சீரியல் கில்லரின் வேட்டையும், காவலரின் தேடுதலுமே `களம்காவல்'
கேரளா தமிழ்நாடு எல்லை பகுதியிலிருக்கும் கிராமம் ஒன்றில் இரு தரப்பினரிடையே நடந்த சண்டையை பற்றி விசாரிக்க வருகிறார் ஜெயகிருஷ்ணன் (விநாயகன்). அந்த விசாரணையில் ஒரு பெண் வீட்டைவிட்டு காதலருடன் சென்றதால் ஏற்பட்ட பிரச்சனை என தெரியவருகிறது. இன்னொரு புறம் ஸ்டேன்லி (மம்மூட்டி) பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி லாட்ஜுக்கு அழைத்து வந்து, கொலை செய்து பிணத்தை அப்புறப்படுத்துகிறார். காணாமல் போன பெண்ணை பற்றிய விசாரணையில், ஒன்றன்பின் ஒன்றாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து பல பெண்கள் காணாமல் போனது தெரியவருகிறது. ஸ்டேன்லி தொடர்ந்து பெண்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பின்பு கொலை செய்கிறார். ஜெயகிருஷ்ணன் இந்த வழக்கில் கொலைகாரரை கண்டுபிடிக்கிறாரா? ஸ்டேன்லி சிக்கினாரா? என்பதெல்லாம் தான் `களம்காவல்' படத்தின் கதை.
தொடர் கொலைகள் செய்யும் சீரியல் கில்லர், அவரை பிடிக்க துரத்தும் போலீஸ் என த்ரில்லர் ஜானரை கையில் எடுத்து Slow burn படமாக அதனை கொடுத்த விதத்தில் கவர்கிறார் இயக்குநர் ஜிதின் கே ஜோஷ். இது போன்ற ஜானரில் பல படங்கள் பார்த்திருக்கிறோம்தான். ஆனால் இதில் மம்மூட்டி வில்லன் என்பதே படத்தை வித்தியாசப்படுத்துகிறது.
இரக்கமே இல்லாத ஒரு வில்லன் வேடம், அதில் மம்மூட்டி நடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் மீது கவனம் குவிய காரணம். அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மிரட்டி இருக்கிறார் மம்மூட்டி. சாந்தமாக பேசும், பெண்களிடம் குழைந்து ரொமான்ஸ் செய்யும் க்யூட் நபர், கொஞ்சமும் இரக்கமின்றி கொலையாளியாக குரூர முகம் காட்டுவது என இருவேறு பரிமாணங்களையும் அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார் மம்மூட்டி. அவர் செய்யும் கொலைகளின் கொடூரத்தை வன்முறையின் மூலமோ, தெறிக்கும் ரத்தம் மூலமோ வெளிக்காட்டாமல், மம்மூட்டியின் முக பாவனைகள் மூலம் மட்டுமே காட்டுகிறார்கள். அதற்கு ஏற்ப தன் நடிப்பை அழகாக கையாண்டிருக்கிறார் மம்மூட்டி.
எல்லாவற்றையும் நிதானமாக கையாளும் காவலதிகாரி ஜெயகிருஷ்ணனாக விநாயகன். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கவனிக்கத் தகுந்த நடிப்பை வழங்குகிறார். அவரது உதவியாளராக வரும் ஜிபின் கோபிநாத் நடிப்பும் சிறப்பு. ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண், மேகா தாமஸ், முல்லை அரசி என படத்தில் பல நடிகைகள் சில நிமிடங்கள் மட்டுமே தான் அனைவரும் வந்தாலும் கவனம் கவர்கின்றனர். ரஜிஷாவுக்கு மட்டும் கூடுதல் காட்சிகள் உண்டு என்பதால் அதை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.
படத்தின் பெரிய பலம் ஃபைசல் அலியின் ஒளிப்பதிவு. ரொமான்ஸ், த்ரில் என இருவேறு உணர்வுகளுக்கு தகுந்தது போல காட்சிகளை கொடுத்திருக்கிறார். முஜீப் மஜீதின் பின்னணி இசை படத்தின் த்ரில்லர் காட்சிகளுக்கு பெரிய அளவில் கை கொடுக்கிறது. மேலும் நிலாகாயும் என்ற அந்தப் பாடல் திகில் உணர்வை கூட்டுகிறது.
மம்மூட்டி என்ற ஒரு மனிதரை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டதை போன்ற உணர்வு எழுவதே இப்படத்தின் பெரிய குறை. காரணம் மம்மூட்டியின் சிறப்பான நடிப்பை தவிர படத்தை சுவாரஸ்யப்படுத்தும் காரணி என எதுவும் இல்லை. ஒரு பெண் காணாமல் போன வழக்கு, சீரியல் கில்லரை தேடும் வழக்காக மாறுகிறது என்ற ஒன்லைன் படத்தின் துவக்கத்தில் ஒரு த்ரில்லை கொடுத்தாலும், போகப் போக நீர்த்துப் போகிறது. முதல்பாதியும், இண்டர்வெல்லில் வரும் ஒரு டிவிஸ்டும் நம்மை கட்டிப் போடுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் படம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டு கதை நகராமல் நின்றுவிடுகிறது. இப்படியான படங்களை சுவாரஸ்யம் ஆக்குவது, கொலைகாரனின் புத்திசாலித்தனம் அல்லது காவலரின் புத்திசாலித்தனமான திட்டம். அது இரண்டுமே இதில் மிஸ்ஸிங்.
வந்தான், லவ் பண்ணான், கொன்னான் ரிப்பீட்டு என்பது போல கொலைகாரனும்... வந்தான், விசாரிச்சான், போனான் என போலீஸும் நடந்து கொள்வது படத்தின் மீதான நமது ஈடுபாட்டை குறைக்கிறது. சீரியல் கில்லர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார் என்ற காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்காமல், மறைமுகமாக அதை சொல்ல முயன்றது நல்ல ஐடியா தான். ஆனால் அது இன்னும் தெரிவாக இருந்திருக்கலாம். மேலும் தமிழ்நாட்டில் ஒரு பாத்திரம், மணி நாடார் என சாதியை பெயரின் பின்னால் போடுவதாக காட்டுவது எல்லாம் நியாயமா சாரே?
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம், இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் வெறித்தனமான த்ரில்லராக இருந்திருக்கும். இப்போது ஒரு சுமாரான படமாகவே மிஞ்சுகிறது.