Munishkanth, Vijayalakshmi Middle Class
திரை விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தின் சோதனைகள்.. வெற்றி பெற்றதா `மிடில் க்ளாஸ்'? | Middle Class Review

நடுத்தர வர்க்க குடும்பத்தின் அன்றாட அல்லல்களை வி சேகர் டெம்ப்லேட்டில் அடுக்க, முதல் பாதி சுவாரஸ்யமாகவே நகர்கிறது.

Johnson

நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருந்து வெளியேற துடிக்கும் ஒரு குடும்பத்தின் கதையே மிடில் க்ளாஸ்!

Middle Class

சென்னையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறார் முனீஸ்காந்த். அவரது மனைவி விஜயலட்சுமிக்கு கணவனின் சொற்ப வருமானமும், மிடில் க்ளாஸ் வாழ்க்கையும் போதவில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க பல தொழில்களை முயன்றாலுமே நஷ்டமே மிஞ்சுகிறது.  ஆனால்  முனீஸ்க்கு தன் சொந்த ஊரில் நிலம் வாங்கி, விவசாயம் செய்து வாழ வேண்டும் என்பது ஆசை. இந்த சூழலில் அவர்கள் வாழ்க்கையையே மாற்றும் ஒரு ஜாக்பாட் அடிக்கிறது. கைக்கு எட்டியது, பைக்கு எட்டவில்லை என்பது போல ஒரு சம்பவம் நடக்க அதன் பின் என்ன ஆனது.  வரும் பிரச்சனைகளை முனீஸ் எப்படி எதிர்கொண்டார்? அவர்களின் வாழ்க்கை நிலை மாறியதா இல்லையா? என்பதெல்லாம் சொல்வதே மிடில் க்ளாஸ்.

துவக்கத்தில் ஒரு எளிமையான குடும்பத்தின் கதையை நெருக்கமாக சொல்வதில் நிமிர்ந்து அமர வைக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். நடுத்தர வர்க்க குடும்பத்தின் அன்றாட அல்லல்களை வி சேகர் டெம்ப்லேட்டில் அடுக்க, முதல் பாதி சுவாரஸ்யமாகவே நகர்கிறது.

Vijayalakshmi

நடிப்பு பொறுத்தவையில் முனீஷ்காந்த் வழக்கம் போல் காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். டப்பிங்கில் அவர் சேர்த்திருக்கும் சில கவுன்டர்களும் சிறப்பு. எளிமையான நடுத்தர வயது மனிதராய் அவர் தரும் சில முகபாவனைகளும் க்யூட்.  எமோஷனல் காட்சிகளை இன்னும் மெனக்கெடலுடன் கையாண்டிருக்கலாம். படத்தில் ஓரளவு அழுத்தமான நடிப்பை கொடுத்திருப்பது விஜயலட்சுமி தான். கிட்டத்தட்ட கோவை சரளா பாணியிலான ரோல், அதை காமெடியாகவும் எமோஷனலாகவும் அழகாக கையாள்கிறார். கோபமாக கத்துவது, தன் இயலாமையை கூறி கலங்குவது என சில காட்சிகள் கச்சிதம். கடுகு கூட வடசட்டி சூடா இருந்தால் தான் வெடிக்கும், விஜயலட்சுமியோ வெடித்துக்கொண்டே இருக்கிறார். முனிஸ்காந்த் கதாபாத்திரத்தின் மேல் நமக்கு எளிதாக பரிதாபம் வருவதற்கு விஜயலட்சுமி காட்டும் கோபம் ஒரு முக்கிய காரணம். வருகிற காட்சி எல்லாவற்றிலும் க்ளாப்ஸ் அள்ளுவது செக்யூரிட்டி ரோலில் வரும் வடிவேல் முருகன் தான். `செக்யூரிட்டி வேலைக்கு ஒர்க் ஃபிரம் ஹோம்னு சொன்னாலும் நம்புறா பாரு' என சொல்லும் போது தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது.  ஆனால் அவருக்கான காமெடிகளை இன்னும் அதிகப்படுத்தி இருந்தால் படம் இன்னும் கலகலப்பாக நகர்ந்திருக்கும். இவர்கள் தவிர காளிவெங்கட், குரேஷி, வேல ராமமூர்த்தி போன்றோர் கொடுத்த வேலையை முடித்திருக்கிறார்கள்.

சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு முடிந்தவரை படத்தை தரமாக கொடுக்க உழைத்திருக்கிறது. பின்னணி இசையோ பாடல்களோ பெரிய அளவில் கவரவில்லை.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், சுத்தமாக நம்பவே முடியாத நிகழ்வுகளின் கோர்வையாக இருப்பதே. மிடில் கிளாஸ் படங்களில் யதார்த்தமே மேலோங்கி இருக்கும். ஆனால், இதில் வரும் சில காட்சிகள் ஃபேண்டஸி மோடில் இருக்கின்றன. ஒருவருக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கிறது என்பது கதையின் லாஜிக் என்பதை புரிந்து கொள்ளலாம், ஏற்றுக் கொள்ளலாம். அதனை தொடர்ந்து நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் திரைக்கதையின் தேவைக்காக வளைத்து எழுதப்பட்டதாகவே இருந்தது. அதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் உணர்வு ரீதியாக நம்மால் படத்துடன் துளியும் ஒன்ற முடியவில்லை. எழுத்தாகவும், ஆக்கமாகவும் கூட இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். அதே போல், படத்தை காமெடியாக சொல்வதா அல்லது எமோஷனலாக சொல்வதா என்கிற குழப்பம் இரண்டாம் பாதி முழுக்கவே இருக்கிறது. ‘ ஓ இவரும் நல்லவரா’, ‘ ஓ அவரும் நல்லவரா’ , ஓஹோ இவரும் நல்லவரா’ என உலகில் இருக்கும் அத்தனை நல்லவர்களும் படத்தில் இருக்கிறார்கள். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் வரும் நல்லவர்களுக்காகத்தான் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குகிறது. இப்படி எல்லா மிடில் கிளாஸ் படங்களிலும் நல்லவர்களை கொட்டி குவித்துக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மூழ்கிவிடும். படத்தின் க்ளைமாக்ஸ் எல்லாம் குழந்தைகளுக்கு நீதிக் கதை சொல்வதை போல அநியாயத்துக்கு ஸ்பூன் பீட் கருத்துக்கள்.

மொத்தத்தில் ஓரளவு காமெடி, அதே சமயம் பொறுமையை கொஞ்சம் சோதிக்கும் படமாக தான் இருக்கிறது இந்த `மிடில் க்ளாஸ்'.