தூய்மைப் பணியாளரான சாவித்ரி (அபிராமி) தன் மகளை படிக்க வைக்க கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் ஒளிந்து ஒளிந்து வாழ்க்கை நடத்துபவர், அனிதா (பவித்ரா லக்ஷ்மி) - கதிர் (ஷான்) பதிவுத் திருமணத்திற்கு தயாராகிறார்கள். அனிதாவின் தந்தை நாதன், தன் சாதி திமிரில் கொலை வெறியுடன் அவர்களை தேடி கிளம்புகிறார். மேலும், மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவர் (பரத்) எடுக்கும் தவறான முடிவு, திருமணம் என்ற பெயரில் சிறையில் சிக்கிய மனைவி (அஞ்சலி) ஒருவர் எடுக்கும் துணிச்சலான முடிவு இவற்றை எல்லாம் சொல்வதே `Once Upon a Time in Madras'
இயக்குநர் பிரசாத் முருகன் வெவ்வேறு விதமான சிக்கல்களை சுவாரஸ்யமாக பேச நினைத்திருக்கிறார். திருநங்கை சந்திக்கும் பிரச்சனை, தன்பாலின ஈர்ப்பாளரை சமூகம் நடத்தும் விதம், சாதிய வன்மத்தால் ஏற்படும் விபரீதம், சுயநலமாக எடுக்கும் முடிவுக்குப் பின் இருக்கும் விளைவு எனப் பலவற்றையும் கையில் எடுத்திருக்கிறார். துவக்கத்தில் மாங்காய் பறிக்கும் சிறுவனைத் துளைக்கும் தோட்டாவும், அது வெளிவந்த துப்பாக்கியும் என்ன ஆனது என்பது குறித்த அறிமுகம், கண்டிப்பாக ஒரு சுவாரஸ்யமான படம் பார்க்கப் போகிறோம் என நிமிர்ந்து அமர செய்கிறது. மேலும் இயக்குநர் பேச நினைத்த விஷயங்களும் கவனிக்கத் தக்கதாகவே இருந்தது.
ஆனால் அந்த அறிமுகக் கதைக்குப் பின் வரும் காட்சிகளை கையாளும் விதமும், அதில் மிதமிஞ்சி இருக்கும் வழக்கமான சம்பிரதாய விஷயங்களும் படத்தின் மீதான சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. பரத், அபிராமி, அஞ்சலி நாயர், அருள் டி ஷங்கர், கனிகா, கல்கி எனப் பல நடிகர்கள் இருந்தாலும் எதிலும் உயிர்ப்பே இல்லை. தலைவாசல் விஜய் மட்டும் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். மற்றபடி ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதமாகவும் சரி, நடிகர்களின் நடிப்பும் சரி எவ்வித பலமும் சேர்க்கவில்லை.
சமூகப் போராளி மீதான தாக்குதல், திருநங்கைக்கு பாதுகாப்பில்லாத சமூகம் போன்றவை மேம்போக்காகப் பேசப்பட்டாலும் ஓரளவு கதையோடு ஒட்டியிருந்தது. ஆனால் மதி கதாப்பாத்திரத்தின் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வெறுமனே அதிர்ச்சியடைய வைக்கும் நோக்கில் இருப்பதாக பட்டது. அதிலும் அந்த ட்விஸ்ட் எல்லாம் `ரொம்ப ஓவர்’ ரகம். பரத் வைத்து சொல்லப்படும் கதையிலும், கெடுதல் செய்தவருக்கு கெடுதலே நடக்கும் என்ற பொயட்டிக் ஜஸ்டிஸ் எல்லாம் ஓக்கேதான்.
ஆனால், அதில் கொஞ்சம் கூட இயல்பே இல்லை என்பதால் டிவி சீரியல் பாணியிலான தாக்கத்தையே தருகிறது. மேலும் படத்தின் பல ட்விஸ்ட்கள் எளிதில் யூகிக்கும்படியே இருப்பதால், எந்த காட்சியும் ஒரு சுவாரஸ்யத்தையே வழங்கவில்லை. அதிலும் அந்த துப்பாக்கி எப்படி பயணிக்கிறது என சொல்லப்படுவதெல்லாம், தடுக்கி விழுந்தால் Co-Incident லெவல்.
படத்தின் பாடல்கள் எதுவும் ஈர்க்கும்படி இல்லை. ஒளிப்பதிவோ, எடிட்டிங்கோ கூட எந்த பலத்தையும் படத்திற்கு சேர்க்கவில்லை.
மொத்தத்தில் அழுத்தமான ஒன்லைனை யோசித்து, அதை வலுவாக சொல்லாமல், மேம்போக்காகவே படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இன்னும் எழுத்திலும், மேக்கிங்கிலும் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு டீசண்ட் வாட்ச் ஆக இருந்திருக்கும்.