தீவிரவாத கும்பலை அழிக்க இந்தியா நடத்தும் ஆப்ரேஷனே `Dhurandhar'
1999ல் கந்தகரில் விமான கடத்தல், 2001ல் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் ஆகியவை நடந்த பின், இந்திய உளவுத்துறை அதிகாரி அஜய் சன்யால் (மாதவன்) ஆப்ரேஷன் துரந்தரை அமல்படுத்துகிறார். இதேவேளையில் பாகிஸ்தானின் கராச்சிக்கு வந்து சேர்கிறார் ஹம்சா (ரன்வீர் சிங்). உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கையை நடத்துகிறார். லயாரி பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரெஹ்மான் (அக்ஷய் கண்ணா) மகனை ஒரு தாக்குதலில் இருந்து ஹம்சா காப்பாற்ற, ரெஹ்மானின் குழுவில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கும்பலில் இணைந்து ரெஹ்மானின் எதிரிகளை அழிப்பது, தீவிரவாத தாக்குதல்களுக்கு உதவுவது என அந்தக் குழுவின் முக்கியமான நபராக மாறுகிறார். உள்ளூர் அரசியல் பிரச்சனையின் காரணமாக ரெஹ்மானை கொலை செய்ய துடிக்கிறார் அஸ்லாம் (சஞ்சய் தத்). இதன் பின் என்ன ஆகிறது? ஆப்ரேஷன் துரந்தர் என்ன ஆகிறது? என்பதெல்லாம் தான் இதன் மீதிக்கதை.
1999 - 2009 காலகட்டத்துக்கும் நடந்த வெவ்வேறு தீவிரவாத தாக்குதல்களை களமாக எடுத்துக் கொண்டு அதை வைத்து ஒரு ஸ்பை த்ரில்லர் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா தர். புதிதாக எதுவும் இல்லை என்றாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
லீட் ரோலில் நடித்துள்ள ரன்வீர் சிங் ஆக்ஷன், எமோஷனலான காட்சிகள், ரொமான்ஸ் என அனைத்திலும் அசத்துகிறார். க்ரேஷ் ஷேட் உள்ள பாத்திரத்தை வெளிக்காட்டும் ஒவ்வொரு இடமும் படு கச்சிதம். அடுத்ததாக ஈர்ப்பது அக்ஷய் கண்ணா. கொடூரமான நபராக வருவது, வில்லத்தனமான சிரிப்பது என கவர்கிறார். ஜெமீல் பாத்திரத்தில் வரும் ராகேஷ் பேடி நடிப்பும் கவனிக்க வைத்தது. இக்பால் ரோலில் வரும் அர்ஜூன் ராம்பால் செய்யும் வேலைகள் கொடூரமாக இருந்தாலும் அவருக்கு பொருந்தாத ஒட்டுதாடி படு காமெடியாக இருக்கிறது. கெஸ்ட் ரோலில் வரும் மாதவன், சஞ்சய் தத் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக முடித்திருக்கிறார்கள். ரன்வீர் ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள சாரா அர்ஜூன் நடிப்பில் குறை ஏதும் இல்லை.
டெக்னிகலாக சிறு குறைகூட இருக்கக்கூடாது என கடுமையாக உழைத்திருக்கிறது படக்குழு. அதிலும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையையும் தான் முதலில் சொல்ல வேண்டியது. ஷாஸ்வத் சச்தேவ் தனது இசையின் மூலம் இப்படத்திற்கு அதிரடி எனர்ஜியை சேர்த்திருக்கிறார். அதிலும் துரந்தர் டைட்டில் ட்ராக் ஃபயர். விகாஷ் நவ்லோகா ஒளிப்பதிவு, படத்திலிருக்கும் தீவிரத்தன்மையை கடத்தும் படி காட்சிகளை கொடுத்திருக்கிறது. சிதறும் உடல்களும், உடையும் எலும்புகளும், தெறிக்கும் ரத்தமும் என எல்லாம் நிஜத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என கலை இயக்குநர் குழுவும் வெறித்தனமாய் வேலை பார்த்திருக்கிறார்கள். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், படத்தின் வன்முறைக்காக A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குரூரமான பல காட்சிகள் படத்தில் உண்டு.
ஒரு படமாக இதன் குறைகளாக சொல்வதென்றால், விறுவிறுப்பாக செல்கிறது என்பதை தாண்டி படத்தில் புதிதாக என எதுவும் கிடையாது. ஹீரோவுக்கு ஆபத்து எதுவும் வருமோ என்ற பயம் துளியும் நமக்கு வரவில்லை என்பதால். ஒரு சூப்பர் ஹீரோ படம் போல மிக ரிலாக்ஸ் மோடில் தான் படத்தை பார்க்கிறோம்.
கருத்தியல் ரீதியாக படத்தின் குறைகளாக சொல்வதென்றால், மீண்டும் இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் அல்லது நிலவி வரும் இஸ்லாமிய வெறுப்பை நீடித்திருக்க வைக்கும் ஒரு முயற்சியாக தான் இப்படத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. மேலும் இயக்குநர் ஆதித்யா தர் இப்படியான படம் இயக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே Uri: The Surgical Strike என்ற படத்திலும் இதே வேலையை செய்திருந்தார். கந்தகரில் விமான கடத்தல், தாஜ் தாக்குதல் என உலகில் நடந்த பல தாக்குதல்களை ஒரு `ஷோ ரீல்' மாதிரி போட்டுக் காண்பிப்பது, அதிலும் தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஆடியோவை ஓடவிடுவது என எல்லை மீறி செல்வது, இந்தப் படத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. நடந்த நிகழ்வுகளை சார்ந்த புனைவுக் கதை என படத்தின் துவக்கத்தில் ஒரு ஸ்லைடை திரையிடுவதால், படக்குழு தன் பொறுப்புகள் அனைத்தையும் கைகழுவி விடுகிறது. ஆனால் சொல்லப்படும் விஷயங்களில் எது நிஜம், எது புனைவு என பார்வையாளர்களுக்கு எப்படி சொல்வீர்கள்?
மொத்தத்தில் இந்த `Dhurandhar' மேலோட்டமாக ஒரு அதிரடி ஸ்பை த்ரில்லர் படம் என்றாலும், Based on a True Events என்ற போர்வையில் வந்திருக்கும் மோசமான வெறுப்பு பிரச்சார படமே!