தந்தை மரணத்தில் ஒரு தர்மசங்கட சிக்கல், அதை எப்படி அக்குடும்பம் சமாளித்தது என்பதே `பெருசு’
சாமிக்கண்ணு (சுனில்), துரை (வைபவ்) இருவரும் ஊரில் நல்ல மரியாதையுடன் இருக்கும் ஆலஸ்யம் (எ) பெருசின் மகன்கள். ஆத்துக்கு குளிக்க சென்று திரும்பி வந்த பெருசு, அதிர்ச்சிகரமாக இறந்துவிடுகிறார். ஆனால், இறந்த பின்னர் தான் அவருக்கு ஒன்று வீருகொண்டு எழுகிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் சங்கடத்தில் நெளிகிறது குடும்பம். சாமிக்கண்ணு, துரையின் அம்மா, சித்தி, மனைவிகள், நண்பன் என ஒவ்வொருவராக வந்து பிணத்தின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள். புரணி பேசுவதை ஃபுல் டைம் வேலையாக பார்க்கும் பக்கத்து வீட்டு கமலாவுக்கோ (ரமா) ஊராருக்கோ இந்த விஷயம் தெரியாமல் கட்டிக் காப்பாற்றி இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். இந்த ப்ராஜெக்ட் `பெருசை’ முடிக்க அக்குடும்பம் படும் பாடுகளும், காமெடி கலாட்டாக்களுமே கதை.
ஆபாசம் ஏதுமின்றி ஒரு அடல்ட் ஃபேமிலி எண்டர்டெய்னரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம். அவர் சிங்களத்தில் இயக்கி பல திரைவிழாக்களில் பாராட்டுகளைப் பெற்ற Tentigo படத்தை, அவரே தமிழில் ரீமேக்கியிருக்கிறார். ஒப்பீட்டளவில் இரு படங்களுக்கும் பல வித்தியாசம். சுருக்கமாகச் சொல்வதென்றால், அது எளிமையான நிகழ்வு என்றால், தமிழில் அது கலர்ஃபுல் திருவிழா. ஆனால் ஒரிஜினலில் படம் கொடுத்த தாக்கம் தமிழில் இருக்கிறதா? என்றால் அதுதான் கேள்விக்குறி. ஒரு வினோதமான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் குடும்பம், அதிலிருந்து தப்பிக்க அடுக்கும் முயற்சிகளில் நடக்கும் காமெடிகள் என வித்தியாசமான களம் என்பதே ஃப்ரெஷ்ஷான ஒன்று. குழப்பத்தில் இருக்கும் அண்ணன், போதையில் மிதக்கும் தம்பி, சப்போர்ட்டுக்கு வரும் நண்பன், ஸ்பை வேலைகள் பார்க்கும் பக்கத்து வீட்டு ஆண்டி கமலா, தொல்லை கொடுக்கும் ஆட்டோகாரர், சந்தேகம் கிளப்பும் சித்தப்பா, சர்ப்ரைஸாக வரும் திடீர் சித்தி, பழிவாங்க காத்திருக்கும் ஏரியா பாய்ஸ் என படம் முழுக்க எக்கச்சக்க பாத்திரங்கள். இத்தனை பேர் இருப்பதால், அவர்கள் செய்யும் ஏதாவது ஒரு விஷயம் நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. நான்கு ஐந்து இடங்கள் வெடி சிரிப்பு கேரண்டி.
நடிப்பு பொறுத்தவரை அண்ணனாக வரும் சுனில் கவனிக்க வைக்கிறார். ஒவ்வொரு பிரச்சனையையும் கையாள்வது, தம்பியை சமாளிக்க முடியாமல் திணறுவது, அப்பாவை நினைத்து எமோஷனலாக பேசுவது என அவருக்கு இவ்வளவு நடிக்க வருமா என ஆச்சர்யப்படுத்துகிறார். பால சரவணன் - முனீஷ்காந்த் கூட்டணி கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கிறது. வைபவ் குடிகாரராக நடிப்பது போல் நடிக்கிறார், நிஹாரிகா, சாந்தினி, தனம், தீபா, ரமா என கதாப்பாத்திரத்துக்கு பொருத்தமில்லா தேர்வுகள் சற்றும் கவரவில்லை. வனிதாமணி கதாப்பாத்திரத்தில் வரும் சுபத்ராவின் காட்சிகள் க்ளைமாக்ஸ் கலாட்டாவுக்கு நன்றாக உதவுகிறது. கருணாகரன், சுவாமிநாதன், விடிவி கணேஷ் ஆகியோரின் கேமியோவில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை.
டெக்னிகலாக சுந்தரமூர்த்தி பின்னணி இசை, சத்ய திலகம் ஒளிப்பதிவு இயல்பை மீறி ஒரு ஃபேண்டசி படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. அது இப்படத்தின் தன்மையை ஓரளவு இயல்பாக்க உதவுகிறது.
படத்தின் பிரச்சனையே எழுத்திலும், உருவாக்கத்திலும் தான். க்ரேஸி மோகன், மௌலி டைப்பில் காமெடிகள் கொண்டு வர நினைப்பது ஓக்கேதான். ஆனால், அதை சுவாரஸ்யமாக கொடுப்பது முக்கியம். மேட்டர், பெருசு, பாயிண்ட் என இரட்டை அர்த்த வசனங்களை வைத்து காமெடி முயற்சித்திருப்பது மிகப்பெரிய மைனஸ். ஒரு நிதானமே இன்றி எல்லா காட்சிகளும் நகர்வதால், சில நல்ல ஜோக் கூட, கவனிக்கப்படாமலே கடக்கின்றன. கதாப்பாத்திரங்களாக நிறையே பேர் இருந்தாலும், சிலர் இந்தக் கதைக்குள் பொருந்தாமலே இருக்கிறார்கள். உதாரணமாக பெருசை பழிவாங்க நினைக்கும் ஒரு கதாப்பாத்திரம், அது சார்ந்த காட்சிகள் மையக் கதைக்கு சற்றும் பொருந்தாதது. மேலும் இறந்து போனவர் நல்லவர், வல்லவர் என சித்தரிக்கும் அனைத்தையும் உடைக்கும் படி காட்சிகள் வைத்திருப்பது ஏன் எனவும் புரியவில்லை. பிணத்தை உட்கார வைப்பது தொடர்பான காட்சிகளும், அர்த்தமற்றவையாகவே இருந்தது. கருணாகரனை வைத்து வரும் செயின் காமெடியும் சுத்தமாக எடுபடவில்லை. இந்த காட்சிகள் படத்தை நாடக மேடை போல் மாற்றிவிடுகின்றன. மேலும் எமோஷனலாக தந்தை - மகன் இடையேயான உறவு நமக்கு கொஞ்சமும் கனெக்ட் ஆகவில்லை என்பதால், மகன்கள் தந்தையைப் பற்றி உணர்வுபூர்வமாக பேசும் போது நம்மை அது கொஞ்சமும் பாதிக்கவில்லை.
மொத்தத்தில் ஒரு மிக சுமாரான காமெடி படமாகவும், மலினமான அடல்ட் காமெடியாகவுமே எஞ்சுகிறது இந்த `பெருசு’.