Arjun das | kalidas jayaram
Arjun das | kalidas jayaram POR REVIEW
திரை விமர்சனம்

POR REVIEW | போர் சரி... ஆனா அதுக்கு அப்புறம்..!

Johnson

விரோதியாகும் இரு நண்பர்களின் மோதலே `போர்’

புதுச்சேரியின் செயின்ட் மார்டின்ஸ் கல்லூரியில் பிரபு (அர்ஜூன் தாஸ்) இறுதியாண்டு மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். அவரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ரிஷிதா (சஞ்சனா) அதே கல்லூரியில் படிக்கிறார். காயத்ரி (பானு) அதே வளாகத்தில் குரல் என்ற அமைப்பை நடத்தி, சமூக பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிறார். பிரபுவுக்கு காயத்ரி மீது காதல் என்ற ட்ராக்கும் உண்டு. அந்த ஆண்டு புதிதாக கல்லூரியில் இணையும் ஃப்ரெஷ்ஷரில் ஒருவன் யுவா (காளிதாஸ் ஜெயராம்). பிரபு - யுவா இருவருக்கும் பால்ய காலத்தில் நடந்த சம்பவத்தால், நிகழ்காலத்தில் பகை. அந்த பகையைத் தீர்க்க திட்டமிடுகிறார் யுவா. இதே சமயம் கல்லூரியில் நடக்கும் தேர்தலில், அரசியல்வாதியின் வாரிசானா சூர்யா (அம்ருதா) - காயத்ரி இடையில் ஒரு பிரச்சனை எழுகிறது. இந்த இரண்டு பகையும், எப்படி போர் களத்தில் சந்திக்கிறது என்பதே கதை.

பிஜோய் நம்பியார் ஒரு கேம்பஸ் ட்ராமாவில், அதிகார மோதலையும் சேர்த்து கொடுக்க முயற்சித்திருக்கிறார். அது முழுமையான படமாக ரசிக்க முடிந்ததா என்பதுதான் கேள்விக்குறி. நடிப்பு பற்றி குறிப்பிடுகையில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் பொருந்தி இருக்கிறார்கள். கோபப்படுவது, சில இடங்களில் சமாதானமாய் போவது, கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவது என அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். பெண்களிடம் துருதுருவென பேசுவது, அர்ஜூனை பழி தீர்க்க வேண்டும் என மனதுக்குள் கோபத்தை தேக்குவது எனப் பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் காளிதாஸ். பானுவின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அவரது கதாப்பாத்திரத்தில் எந்த அழுத்தமும் இல்லை என்பதால் பெரிய அளவில் கவரவில்லை. இவர்களை எல்லாம் விட தனித்துத் தெரிவது சஞ்சனா நடராஜனின் நடிப்பு. நேசிப்பவர்களின் பிரிவு பற்றி பேசுவது, ஒரு சண்டையின் போது கோபமாய் கத்துவது, காளிதாஸிடம் தழுதழுத்து பேசுவது என அனைத்தும் சிறப்பு.

அறிமுகம், களம், பகை, முரசொலி, மையல், விழா, போர் என ஏழு பகுதிகளாக பிரித்துச் சொல்லப்படும் கதையில், பிரபு - யுவாவின் மோதல், கல்லூரியில் நடக்கும் தேர்தல் என இரண்டையும் சமகோட்டில் நகர்த்திய விதமும் கவனிக்க வைக்கிறது. ஹரீஷ் வெங்கட், சச்சிதாந்தன், கௌரவ் ஆகியோரின் பின்னணி இசை, சஞ்ஜித் ஹெக்டே, த்ரூவ் விஷ்வந்த் ஆகியோரின் இசையில் பாடல்களும் சிறப்பு. ஜிம்ஷித் காலித், ஆஸ்கர் டிசோசா ஒளிப்பதிவில் படத்தின் பல காட்சிகள் அசரடிக்கிறது.

திரைக்கதையாக படம் வலு இன்றி இருப்பதும், சொல்ல வந்த எந்த கருத்திலும் தெளிவின்றி இருப்பதே படத்தின் பிரச்சனை. யுவா தன்னுடைய பால்ய காலத்தில் தனக்கு நேர்ந்ததைக் கூறி, அடந்த வலியை பிரபுவுக்கு ஆயிரம் மடங்கு அதிகமாய் திருப்பித் தருவேன் எனக் கூறுவார். அந்தக் காட்சியில் காளிதாஸின் நடிப்பால் அழுத்தமாகிறது. ஆனால் கோபத்திற்கு காரணமாக சொல்லும் விஷயம் அவ்வளவு அழுத்தமாக இல்லை. ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு பின் நடக்கும் நிகழ்வுகளும் நடிப்பவர்களால் மட்டும் ஒரு நல்ல தருணமாக மாற்றப்படுகிறது. ஆனால் அது படம் முழுமைக்கும் போதியதாக இல்லை.


அரசியல், அதிகார மோதல், சாதிய பாகுபாடு, பெண் மீதான அத்துமீறல், தன் பாலின ஈர்ப்பு, ஆண்களுக்கிடையேயான ஈகோ மோதல் எனப் பலவற்றை படம் பேச முயல்கிறது. ஆனால் அதை மிக மேம்போக்காக பேசுவதால் எந்த ஆழமும் இல்லை. படம் முடித்து வெளிவரும் போது, படம் என்ன சொல்ல வருகிறது என்ற தெளிவு நமக்கும் இல்லை. படத்தில் போதை வஸ்துக்களின் பயன்பாடு, வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக கண்டிப்பாக படம் அடல்ட்ஸ் ஒன்லி.

மொத்தத்தில் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருந்தால் படம் கவர்ந்திருக்கும்.