சூப்பர்மேனாக David Corenswet மிகச்சிறப்பு. கம்பீரமாக இருந்தாலும், தான் ஒரு மனிதன் என்பதற்கான அங்கீகாரத்திற்கு ஏங்கும் அவரது முயற்சிகளை நடிப்பில் காட்டியிருக்கிறார். லெக்ஸ் லூத்தர் கதாப்பாத்திரத்தில் வில்லனாக கவர்கிறார் Nicholas Hoult. சூப்பர்மேனை பழிதீர்க்க அவர் போடும் திட்டங்கள், சூப்பர்மேன் வீழ்த்தப்படும் போது காட்டும் முக பாவங்கள் என அசத்தல். இவர்கள் தவிர சூப்பர்மேனின் காதலியாக வரும் Rachel Brosnahan, டெரிஃபிக் பாத்திரத்தில் வரும் Edi Gathegi, க்ரீன் லேன்டனாக வரும் Nathan Fillion, ஹாக் கேர்ளாக வரும் Isabela Merced போன்றோரும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தான் ஒரு போரையே நிறுத்தியிருக்கிறேன் என தன்னை சக்திவாய்ந்தவனாக காட்டிக் கொள்ள வாதாடும் சூப்பர்மேன், தானும் ஒரு மனிதன்தான் என உணரும் படியான கதாப்பாத்திர வடிவமைப்பு வெகுவாக கவர்கிறது. கூடவே இஸ்ரேல் - பாலஸ்தீன போரை பிரதிபலிக்கும்படி Jarhanpur - Boravia போரை காட்டியது, எலன் மஸ்க் - ட்ரம்ப் இடையேயான விஷயங்களை காட்ட லெக்ஸ் லூத்தர் - அதிபரைக் காட்டியது என நிஜ நிகழ்வுகளை பதிவு செய்த விதமும் சிறப்பு. அதே வேளையில் பீஸ்மேக்கர், சூப்பர்கேர்ள் கதாப்பாத்திரங்களை காட்டியது, ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் கலாய்த்துக் கொள்வது என காமெடிகளுக்கும் பஞ்சம் இல்லை.

John Murphy - David Fleming இசையில் படத்தின் க்ளாஸிக் தன்மையும், மார்டன் டச்சும் அழகாக கலந்திருக்கிறது. Henry Braham ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளுக்கு எக்ஸ்ட்ராவாக மெனக்கெட்டிருக்கிறது.

படத்தின் குறைகள் எனப்பார்த்தால், வில்லன் லெக்ஸ் லூத்தர் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். வெறுமனே சூப்பர்மேன் வெறுப்பு என சொல்வது அத்தனை அழுத்தமாக இல்லை. அதே சமயம் முதல் பாதி முழுக்க சுவாரஸ்யம் ஏதும் இன்றி கதை நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் கதை, க்ளைமாக்ஸ் வரை பரபரப்பாக நகர்கிறது. அதே போல படத்தின் எண்ட் கிரெடிட் மற்றும் போஸ்ட் கிரெடிட் பெரிய ஏமாற்றமே.  

மொத்தத்தில் சூப்பர்மேன் என்ற ஒரு க்ளாஸிக் சூப்பர்ஹீரோவுக்கு சரியான ஒரு REBOOT-ஐ கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கன். கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ண வேண்டிய படம் என யோசிக்காமல் சொல்லலாம்.