Ajay devgn | Maidaan
Ajay devgn | Maidaan Maidaan
திரை விமர்சனம்

Maidaan review | ‘மைதான்’ - இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் உருவான கதை..!

Johnson

சையத் அப்துல் ரஹீம், இந்திய கால்பந்து அணியை எப்படி கட்டமைத்தார் என்ற நிஜ நிகழ்வுகளைத் தழுவி உருவாகியிருக்கும் படமே `மைதான்’.

இதை பயோபிக் என்று சொல்வதை விட 1952லிருந்து 1962 வரையிலான காலகட்டத்தில் இந்திய கால்பந்தாட்ட அணி எப்படி வீரியமாக வளர்ந்தது என்பதும், அதை உருவாக்க ரஹிம் என்ன செய்தார் என்பதுமான நிகழ்வுகளின் தொகுப்பாக எடுத்துக் கொள்ளலாம். 52 - 62 வரையிலான காலகட்டம் தான் இந்திய கால்பந்து அணியின் பொற்காலமாக கருதப்படுவதும், அந்த காலகட்டத்தில் ரஹிம் என்ன பிரச்னைகளை சந்தித்தார் என்பதும் பிரித்துப் பார்க்க முடியாதது, எனவே இரண்டும் இணைந்து பயணிக்கும் படியாக கதை சொல்கிறார் இயக்குநர் அமித் ஷர்மா.

எஸ் ஏ ரஹீம் (அஜய் தேவ்கன்), இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர். 1952ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இமாலயத் தோல்வியடைகிறது இந்திய அணி. எதிரணி 10 என்றால் இந்திய அணி 1 என்ற ஸ்கோருடன் தோற்கிறது. இந்த களங்கத்தை துடைத்து, இந்திய கால்பந்து அணியை சர்வதேச அளவில் கவனம் பெற வைக்க, புது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார் எஸ் ஏ ரஹீம். மிக சிறப்பாக விளையாடும் நபர்களைத் தேடி வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஒரு அணியை உருவாக்குகிறார். இவர்களை ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பங்குபெற வைக்க ரஹீம் எடுக்கும் முயற்சிகள் என்ன? அதற்கு வரும் தடைகள் என்ன என்பதெல்லாம் தான் படத்தின் கதை.

Ajay devgn | Maidaan

இயக்குநர் அமித், தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை `பதாய் ஹோ’ படத்திலேயே நிரூபித்தவர். இம்முறை ஒரு ஸ்போர்ட் ட்ராமாவுடன் வந்திருக்கிறார். அதுவும் நிஜமாக நடந்த சம்பவத்தைப் பற்றிய ஸ்போர்ட்ஸ் ட்ராமா. வழக்கமாக இம்மாதிரி படங்களில் இருக்கும் க்ளிஷேக்கள் பலவற்றைத் தவிர்த்திருக்கிறார், சிலவற்றைக் குறைத்திருக்கிறார். புதிதாக உருவாக்கப்படும் அணிக்குள், ஒற்றுமை இல்லாமல் இருக்கும் வீரர்கள், விளையாட்டின் போது எதிரணியினருடன் பகை, விளையாட்டின் நடுவில் வீரருக்கு அடிபடுவது எனப் பலவற்றையும் சடசடவென கடந்து போகிறது திரைக்கதை. படத்தின் மையக் கதாப்பாத்திரமான ரஹீமுக்கு உடல் ரீதியாக ஒரு பிரச்சனை வரும். அதையும் வைத்து ஓவராக பிழியாமல், அழகாக கையாண்டிருக்கிறார்கள். படத்தில் அமித் ஷர்மா கவனம் செலுத்தியிருப்பது, போட்டிகளில் மட்டுமே. ஒரு அணி எப்படி உருவாகிறது, அதற்கான தடைகள் என்ன இருந்தது, இறுதிப்புள்ளியை நோக்கி எப்படி நகர்ந்தது என்பதே படத்தின் மையமாக சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில் பாராட்டத்தக்க பல காட்சிகள் இருப்பது, பார்வையாளர்களை வெகுவாக அதன் பக்கமாக ஈர்க்கிறது. இந்தியாவுடன் விளையாடி தோற்ற ஒரு அணியின் பயிற்சியாளர், “இது வெறுமனே எதேர்ச்சையாக அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி. வேண்டுமென்றால் அவர்களை மறுபடி விளையாடி வெற்றி பெற சொல்லுங்கள்” எனக் கூற, அதற்கு ரஹீம் கதாப்பாத்திரம் தரும் பதிலடி, ஒருகட்டத்தில் தனது குடும்பத்துடன் வாழ விரும்புவதாக மனைவியிடம் ரஹீம் சொல்லும் போது நடக்கும் உரையாடல், இறுதிப் போட்டியின் போது வசனங்கள் இன்றி ஒரு கையுறையை வைத்து வரும் காட்சி எனப் பல இடங்களை உதாரணமாக சொல்லலாம்.

நடிப்பு பொறுத்தவரை அஜய் தேவ்கன் மிக அமைதியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். குறைவாகவே பேசுகிறார், குறைவாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆனால், அவை படத்தின் ஓட்டத்திற்கு அத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது. ப்ரியாமணி வரும் அத்தனை காட்சிகளிலும் அசத்துகிறார். மிக இயல்பாக அவர் நிகழ்த்தும் உரையாடல்கள், அவரின் கதாப்பாத்திரத்தை நம்பும்படி மாற்றுகிறது. படத்தின் வில்லன் கதாப்பாத்திரங்களாக கஜராஜ் ராவ், ருத்ரனில் கோஷ் நடிப்பு தரம். ஆனால் அவர்கள் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருந்தது சற்று பலவீனம்.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். துஷார் - ஃபியோடர் ஒளிப்பதிவு அட்டகாசம். துஷார் படத்தின் காட்சிகளை மிக நேர்த்தியான கோணங்கள் மூலம் வழங்குவதும், ஃபியோடர் அதற்கு நேரெதிராக, மைதானத்தில் பாய்ந்தோடும் பந்தைப் போல பறக்கிறது. இது அந்த விளையாட்டோடு நம்மை இன்னும் ஒன்றச் செய்கிறது. தேவ் ராவ் - ஷானவாஸ் படத்தொகுப்பு படத்தின் பரபரப்புக்கும். விளையாட்டு காட்சிகளின் பரபரப்பிற்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. படத்தின் மிகப்பெரிய தூண் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும். எமோஷனலான காட்சிகள், சீரியஸான காட்சிகள், போட்டிகள் என ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து பணியாற்றியிருக்கிறார். கடைசி போட்டியின் இறுதியில் வரும் இசையும், பாடலை அதற்குள் கொண்டு வந்திருந்த விதமும் அட்டகாசமான கூஸ் பம்ப்ஸ். இப்படி அத்தனை விஷயங்களும் சிறப்பாக அமைந்ததால், மூன்று மணிநேரப் படத்தில் ஒரு இடமும், தொய்வோ, சலிப்போ ஏற்படவில்லை.

படத்தின் இறுதியில், அந்த அணியில் ஆடிய நிஜ வீரர்களில், இன்னுமும் உயிரோடு இருக்கும் வீரர்களை காட்சிப்படுத்தியிருந்த விதம் ஒரு பக்கம் நெகிழ்ச்சியைத் தருகிறது. அதேவேளையில் 62க்கு பிறகு இந்திய கால்பந்து அணி இத்தகைய வெற்றியை பெறவே இல்லை என்ற முகத்தில் அறையும் உண்மையையும் பதிவு செய்து முடிகிறது படம்.

மொத்தத்தில் இப்படம் சற்றே வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் ட்ராமா. கண்டிப்பாக ஒரு சிறப்பான திரை அனுபவத்தை வழங்கவல்லது.