மூவரின் அதிகாரப் போட்டிக்கு இடையே வாழ்க்கையை தொலைக்கும் நண்பர்களின் கதை!
தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் வேலாம்பாளையத்தில் வசிக்கும் நண்பர்கள் உதயா (ஷேன் நிகம்), குமார் (சாந்தனு), ரமேஷ் (சிவா ஹரிஹரன்), வினோத் (ஜேக்சன் ஜான்சன்). பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழு மூலம் சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்கள். அப்படியான போட்டி ஒன்றில் பொற்றாமரை டீமுடன் நடக்கும் போட்டியில் பஞ்சமி ரைடர்ஸ் ஜெயிக்க, அதன் விளைவாக இரண்டு குழுவுக்கும் சண்டையாகிறது. இதை பேசி தீர்க்க பொற்றாமரை அணியின் உரிமையாளர் பைரவனை (செல்வராகவன்) சந்திக்க செல்கிறார்கள் உதயா மற்றும் நண்பர்கள். அந்த சந்திப்புக்கு பின் இவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது? மேலும் சோடா பாபு (அல்போன்ஸ் புத்ரன்), ஜி மா (பூர்ணிமா இந்திரஜித்) மற்றும் பைரவன் இடையே கந்துவட்டி தொழிலில் அதிகாரப் போட்டியால் யார் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்கிறது மீதிக்கதை.
கதியற்றவர்களை அதிகாரம் எப்படி பயன்படுத்திக் கொள்ளும், எளிய மனிதர்கள் தங்களை பயன்படுத்துபவர்கள் யார்? ஆதரவு தருவது யார் என்ற வித்தியாசம் தெரியாமல் பகடையாய் சிக்கிக் கொள்வது பற்றி பேச நினைத்திருக்கிறார் இயக்குநர் உன்னி சிவலிங்கம்.
ஷேன் நிகம் தன் நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கிறார். ஜாலியாக சுற்றுவது, காதலியை தூரத்திலிருந்து பார்ப்பது, தன்னை சுற்றி நடப்பது புரியாமல் குழம்புவது என பல உணர்ச்சிகளை அழகாக வெளிக்காட்டுகிறார். சாந்தனுவுக்கும் ஒரு நல்ல ரோல், அதனை முடிந்த வரை நன்றாக நடித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்து கவனிக்கும்படியான வேடம் செல்வராகவனுடையது. சாந்தமாக பேசும் கொடூர வில்லன் ரோல். கச்சிதமாக அவருக்கு பொருந்திப் போகிறது. கடனை செலுத்தாதவர்களை அழைத்து வந்து பேசும் காட்சிகள் சிறப்பு. இவர்கள் தவிர மற்ற யாருக்கும் அழுத்தமான வேடமே இல்லை. ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ராணி, அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா என அத்தனை பேருக்கும் டம்மியான வேடமே கொடுக்கப்பட்டுள்ளது.
படு பலவீனமாக நகரும் திரைக்கதையை ஓரளவு சூடு பிடிக்க வைப்பதே சாய் அப்யங்கர் பின்னணி இசைதான். மேலும் சாலக்காரி பாட்டும் ரசிக்க வைக்கிறது. அலெக்ஸ் ஜெ புல்லிகல் ஒளிப்பதிவு விறுவிறுப்பை சேர்க்கிறது. சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக வடிவமைத்துள்ளனர் ஆக்ஷன் சந்தோஷ், விக்கி.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் படத்தின் முதல்பாதி சற்றே ஆவலை தூண்டும்படி, இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் நகர்கிறது. முதலில் இதில் முதன்மை பாத்திரங்களான, ஷேன் மற்றும் அவர்களது நோக்கம் என்ன? அவர்களுக்கு என்ன தேவை என்பதில் எந்த தெளிவும் இல்லை. எனவே அவர்கள் கபடியில் ஜெயித்தாலோ, அவர்களை யாராவது கொலை செய்ய துரத்தினாலோ என எது நடந்தாலும் நம்மால் எந்த பாதிப்பையும் உணர முடியவில்லை.
சாந்தனு பாத்திரத்திலும் எந்த தெளிவும் இல்லை. அவர் எதற்காக தனக்கு தெரிந்த விஷயத்தை நண்பனிடம் சொல்லவில்லை, அவர்களுக்குள் நடக்கும் தவறான புரிதல் என எதுவுமே ஏற்கும்படி இல்லை. வில்லன் ஒருவர் பேங்க் திறப்பது, ஹீரோயினுக்கு அண்ணன் இருப்பதே தெரியாத ஹீரோ, இன்னொரு நபரின் காரை காரணம் இல்லாமல் பிடித்து வைத்துக் கொள்ளும் வில்லன், க்ளைமாக்சில் எதிராளியுடன் காரணமில்லாமல் கைகோர்க்கும் நபர் என படம் முழுக்க ஒரே குழப்பங்கள் மட்டும் தான் இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக புதுமைகள், லாஜிக்குகள் இல்லாமல், ஒரு மேலோட்டமான ஆக்ஷன் படமாக மட்டுமே மிஞ்சுகிறது இந்த `பல்டி'.