குழந்தை கடத்தல் விசாரணையில் சஸ்பெண்ட் ஆன SP அஜய் மார்கண்டேயா, 18 குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கதையின் மையத்தில் பல கதாபாத்திரங்கள் இணைந்து, சுதீப் தனது மாஸ் ஹீரோவாக அசத்துகிறார். ஆனால், கதை பல இடங்களில் சுவாரஸ்யம் இழக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் அழகாக காட்சியளிக்கிறது, ஆனால் கதை பலவீனமாக உள்ளது.
குழந்தை கடத்தலை விசாரிக்கும் அதிகாரியின் ஒரு நாள் அதிரடிகளே Mark
சஸ்பெண்ட் ஆன SP அஜய் மார்கண்டேயா aka மார்க் (கிச்சா சுதீபா)
ஒரு குழந்தை கடத்தல் பற்றி விசாரிக்க துவங்க, மொத்தம் 18 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் காதலியுடன் சென்றுவிட்ட தம்பி ருத்ரனை (விக்ராந்த்) ரௌடி அண்ணன் பத்ரன் (நவீன் சந்திரா) தேடுவதும், போலீசில் சிக்கிய போதை மருந்தை மீட்க முயலும் ஸ்டீபன் (குரு சோமசுந்தரம்), முதலமைச்சராக முயலும் ஆதிக்கு (ஷைன் டாம் சாக்கோ) தடையாக இருக்கும் வீடியோ என இந்த நான்கு களமும் ஒரே புள்ளியில் இணைகிறது. 18 மணிநேரத்தில் குழந்தைகள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் இறக்கும் சூழலில், சுதீப் குழந்தைகளை கண்டுபிடித்தாரா? ஆதியின் வீடியோவில் இருப்பது என்ன? இவற்றை எல்லாம் சொல்கிறது மீதிக் கதை.
ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதைக்களம் என்பதால் அதற்கு ஏற்றவாரு அமைந்திருக்கிறது கிச்சா சுதீப் ஸ்கிரீன் பிரசென்ஸ். ஸ்வாக், மாஸ் டையலாக் டெலிவரி என ஒன் மேன் ஷோவாக அசத்துகிறார். சைன் டாம் சாக்கோ, விக்ராந்த், ரோஷினி பிரகாஷ் என அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறார்கள். எதையும் யோசிக்கவிடாமல் பரபரப்பாக கதையை நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திக்கேயா.
தொழில்நுட்ப ரீதியாக ஷேகர் சந்த்ரா ஒளிப்பதிவில், பல இரவு நேர காட்சிகள், சண்டைகள், சேசிங் போன்றவை அழகாக காட்சிபடுத்தப்படுள்ளன. படம் நெடுக சண்டைகள் இருக்கிறது, அதை முடிந்தளவு ஸ்டைலிஷாக, சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. ஓவர் டெசிபலில் ஒலித்தலும் அஜனீஸ் லோகநாத் பின்னணி இசை படத்துக்கு பவர் ஏற்றுகிறார். ஆனால் கூலியின் மோனிகா பாட்டை அப்படியே திருப்பி போட்டு கும்மாங்குத்து குத்தி இருக்கிறார். குரு... ஏனு குரு இது?
இப்படத்தின் குறை கண்டிப்பாக, சரியாக எழுதப்படாத கதை தான். சுதீப் - விஜய் கார்த்திகேயா கூட்டணியில் உருவான 'Max' மாதிரியே இந்தப் படத்தையும் குறிப்பிட்ட ஒரு நேரத்துக்குள் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் அது ஒரே போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நடக்கும் கதை என்றாலும் அதில் இருந்த சுவாரஸ்யம், இதில் பல இடங்களில் கதை நகர்ந்தும் துளியும் இல்லை. பல கதை இருந்தும் எதிலும் நம்மால் ஒன்றமுடியவில்லை. ஒரு கட்டத்தில் கதை எங்கேங்கோ இஷ்டத்துக்கு போகிறது. ஹீரோ அதீத புத்திசாலி, எதிரி அடுத்து என யோசிப்பான் என்பதை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவர். ஆனாலும் எந்த ஸ்மார்ட் மூவும் செய்யாமல் தேமே என நிற்கிறார். எல்லாவற்றையும் போன் காலில் செய்து முடிக்கிறார். என்ன பிரச்னை வந்தாலும் ஹீரோ சரி செய்துவிடுவார் என்ற எண்ணம் வருவதால் படத்தின் மீது உள்ள ஆர்வம் சுத்தமாக இறங்கி விடுகிறது. இதில் ஆளாளுக்கு ஹீரோவுக்கு கொடுக்கும் பில்டப் வசனங்கள் இன்னும் பொறுமையை சோதிக்கிறது.
படத்தில் ஒரு வில்லன் தொண்டை கிழிய கத்துகிறார், ஒருவில்லன் கோமாளி போல் நடந்து கொள்கிறார், அரசியல்வாதி வில்லன் அமைதியாகவே இருக்கிறார். யாரும் எதுவும் செய்வதில்லை, படு பலவீனமாக இருக்கிறார்கள். திருப்பங்கள் கூட எளிதில் கணிக்கும் விஷயங்களாகவே இருக்கிறது. விக்ராந்த் செய்யும் ஒரு விஷயம் தான் எல்லா சிக்கலுக்கும் துவக்கம். ஆனால் அவர் எதற்காக செய்தார் என சொல்வது அவ்வளவு சிறப்பான காரணமாக இல்லை. இவர் இப்படி என்றால் மற்ற வில்லன்கள் இன்னும் மோசம். இவ்வளவு careless வில்லன்கள் எல்லாம் அநியாயம்.
கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான த்ரில்லர் படமாக முடிகிறது இந்த MARK.