Joaquin Phoenix
Joaquin Phoenix Napoleon
திரை விமர்சனம்

Napoleon | கொஞ்சம் போர் நிறைய காதல்... இவ்வளவு தான் நெப்போலியனா ரிட்லி ஸ்காட்..!

karthi Kg

பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ரிட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் Napoleon திரைப்படம்.

Napoleon

ராணி ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் கில்லட்டினில் பலியிடுவதுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். அதைக் கூட்டத்தில் ஒருவராக, ஒரு இளம் ராணுவ அதிகாரியாக வேடிக்கை பார்க்கிறார் நெப்போலியன். அதிகராத்தில் இருப்பவர்களுக்கு நெப்போலியன் என்றுமே ஒரு ஆயுதம் தான். அவரால் பெரிய பதவிகளுக்கு எல்லாம் வர முடியாது என தீர்க்கமாக நம்புகிறார்கள். இதனிடையே தன்னைவிட வயது மூத்தவரான, ஏற்கெனவே திருமணமான ஜோஸ்ஃபீனைத் திருமணம் செய்துகொள்கிறார் நெப்போலியன்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் வெறும் ஆயுதம் அல்ல, இந்த நாட்டை ஆளப்போகும் பேரரசன் என்பதை உணரத் தொடங்குகிறது அதிகாரக்கூடம். உணர்ந்தவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குள் இறங்குவதற்கு முன்பாகவே, அவர்களை கலைத்துபோடுகிறார் நெப்போலியன். திருமண வாழ்வில் தொடரும் சிக்கல்கள், அதிகார மமதை என இரு பக்கமும் எழும் பிரச்னைகளை நெப்போலியன் எப்படிக் கையாண்டார் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தத் திரைப்படம்.

யாக்கீன் ஃபீனிக்ஸ்

நெப்போலியனாக யாக்கீன் ஃபீனிக்ஸ்.2000ம் ஆண்டில் ரிட்லி ஸ்காட் இயக்கிய கிளேடியேட்டரில் கம்மோடஸாக வருவார் யாக்கீன் ஃபீனிக்ஸ். அந்தப் படத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் யாக்கீன். அதன் பின்னர் மனோஜ் நைட் ஷியமாளனின் திரைப்படங்கள், பால் தாமஸ் ஆண்டர்சனின் திரைப்படங்கள் போன்றவற்றில் கவனம் ஈர்த்தவர், ஸ்பைக் ஜோன்ஸ் இயக்கிய HER திரைப்படம் மூலம் மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து மிகச்சிறப்பாகவே நடித்துவந்தாலும், அவருக்கான அகாடமி அங்கீகாரம் ஜோக்கர் படத்தில் தான் கிடைத்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ரிட்லி ஸ்காட்டின் படத்தில் யாக்கின் நடிக்கிறார் என்றதும் நெப்போலியனுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. ஒரு இளம் ராணுவ அதிகாரியாக ஆரம்பித்து, தன் கையைவிட்டு ஃபிரெஞ்சு தேசம் போகும் வரை பல்வேறு வயதுக்கான மேனரிஸங்களுடன் நடிக்க வேண்டும். யாக்கீனின் அனுபவத்துக்கு முன்னர் இது அவ்வளவு கடினமில்லை. எளிதாகவே நடித்துக்கொடுத்திருக்கிறார். சில ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், தனக்குக் கிடைக்கும் குழந்தையை கைகளில் ஏந்தியதும் அவர் தரும் ரியாக்சன். செம்ம.

Joaquin Phoenix

ஆனால், நெப்போலியனாக யாக்கின் ஃபீனிக்ஸ் அவ்வளவு பொருத்தமாக இல்லையோ என்கிற எண்ண எழாமல் இல்லை. 50 வயதை நெருங்கும் யாக்கீன் ஃபீனிக்ஸ் இளம் நெப்போலியனுக்கும் பொருத்தமாக இல்லை, வயது மூப்பான நெப்போலியனுக்கும் பொருத்தமாக இல்லை என்பதுதான் பெருந்துயரம்.

85 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்கிவருகிறார் ரிட்லி ஸ்காட். கடைசியாக அவர் இயக்கிய பத்து படங்களில் All the money in the world திரைப்படம் மட்டும் ஈர்க்கும்படியாக இருந்தது. அதிலும், கிறிஸ்டோபர் பிளம்மரின் நடிப்பைக் கடந்து படம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதில் சிக்கல்கள் இருக்கவே செய்தன. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.

Vanessa Kirby | Joaquin Phoenix

நெப்போலியன் ஆகச்சிறந்த போர் வீரர், சாமர்த்தியசாலி என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே தான் அவர், உலகம் முழுக்க பிரபலமாகியிருக்கிறார். ஆனால், படத்தின் பெரும்பகுதியை நெப்போலியனுக்கும், ஜோஸ்ஃபீனுக்குமான காதல் பக்கங்களைக் கொண்டு நிரப்பியிருக்கிறார் ஸ்காட். ஏன், அந்தக் காட்சிகளை வைக்கக்கூடாதா என்றால் இல்லை. ஆனால், அதற்கேற்றவாறான நடிகையையும், திரைக்கதையையும் தேர்வு செய்திருக்கலாம். ஜோஸ்ஃபீனாக வரும் வெநேஸா கிர்பி அந்தக் கதாபாத்திரத்தை சரியாக செய்யவில்லை என்பதைத் கடந்து திரைக்கதையாகவும், இவர்களின் திருமண வாழ்க்கை துருத்திக்கொண்டு தான் படமுழுக்க தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஜோஸ்ஃபீன் அளவுக்கு நெப்போலியனும் பலருடன் இருப்பார். ஆனால், நெப்போலியன் அதெல்லாம் திருமணத்துக்கு முன் என்பதாக ஒரு வரியில் அதைக் கடந்து செல்கிறார்கள். குழந்தைப் பேறு காரணமாகவே நெப்போலியன் ஒருவருடன் உறவில் ஈடுபடுகிறார் எனக் காட்டுவதும், அதற்காக சிரத்தையுடன் எடுக்கப்பட்ட காட்சிகளும். ரிட்லி ஸ்காட்டே இதப் பார்க்கவா இம்புட்டு தூரம் வந்தோம் என சொல்ல வைத்துவிடுகிறது.

நெப்போலியன்

சரி, காதல் களேபரங்களைவிடுத்து திரைப்படமாக எப்படியிருக்கிறது என்று பார்த்தாலும், அதிலும் ஏகப்பட்ட பிரச்னைகள். வரலாற்று ரீதியாகவும் படத்தில் சில பிரச்னைகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சகர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். நெப்போலியன் எப்போது எகிப்தின் பிரமிடை சேதமாக்கினார் என ஆரம்பித்து அத்தனை கேள்விகள். நெப்போலியனை ஒரு தோற்றுப்போன நபராக காட்டுவதும், பிள்ளைப் பேறுக்கு தவம் கிடந்தார் என்று காட்டுவதும் தான் ரிட்லி ஸ்காட்டின் நோக்கமா என பிரெஞ்சு விமர்சகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். ஆப்பிள், நெட்பிளிக்ஸ், அமேசான் என பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் தலைகளிடம் பணத்தை கொடுத்து படம் எடுக்க சொல்கிறார்கள். ஆனால், சினிமா உலகின் பிதாமகன்கள் என நம்பப்படுபவர்கள் கிண்டி வைப்பதென்னவோ நெப்போலியனைத்தான்.

படத்தின் பெரும்பலம் Dariusz Wolskiயின் ஒளிப்பதிவு தான். கடந்த பத்தாண்டுகளில் ரிட்லி ஸ்காட் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு வொல்ஸ்கி தான் ஒளிப்பதிவு. ஆஸ்டிரியாவுக்கு எதிரான ஐஸ் கட்டி போர் காட்சி அனுபவத்தின் உச்சம். காஸ்டியூம், கலை இயக்கம், மேக்கப் போன்ற பிரிவுகள் நிச்சயம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பிடிக்கும்.

நெப்போலியன்

காட்சி அனுபவத்திற்காக இந்த நெப்போலியனை நிச்சயம் பெரிய திரையில் பார்க்கலாம்.