Priyanka Mohan Made in Korea
திரை விமர்சனம்

இந்த கொரியன் டூரில், எமோஷன் மட்டும் மிஸ்ஸிங்... | Made in Korea Review | Priyanka Mohan

முதன்மை பாத்திரமான செம்பாவாக நடித்துள்ள ப்ரியங்கா மோகன், காதலன் மன்னிப்பு கேட்க வரும் ஒரு காட்சியில் மட்டும் நல்ல அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்.

Johnson

கொளப்பலூர் to கொரியா செல்லும் ஒரு பெண்ணின் பயணமே கதை

செம்பா (ப்ரியங்கா அருள் மோகன்), சிறு வயதிலேயே, செம்பவளம் என்ற வரலாற்று பாத்திரம் மூலம் உந்தப்பட்டு, கொரியா மீது அதீத ஆர்வம் கொண்டு வளர்கிறாள். எப்படியாவது கொரியாவுக்கு சென்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயல்கிறார். ஒரு பக்கம் செம்பாவின் அப்பா, தன்னுடைய சின்ன உணவகத்தை தன் மகளிடம் ஒப்படைக்க வேண்டும் என முயல்கிறார், இன்னொரு பக்கம் செம்பா தன் காதலன் மணியிடம்  (ரிஷிகாந்த்) தங்கள் காதல் பற்றி தன் தந்தையிடம் பேச சொல்கிறாள். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் எதிர்பாராத ஒரு சூழலால் செம்பா மட்டும் தனியாய் கொரியா செல்லும்படி ஆகிறது. அதன் பின் என்ன நேர்ந்தது? என்பதை சொல்கிறது `மேட் இன் கொரியா'.

புதிய நிலத்தை பற்றியும் அதன் கலாச்சாரங்கள் பற்றியும் பேச நினைத்திருக்கிறார் இயக்குநர் ரா கார்த்திக். அந்நிலத்தை பதிவு செய்த விதத்தில் பாதி கிணறும் தாண்டி இருக்கிறார்.

Priyanka Mohan

முதன்மை பாத்திரமான செம்பாவாக நடித்துள்ள ப்ரியங்கா மோகன், காதலன் மன்னிப்பு கேட்க வரும் ஒரு காட்சியில் மட்டும் நல்ல அழுத்தமான நடிப்பை வழங்குகிறார். ஆனால் காதலரிடம் திருமணம் குறித்து பேசுவது, தந்தையை எதிர்கொள்வது, பணியிடத்தில் ஒரு முக்கியமான சிக்கலில் மாட்டுவது என படத்தின் மிக முக்கியமான பல காட்சிகளில் அவர் நடிப்பு பலம் சேர்ப்பதாக இல்லை. உடல்நிலை சரியில்லாமல் நடிப்பது, பின்னர் உற்சாகமாக கடைவீதிகளில் பயணிப்பது என இருவேறு விதங்களில் நடிக்கும் Park Hye-jin நடிப்பு பொருத்தமாக இருக்கிறது. இவர்கள் தவிர செம்பாவின் நண்பர்களாக இணையும் கொரிய நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை பக்காவாக முடிக்கிறார்கள். காதலராக வரும் ரிஷிகாந்த், நண்பராக வரும் ஜென்சன், அப்பாவாக திருநாவுக்கரசு ஆகியோர் ஒரு டெம்பிளேட் பாத்திரங்களாக வந்து போகிறார்கள்.

Made In Korea

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு கொளப்பலூர் to கொரியா பயணத்தை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டி இருக்கிறது. ஹேஷம், சைமன் கிங், தரண் என மூவர் இசையமைத்திருந்தாலும் பின்னணி இசையோ பாடல்களோ பெரிதாக ஈர்க்கவில்லை.

இப்படத்தின் சிக்கலே, இதில் சொல்லப்படும் எந்த விஷயங்களும் உணர்வு ரீதியாக நமக்கு கனெக்ட் ஆகவில்லை. முதலில் இப்படத்தின் துவக்கப்புள்ளியான நாயகியின் கொரியா செல்லும் கனவில் எந்த அழுத்தமும் இல்லை. போகணும் அவ்வளவு தான், காரணமெல்லாம் இல்லை என்ற ரீதியில் படத்திலேயே டீல் செய்வதால், நமக்கும் அதில் எந்த உணர்வுப்பூர்வ பிணைப்பும் ஏற்படவில்லை.

Made in Korea

ஹீரோயின் ஏமாற்றப்படுவது, கொரியாவில் வீட்டு வேலை செய்வது, பின்னர் ஹோட்டல் துவங்குவது, திடீரென ஒரு இசைக்குழுவுக்கு உதவுவது என கதை ஒரு கோர்வையே இல்லாமல் கண்ணாபின்னாவென நகர்கிறது.

மொத்தத்தில் புது நிலம் ஒன்றை பதிவு செய்ததில் மட்டும் செலுத்திய கவனத்தை படத்தின் கதை திரைக்கதையில் செலுத்தி இருந்தால், பார்வையாளர்களை கவர்ந்திருக்கும் இந்த `மேட் இன் கொரியா'.