இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியைத் தேடும் படலமே `வதந்தி 2'
மதுரையில் மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் எட்டு வழிச்சாலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு குழி தோண்டும்போது, மண்ணிலிருந்து எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. ஒட்டுமொத்த மீடியாவும் குழுமி இருந்த நிகழ்வு, மத்திய அமைச்சர் இருந்தது எல்லாம் சேர்ந்து பெரிய பிரச்னையாக இது வெடிக்கிறது. படம்பத்தூரில் SI ஆக இருக்கிறார் மூஸா ராசா (சசிகுமார்). இவரின் உயர் அதிகாரி ரத்திகா (அனகா).
மதுரையில் கிடைத்த மனித எலும்புகள் யாருடையது எனக் கண்டுபிடிக்கும் பொறுப்பு சசிகுமாருக்கு வழங்கப்படுகிறது. அதனுடைய விசாரணை சிறையிலிருக்கும் முடக்கத்தான் மணியை நோக்கி சசிகுமாரை கொண்டு செல்கிறது. இதற்கு அடுத்து என்ன நடக்கிறது? அந்த எலும்புகள் யாருடையது? அது கொலையா என்பதை எல்லாம் சொல்கிறது இந்த வதந்தி 2.
ஒரு இன்வட்ஸ்டிகேஷன் த்ரில்லராக முடிந்தவரை சுவாரஸ்யமாக இதனை கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ். ஒரு வழக்கு, அதன் விசாரணை, அதில் எதிர்பாராத திருப்பங்கள் என மிக வழக்கமாகவே இருந்தாலும் ஓர் அழுத்தமான போலீஸ் procedural dramaவாக கவனம் ஈர்க்கிறது.
சசிக்குமார் ஓர் அமைதியான போலீஸாக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதனாலேயே அந்தப் பாத்திரத்தின் மேல் ஒரு நம்பகத்தன்மை கொண்டு வருகிறார். உயர் அதிகாரியாக அனகா அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விவேக் பிரசன்னா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். முடக்கத்தான் மணி, ரேவதி ஷர்மா, ராஜ்குமார், ஜெயகுமார் எல்லோருமே சிறப்பான நடிப்பு.
சீரிஸ் கையாளும் அந்த மைய வழக்கு பற்றிய விசாரணைகள் பரபரப்பாக இல்லை என்றாலும், தாடி எடுக்க மறுக்கும் காவலதிகாரி, டீக்கடைதான் ராசி என அங்கு அமர்ந்து விசாரிக்கும் போலீஸ், எந்த ரிசல்ட் என்றாலும் தானே பரிசோதனை செய்து தருவேன் எனச் சொல்லும் Forensic நிபுணர் என சுவாரஸ்யமான பல பாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்து நம் கவனத்தை வேறுபக்கம் என்கேஜ்ட் ஆக வைத்திருக்கிறார்கள். கொலை நடந்ததற்கான காரணம் இதுதான் என்பதை எங்கும் நாம் யூகிக்க முடியாதபடி கொண்டு சென்றதும், அத டிவிஸ்ட் மிக இயல்பாக கதைக்குள் அமைக்கப்பட்டிருந்த விதமும் கச்சிதமாக இருந்தது. புதிதாக காதலிப்பவர் துவங்கி வெவ்வேறு விதமாக ஜோடிகள் வரை ஆண் - பெண் உறவு சிக்கல்களையும் அழகாக கதைக்குள் இணைத்திருந்த விதம் சிறப்பு.
சைமன் கிங் பின்னணி இசை படத்தின் மர்மமான உணர்வுக்கு வலு சேர்க்கிறது. சரவணன் ராமசாமி எந்த சமரசமும் இல்லாமல் ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த சீரிஸில் இருக்கும் சில குறைகள் என்று எடுத்துக் கொண்டால், மைய கதையில் இருக்கும் திருப்பம் தவிர, வழக்கில் காட்டப்படும் மற்ற திருப்பங்கள் எல்லாம் வெறுமனே ட்விஸ்ட்க்காக வைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. தனித்தனியாக அந்த ட்விஸ்ட்கள் சிறப்பாக இருந்தாலும், அந்தக் கதை ஓட்டத்தோடு பெரியதாகப் பொருந்தவில்லை. கூடவே, ஒரு காவலதிகாரி எடுக்கும் வீடியோ, காட்டன் வைத்து வரும் ட்விஸ்ட் எல்லாம் ரொம்பவே ஓவராக இருந்தது. சில விஷயங்களை நமக்குச் சொல்லிவிட்ட பின்னரும் காட்சிகளாக அதனை விவரித்த விதம் தேவையற்றதாக இருந்தது. முக்கியமான கட்டத்தில் வரும் ஓர் அதிகாரி, முழுக்க முழுக்க சசிகுமார், அனகாவுக்கு ஆதரவாக இருப்பது ஏன் என்ற தெளிவு இன்னும் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு Binge Watch-க்கு ஏற்ற ஒரு சீரிஸ்தான் இந்த `வதந்தி 2'. கதையில் இருக்கும் வயலன்ஸை மனதில் வைத்துக்கொண்டு பார்க்கவும்.