RJ BALAJI | Sorgavaasal சொர்க்கவாசல்
திரை விமர்சனம்

SORGAVAASAL REVIEW |நரகத்தில் ராஜாவாக இருக்க போகிறீர்களா இல்லை சொர்க்கத்திற்காக ஏங்கப் போகிறீர்களா?

சிறைச்சாலையை களமாகக் கொண்டு தமிழில் மிகச்சொற்பமான படங்களே வந்திருக்கிறது. சிறைச்சாலை செட்டப், அங்கிருக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்னைகள் என வித்தியச ஒன்லைன் பிடித்ததில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.

karthi Kg

போலி வழக்கில் கைதாகி சிறை செல்லும் பார்த்திபன், சிறைச்சாலை என்னும் நரகத்தில் என்ன ஆனார் என்பதே சொர்க்கவாசல் படத்தின் ஒன்லைன்.

ரோட்டுக்கடை உணவகம் நடத்திவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். எதிர்பாராத சூழலில் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட, அந்த கொலைப்பழி பார்த்திபன் மீது விழுகிறது. இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என சிறைச்சாலைக்குள்ளேயே திருந்தும் முயற்சியில் இருக்கிறார் சிகா . தான் ஏங்கும் பதவி வேறொரு வெளி நபருக்கு கிடைத்துவிட்டதால் கடுப்பில் இருக்கிறார் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் கட்டபொம்மன். படத்தின் பிரதான முகங்கள் இவர்கள் தான். சிறைச்சாலைக்குள் நிகழும் ஒரு மரணம், கலவரச் சூழலாக மாற வன்முறை வெடிக்கிறது. அந்த நரகத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் என்ன என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே சொர்க்கவாசல் படத்தின் மீதிக்கதை.

பார்த்திபனாக RJ பாலாஜி. ரன் பேபி ரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு இறுக்கமான வேடம். இயலாமையால் நொடிந்து போகும் காட்சிகளில் ஓரளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், மற்ற காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சதுரங்கத்தில் தேவைக்கேற்ப உருவம் மாறும் கட்டபொம்மனாக கருணாஸ். இந்த சீசனில் சிறந்த குணச்சித்திர நடிகராக உருவாகிவருகிறார். சிறப்பான தேர்வு. பல கொலைகள் புரிந்த சிகாவாக செல்வராகவன். செல்வராகவின் முன்கதை கார்ட்டூனில் சொல்லப்படுகிறது. அந்தக் காட்சிகளில் இருக்கும் பிரமிப்பு செல்வா வந்ததும் 'புஸ்' என்றாகிவிடுகிறது. ஒரு டானுக்கான எந்த மாடுலேசனும் இல்லாமல் முதிர்ச்சியடைந்த 7ஜி பட ' ரவி கிருஷ்ணாவாகவே' படம் முழுக்க வருகிறார். விசாரணை அதிகரியாக வரும் நட்டிக்கு நெஞ்சு எரிச்சலுடன் பேசும் கதாபாத்திரம். அது எதற்கான குறியீடு என்பதை கடைசி வரை புரிந்துகொள்ள முடியவில்லை. நாமே திரையைக் கிழித்துக்கொண்டு போய் ஜெலுசில் கொடுத்துவிடும் அளவுக்கு அந்த மேனரிஸத்தில் கடுப்பைக் கிளப்புகிறார்.

சிறைச்சாலையை களமாகக் கொண்டு தமிழில் மிகச்சொற்பமான படங்களே வந்திருக்கிறது. சிறைச்சாலை செட்டப், அங்கிருக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்னைகள் என வித்தியச ஒன்லைன் பிடித்ததில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். அதிகார வர்க்கத்தின் சிஸ்டத்தில் உண்மை, நேர்மைக்கு எல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்பதை சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார்.

1999ல் தமிழ்நாட்டின் சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரம் குறித்த படமாக விரிகிறது சொர்க்கவாசல். காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள், குற்றவாளிகள் என பலரும் கொல்லப்பட்ட அந்த கலவரத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரியாக வரும் நட்டி பலரின் வாக்குமூலங்களை பெறுகிறார். அந்த வாக்குமூலங்களின் வழி உண்மையும் பொய்யும் கலந்த கதை நமக்குச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ரேஷோமோன், விருமாண்டி பாணியிலான திரைக்கதை தான் என்றாலும், அந்த படங்கள் கடத்தும் உணர்வை சொர்க்கவாசல் தர மறுக்கிறது. கருணாஸ், பாலாஜி சக்திவேல் , ஹக்கிம் ஷா, ஷோபா சக்தி தவிர மற்றவர்களின் நடிப்பு போதாமையாகவே இருக்கிறது. தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் கூட்டணியில் நிறைய ஷார்ப்பான வசனங்கள். ஆனால், படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் ஃபிலாசபி கிளாஸ் எடுக்கிறார்கள். தடுக்கி விழுந்தால்கூட தத்துவ மழை தான். நாமே இண்டெர்வெல்லில் ஒரு மசாலா பிலாசபி கொடுங்க என கேட்கும் அளவுக்கு வசனங்களை வைத்து நிரப்பியிருக்கிறார்கள். வசனங்கள் அந்த மனிதர்களின் மொழியில் இயல்பாகவே இருந்திருக்கலாம். கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்குத் தேவையான ஹைப்பைத் தருகிறது. வித்தியாசமான திரைக்கதைக்கு ஏற்ப இன்னும் கவனத்துடன் எடிட் செய்திருக்கலாம் செல்வா. சில கதாபாத்திரங்கள் முன்பே வந்துவிடுவது கதையின் மீதான ஆர்வத்தை குறைத்துவிடுகிறது.

நரகத்துல ராஜாவா இருக்கப்போகிறியா இல்ல சொர்க்கத்துக்காக முட்டி போட்டு காத்திருக்கப் போகிறாயா என்னும் கேள்வியுடன் தொடங்கும் படம் அதற்கான பதிலை தரும் முன்னரே நம்மை மூச்சிறைக்க வைத்துவிடுகிறது.