REBEL REVIEW
REBEL REVIEW Twitter
திரை விமர்சனம்

REBEL REVIEW | சோதிக்கும் முதல் பாதி... வேகமெடுத்த 2-ம் பாதி... ஆனாலும் இது மிஸ்ஸிங்!

Johnson

படத்தின் கதை 80களில் துவங்குகிறது. மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ் குமார்). அவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைத்திருக்கிறது. அது போன்று பல குடும்பங்கள் இதே வறுமை பின்னணியில் வாழ்கிறது.

அவர்களின் வாழ்வை மாற்றும் நம்பிக்கையாக இருப்பது கல்வி ஒன்றே. வறுமையிலும் நன்றாக படிக்கும் பல மாணவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அப்படி அந்த கல்லூரியில் சில தமிழ் மாணவர்கள் சேர, அந்தக் கூட்டத்தில் தன் நண்பன் செல்வாராஜுடன் (ஆதித்யா பாஸ்கர்) இணைகிறார் கதிர்.

உள்ளே நுழைந்ததும் அங்கே KSQ மற்றும் SFY என இரு மாணவ சங்கங்கள்தான் மொத்த கல்லூரியை ஆள்கிறது எனத் தெரிய வருகிறது. அதிலும் பதவியில் இருக்கும் KSQ பல அட்டகாசங்களை செய்கிறது. குறிப்பாக தமிழ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் வதைக்கிறது. இதனால் ஏற்படும் இழப்பு ஒன்றுக்குப் பிறகு, கேரள மாணவ சங்கங்களை எதிர்க்கிறார் கதிர். அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதே கதை.

இயக்குநர் நிகேஷின் சில ஐடியாக்கள் சுராவஸ்யமாக செய்யப்பட்டிருந்தது. இடைவேளை முடிந்தவுடன் வரும் ஒரு காட்சி, கல்லூரி தேர்தலுக்கான பிரசாரத்திற்கு செய்யும் விஷயங்கள் போன்றவற்றில் `அட’ போட வைக்கிறார். பதவிக்காக எப்படி எல்லாம் மாறுவார்கள், எதிர் எதிர் அணிகள் எப்படி கைகோர்த்துக் கொள்ளும் என்பதைக் காட்டிய விதமும் சிறப்பு. படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி சற்றே விறுவிறுவென நகர்கிறது.

நடிப்பு பொறுத்தவரை நடிகர்கள் அனைவரும் உப்பு தேவையான அளவு என்ற Mode லேயே நடித்திருக்கிறார்கள். ஜி வி பிரகாஷ் வழக்கமாக எப்படி நடிப்பாரோ அதே நடிப்பை இதிலும் கொடுத்திருக்கிறார். சில காட்சிகளுக்கு அது போதுமானதாக இருந்தாலும், பல முக்கியமான காட்சிகளுக்கு அது போதுமானதாக இல்லை. ஆக்ரோஷமாக பேசும் போது, தன் கூட்டத்தின் முன்பு நின்று உணர்ச்சிகரமாக பேசுவது போன்ற இடங்களில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

ஆண்டனியாக நடித்திருக்கும் வெங்கிடேஷ், சார்லியாக நடித்திருக்கும் ஷாலு ரஹிம் ஆகிய இருவரும் வெறுப்பேற்றும் காலேஜ் சீனியர்ஸ் டெம்ப்ளேடிலேயே இருப்பதால், வழக்கமான வில்லன்களாகவே வருகிறார்கள். மமிதா பைஜூ, அவர் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்தாலும், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாததால், குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. ஆதித்யா பாஸ்கருக்கு ஒரு எமோஷனலான காட்சி ஒன்று வருகிறது, அதை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். இவர்கள் தவிர கருணாஸ், சுப்ரமணியம் சிவா, ஆதிரா, கல்லூரி வினோத், ஆண்டனி எனப் பலரும் வந்து, மிக வழக்கமான ஒரு நடிப்பை தருகிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். படத்தின் மாஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகளை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். யுவராஜின் கலை இயக்கமும் படத்திற்கான நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது. ஜிவி பிரகாஷ், சித்துகுமார் இசையில் பாடல்கள் மற்றும் Ofroவின் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. அதிலும் R E B E... R E B E... R E B E L என்ற ட்ராக் ரொம்பவும் சோதிக்கிறது.

இப்படத்தின் குறைகள், படம் சரியாக, தெளிவாக எழுதப்படாததுதான். இப்படி ஒரு கதையை இப்போது சொல்ல வேண்டியதின் அவசியம் என்ன? என்ற காரணம் படத்தில் இல்லை. அல்லது அது தெளிவாக சொல்லப்படவில்லை. இது நிஜமாக நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது.

வெறும் நிஜ சம்பவம் என்பதைத் தாண்டி, அதில் உள்ள சுவாரஸ்யமான கூறோ, அல்லது நமக்கு புதிய சிந்தனையைத் தூண்டும் விஷயங்களோ இருக்கும் போதுதான் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இதில் அப்படியான எதுவும் இல்லை என்பதுதான் சிக்கல். பதவியும், சுற்றி இருக்கும் கூட்டமும் மனிதனை எப்படி மடைமாற்றுகிறது என்பதையோ, ஒடுக்குமுறையை பின்னின்று இயக்கும் அரசியலையோ பற்றியோ தெளிவாகச் சொல்லாமல், வெறுமனே பொத்தாம் பொதுவாக ஒரு குழுவை குறை சொல்வது மட்டும் தான் படத்தில் இருக்கிறது.

படத்தின் துவக்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாய் இருந்த நிலை, வேறு வேறு வடிவத்தில் தொடர்கிறது என வாய்ஸ் ஓவரில் சொல்லப்படுகிறது. பின் ஜி வி பிரகாஷ் வாய்ஸ் ஓவரில் அதே ஒடுக்குமுறை குறித்து சொல்லப்படுகிறது. ஆனால் படம் துவங்கி சில நிமிடங்களிலேயே அவை எல்லாம் அரசியல் தன்மையற்று, வெறுமனே தமிழர், தமிழர் என மட்டும் பேசும் அளவில் கருத்துகள் குறுகிவிடுகிறது.

நாயகனுக்கு வைக்கப்படும் ஸ்லோ மோஷன் காட்சிகளும், எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாய் அவர் ஒருவரையே முன்வைப்பதும், படம் பேசும் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான திசையில் இருக்கிறது. வில்லன்கள் பின்னால் பத்து அடியாட்கள் வருவது போல், ஹீரோவுக்கு பின்னும் வருகிறார்கள் அவ்வளவே. இவை எல்லாம் தாண்டி படம் முடிக்கப்பட்ட விதமும், அப்போது டெக்ஸ்ட் கார்டு போட்டு வரும் வாய்ஸ் ஓவரும் நகைப்புக்குரியதாக இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு முழுமையற்ற படத்தை பார்த்த உணர்வே எஞ்சுகிறது. நாம் பல படங்களில் பார்த்து சலித்த விஷயங்களும், திருப்பங்களும் என நகரும் முதல் பாதி, சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவென்றாலும் பரபரவென நகரும் இரண்டாம் பாதியும் இருக்கிறது. எனவே, கச்சிதமான எழுத்தோ, தெளிவான கருத்தோ இல்லை என்றாலும் பரவாயில்லை என்றால், ரெபல் உங்களுக்கானவன்.