சிங்கப்பூர் சலூன்
சிங்கப்பூர் சலூன் சிங்கப்பூர் சலூன் விமர்சனம்
திரை விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம் | படம் பாக்கறதுக்கே ஒரு மோட்டிவேசன் வேணும் போலயே..!

Johnson

சிகை அலங்கார கலைஞராக ஆசைப்படும், இளைஞன் வாழ்வில் நடப்பவையே கதை.

கதிர் (ஆர் ஜே பாலாஜி) சிறுவயதில் இருந்தே ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக ஆசைப்படுகிறார். அதே ஊரில் சலூன் வைத்திருக்கும் சாச்சா (லால்) அவரை உற்சாகப்படுத்தி வித்தையை கற்றுக்கொடுக்கிறார். பள்ளிப்படிப்பு முடிந்த பின், ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகும் விருப்பத்தை தந்தையிடம் சொல்கிறான் கதிர். ஆனால் தந்தையின் வற்புறுத்தலால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஹேர் ஸ்டைல்ஸ்ட் ஆக முயற்சி செய்கிறார். பெரிய அளவில் ஒரு சலூனை சொந்தமாக திறக்க விரும்புகிறார். அதற்கு வரும் தடைகள் என்ன? தன் கனவை சாதித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

இயக்குநர் கோகுல் தனது Silly Comedyகளுக்கு பெயர் பெற்றவர். அதில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் மூலம் வெற்றியடைந்தார், 'ஜூங்கா'வில் சறுக்கினார். சிங்கப்பூர் சலூன் படத்திலும் அது போன்ற சில காமெடிகள் இருந்தாலும், முழு படமாக ஈர்க்கவில்லை.

படத்தின் ஒரு பாசிட்டிவ் விஷயம், இல்லை படத்தின் ஒரே ஒரு பாசிட்டிவ் விஷயம் சத்யராஜ். முழுக்க வித்தியாசமான கதாப்பாத்திரம், டயலாக் மாடுலேஷன் என எல்லாவற்றிலும், அசத்துகிறார். படத்தில் நாம் சிரிக்க ஒரே காரணம் சத்யராஜ் மட்டும் தான்.

மற்ற நடிகர்கள் யாரும் கவரவில்லை. ஆர் ஜே பாலாஜிக்கு படம் முழுக்க சீரியஸ் ரோல். ஆனால் அந்த எமோசன்களை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். மீனாட்சி சௌத்ரி நடிப்பே வராமல் திக்கித் திணறுகிறார். ரோபோ சங்கர் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். லோகேஷ் கனகராஜ், ஜீவா கெஸ்ட் ரோல் மிக போலித்தனமாக இருக்க, அரவிந்த் சுவாமியின் மோட்டிவேஷனால் க்ளாஸ் ஓகே ரகம். அதிலும் கூட வண்டு தான் பூவ தேடி போகணும், பூ வண்ட தேடி போகக் கூடாது போன்ற வசனங்கள் கொஞ்சம் ஓவர் டோஸ்.

இந்தப் படத்தின் முதன்மை பிரச்னையே படம் சரியாக எழுதப்படாததுதான். கதிர் கதாபாத்திரம் தான் கதை சொல்ல துவங்குகிறது. அந்தக் கதையில் அவரின் சிறுவயது நட்பு, சலூன் சாச்சா அறிமுகம் போன்றவை ஓகே. ஆனால் நிலா - கதிர் பற்றிய டியூஷன் காட்சிகளும் சரி, கதிரின் இளம் வயது கதாபாத்திரமாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பும் சரி எரிச்சலைக் கிளப்பும் படி இருக்கிறது.

முதல் பாதி, சத்யராஜ் புண்ணியத்தில் கரையேற, இரண்டாம் பாதி ஒரு குறிக்கோளும் இன்றி அலைகிறது. மழை வெள்ளத்தில் ஒரு கட்டிடம் உடைந்து விழுவது, ஒரு டான்ஸ் ரியலிட்டி ஷோ, ஒரு நிலத்தில் இருந்து விரட்டப்படும் மக்கள் இன்னொரு இடத்தில் குடி பெயர்வது, கிளிகள் வாழ்ந்த ஆலமரத்தின் கதை, சலூனைக் காப்பாற்ற நடக்கும் சோஷியல் மீடியா போராட்டம் என கன்னா பின்னாவென கதை செல்கிறது. இவை எல்லாம் இயல்பாக இல்லாமல் மிக செயற்கையாக இருப்பது தான் பிரச்னை. மேலும் கதையை வளைத்து நெளித்து நம்மை சோதிக்கிறார்கள்.


சில வராங்களுக்கு முன்பு அன்னபூரணி படம் வெளியானது, அதுவுமே சாதனையாளராக விரும்பும் ஒருவரின் கதைதான். சிங்கப்பூர் சலூனிலும் அதே போன்ற கதைதான். இதில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை விட, எப்படி ஆனார்கள் என்ற பயணம் வலுவாக இருக்க வேண்டும். அது மிஸ் ஆவதால் படமும் நமக்கு ஒட்டாமல் போகிறது.


ஒரு மோட்டிவேஷனால் திரைப்படம் என்றால் போதும் என்பவர்களுக்கு படம் திருப்தி அளிக்கலாம்.