Ram Charan Peddi Review
திரை விமர்சனம்

கிரிக்கெட் + மல்யுத்தம் என்ன சொல்கிறான் 'பெத்தி'? | Peddi Review | Ram Charan | Janhvi Kapoor

விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, அதற்குள் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு தவறு என்பது பற்றியும், அடையாளத்தை உருவாக்குவதையும் பற்றியும் பேசி இருக்கிறார் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா.

Johnson

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடும் இளைஞனின் கதை!

கூலி வேலை செய்வதைப்போல, கூலிக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டவர் பெத்தி (ராம் சரண்). ஊர் பெயர்கூட இல்லாத ஒரு மலைக்கிராமத்தைச் சேர்ந்த பெத்தியும், அவரின் ஊர் மக்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல். அதே மலைப்பாதையில் தினமும் ரயில் சென்றாலும், இம்மக்களுக்காக அந்த ரயில் நிற்காது, வெளியூர் சென்றுவர ஆபத்தான மலைப்பாதையை கடந்துதான் செல்ல வேண்டும்.

Peddi

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய முயன்று தன் உயிரையே விடுகிறார் அப்பளசூரி (ஜெகபதி பாபு). அதுவரை வாழ்க்கையில் விளையாட்டுத்தனமாக இருந்த பெத்தி, தங்கள் ஊருக்கு மாற்றத்தைக் கொண்டுவர கிளம்புகிறார். அவர் என்ன செய்தார்? அவர் எண்ணம் நிறைவேறியதா என்பதெல்லாம்தான் பெத்தியின் மீதிக்கதை.

விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, அதற்குள் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு தவறு என்பது பற்றியும், அடையாளத்தை உருவாக்குவதையும் பற்றியும் பேசி இருக்கிறார் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா.

Janhvi Kapoor

நடிப்பாகச் சொல்வதென்றால் ராம் சரண், பெத்தி பாத்திரத்தில் மிக கம்பீரமாக வருகிறார். முதல் பாதியில் விளையாட்டுத்தனமான இளைஞர், இரண்டாம் பாதியில் சீரியஸான நபர் என இரு வேறு மாறுபாடுகளை முடிந்த அளவு திரையில் கொண்டுவருகிறார். சண்டைக் காட்சிகள், கிரிக்கெட், மல்யுத்தப் போட்டிகள், நடனம் என என்டர்டைன்மெண்ட் விஷயங்களில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்பளசூரி என்ற பாத்திரத்தில் ஓர் அழுத்தமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் ஜெகபதி பாபு. மல்யுத்த குருவாக வரும் சிவராஜ்குமாருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், வரக்கூடிய காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். திவ்யந்து, ஜான் விஜய், அஜய் கோஷ் ஆகியோருக்கு மிக வழக்கமான வில்லன் வேடம். நாயகியாக ஜான்வி கபூருக்கு படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் இந்தக் கதைக்கு தேவையே இல்லை.

தொழில்நுட்ப ரீதியில் ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு படத்தை மிக நேர்த்தியாகக் கொடுக்க முயன்றிருக்கிறார். போட்டிகள், பாடல்கள், சண்டைக் காட்சி, மல்யுத்தம் சார்ந்த காட்சிகள் என படத்திற்கு வலு சேர்க்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிக்கிரி, மஸா மஸா பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசையை ஓய்வே இல்லாமல் படம் முழுக்க ஒலிக்கவிட்டிருப்பது சோர்வளிக்கிறது.

Peddi

சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேசி இருப்பதும், ஒருவரின் திறமை என்பது பெருமைக்குரியது அல்ல, அந்த திறமையால் நடக்கும் நன்மைகளே முக்கியம் என்பதைக் குறிப்பிட்ட விதமும் சிறப்பு. ஆனால் சாதிய எதிர்ப்பை மிக மேம்போக்காகக் காட்டிவிட்டு நகர்வது அவ்வளவு சரியானதாக இல்லை. மேலும் படத்தில் நீதி நியாயம் பேசும் இயக்குநர், ஜான்வி கபூர் பாத்திரத்தை வடிவமைத்த விதமும், அவரைக் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருந்ததும் மிகவும் மலினமாக உள்ளது.

படமாகவும் மிகச் சலிப்படைய வைக்கும் ஒரு திரைக்கதையாக நகர்கிறது படம். எந்த இடத்திலும் ஒரு சுவாரஸ்யமா, புதுமையோ இல்லாமல் செக்கு மாடு மாதிரி ஒரே இடத்தில் சுற்றுகிறது. மூன்று மணிநேரங்களுக்கு அதிகமாக ஓடும் படத்தின் நீளம் பெரிய மைனஸ். புஜ்ஜி பாபுவின் முதல் படம் `உப்பேனா' படம்போல இதிலும் ஓர் அதிர்ச்சியான டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார். ஆனால், அதனால் நமக்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை. முதல் பாதி வரை ஓரளவு சுவாரஸ்யமாக போகும் படம், இரண்டாம் பாதியில், திடீரென காணாமல் போகும் பாத்திரங்கள், திடீரென திருந்தும் வில்லன்கள், லாஜிக்கே இல்லாத கதை என நம் பொறுமையைச் சோதிக்கிறது. பொம்மன் இராணி கதாபாத்திரத்துக்குச் சொல்லப்படுவதாக, இந்தக் கதை மொத்தத்தையும் நமக்குச் சொல்லும் உத்தி அயர்ச்சியைத் தருகிறது.

Ram Charan

மொத்தத்தில் தடுமாறும் கதைக்களத்திலும், இலக்கற்ற திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் சிக்ஸர் அடித்திருப்பான் இந்த பெத்தி!