கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன், ஆத்மாவை சந்தித்தால்... அதுவே `சர்வம் மாயா'
பிரபேந்து (நிவின் பாலி) பெரிய நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாததால், பூஜை செய்து பொருளீட்டும் தன் தந்தை, அண்ணனை பிரிந்து வாழ்கிறார். இசை கலைஞராக அங்கீகாரம் கிடைக்க எடுக்கும் அவரது முயற்சிகளுக்கு பண சிக்கல் குறுக்கே வருகிறது. பணரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ள, சில காலம் தனக்கு விருப்பமில்லை என்றாலும் பூஜை செய்வது என முடிவு எடுக்கிறார். உறவினர் ரூபேஷுடன் (அஜூ வர்கீஸ்) உதவியாளராக பூஜைகளுக்கு செல்பவர் ஒரு கட்டத்தில் தானே பெரியபெரிய பூஜைகளை கையில் எடுத்து செய்கிறார். அப்படி ஒருநாள் பள்ளி மாணவன் ஒருவனுக்கு ஆத்மா தொல்லை கொடுப்பதாக சொல்லி பூஜைக்கு அழைக்கப்படுகிறார் பிரபேந்து. எந்த ஆத்மாவை ஓட்ட செல்கிறாரோ, அந்த ஆத்மா பிரபேந்து வீட்டுக்கே வந்துவிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது, பிரபேந்துவின் நம்பிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதெல்லாம் தான் சர்வம் மாயா.
எளிமையான கதையை வித்தியாசமான களத்தில் சொல்வதில் மலையாள சினிமா எப்போதும் ஜெயிக்கும். அப்படி இந்தப் படத்தில் ஜெயித்திருக்கிறார் அகில் சத்யன். தெய்வ நம்பிக்கை, ஆத்மா என இரண்டு எக்ஸ்ட்ரீம் விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் மனிதர்கள் பற்றியும் அன்பு பற்றியும் பேசி இருக்கிறார்கள்.
நிவின் பாலிக்கு இது ஒரு க்யூட்டான ரோல். வாய்ப்புக்காக ஏங்கும் காட்சிகள், ஆத்மாவை கண்டு பயப்படுவது, ஒரு பெண்ணின் திடீர் நட்பை கையாளத் தெரியாமல் குழம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். நிவினுக்கு இது கண்டிப்பாக ஒரு கம்பேக் படம்தான். அஜூ வர்கீஸ், தான் வரும் எந்த காட்சியையும் வீணடிக்காமல், காமெடியை அள்ளித் தெளிக்கிறார். ரியா சுபு முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். துறுதுறுவென குறும்பு செய்வது, தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல் குழம்புவது, கண்ணீருடன் விடைபெறுவது என அழகான நடிப்பு. சின்ன பாத்திரம் என்றாலும் ப்ரீத்தி முகுந்தன் வரும் காட்சிகளில் கவர்கிறார். நண்பனாக வரும் ஆனந்த் ஏகர்ஷி, தந்தையாக வரும் ஜனார்தனன், அண்ணனாக வரும் மதுவாரியர் அனைவரின் நடிப்பும் சிறப்பு. கெஸ்ட் ரோலில் வரும் அல்போன்ஸ் புத்ரன், அல்தாஃப் சலீம், வினீத், மேதில் தேவிகா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
சரண் வேலாயுதன் ஒளிப்பதிவில் படம் முழுக்க ஒரு இயல்புத் தன்மை விரவுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் சைலன்ட் ஹீரோ. பின்னணி இசையில் எமோஷன் சேர்ப்பவர் பாடல்களில் துள்ளல் சேர்க்கிறார். Chiri Thottu பாடல் கேட்கவும் பார்க்கவும் அத்தனை இனிமை. மேலோட்டமாக படத்தில் கடவுள் நம்பிக்கை பேசப்பட்டாலும், மனிதர்களின் உடைந்து போன மனதை சரி செய்வது குறித்து சொல்வதும், மன்னிப்பு பற்றி அழுத்தி பேசுவதும் முக்கியமானது. பழைய காயங்களை நினைத்து நினைத்து மனதில் ரணத்தை தேக்கி வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வியையும் அழகாக முன்வைக்கிறது படம்.
இந்தப் படத்தின் குறைகள் என்றால், மொத்த படத்தையும் மிக மென்மையாகவே கொண்டு சென்றதால் ரியா பாத்திரத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முடிவில் அத்தனை அழுத்தம் இல்லை. படத்தில் கொஞ்ச நேரம் கதை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்ற குறை இருந்தது. ப்ரீத்தி முகுந்தன் பாத்திரம் இல்லை என்றாலும் கூட இந்தக் கதையில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. இது போன்ற விஷயங்களை இன்னும் நேர்த்தி செய்திருக்கலாம்.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஒரு அழகான ஃபீல் குட் படமாக கவர்கிறது இந்த `சர்வம் மாயா'