GDN என்ற கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கைப் பயணமே கதை!
கோயம்புத்தூர் கலங்கல் கிராமத்தில் பிறந்து வளர்ந்த கோபாலசாமி துரைசாமி நாயுடு (மாதவன்) பள்ளிப்படிப்பில் நாட்டமில்லை. அவரின் ஆர்வம் எல்லாம் மோட்டார்ஸ் மீதே இருக்கிறது. குடும்பச் சூழல் காரணமாக பஞ்சு ஆலையில் வேலை கற்றுக் கொண்டு, பின்னர் தானே பஞ்சு ஆலை துவங்கும் அளவுக்கு உயர்கிறார். கூடவே தன் மோட்டார் காதலை வெளிப்படுத்த, கடினமான வேலைகளை எளிமைப்படுத்தும் சின்னச்சின்ன கண்டுபிடிப்புகளையும் உருவாக்குகிறார். டிரான்ஸ்போர்ட் தொழில் துவங்கி அதிலும் பெரிய அளவில் வளர்கிறார்.
பேருந்துக்குத் தேவையான உபகரணங்களையும் தானே உருவாக்குகிறார். இவருக்குப் பிரச்னையாக இரு சிக்கல்கள் வருகின்றன. ஒன்று இவரைப் பார்த்துப் பொறாமைப்படும் சிலரின் சதி. இன்னொன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள். அந்தச் சதிகளையும், வரிகளையும் எப்படி அவர் எதிர்கொண்டார்? BMW நிறுவனத்துடன் கைகோர்க்க வேண்டும் என்ற ஜிடியின் கனவு என்ன ஆனது? இதை எல்லாம் சொல்லும் பயோபிக்தான் GDN.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் பற்றிய தகவல்களைச் சொல்ல நினைக்கும் முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ள இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு மற்றும் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
படத்தின் முதல் பலம் நடிகர்களின் நடிப்புதான். GDN ஆக நடித்துள்ள மாதவன், முடிந்தவரை தன் நடிப்பால் அந்தப் பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துகிறார். புது கண்டுபிடிப்புகளின் மீது காட்டும் ஆர்வம், சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிப்பது, வீண் வரிகளை எதிர்த்துப் போராடுவது, இழப்புகளைத் தாங்க முடியாமல் உடைந்துபோவது என எமோஷனல் காட்சிகளில் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். GDN நண்பராக வரும் சத்யராஜ் நக்கல் கலந்த தொனியில் பேசும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. வருமான வரி அதிகாரியாக வரும் ஜெயராம் நேர்மையான வில்லத்தனம் காட்டினால், கருணாகரன் சதி செய்து வில்லத்தனம் காட்டுகிறார். ப்ரியாமணி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறார்.
நிறைய விஷயங்களை வசனங்கள் மூலம் நறுக் என படத்துக்குள் சேர்த்திருக்கிறார் வசனகர்த்தா முகில். கோவிந்த் வசந்தா இசையில் பின்னணி இசை மட்டும் கவனிக்க வைக்கிறது. அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு மற்றும் சிரில் கலை இயக்கம். அந்தக் காலகட்டத்துக்கான உணர்வைக் கொடுக்கும் வண்ணம் உழைத்திருக்கிறது. சில கிராஃபிக்ஸ் மற்றும் AI சார்ந்த காட்சிகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம். அவை துருத்திக் கொண்டு தெரிகிறது.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால். இது முழுக்கவே GDN பயோபிக்தான் என்பது புரிகிறது. ஆனால், இது வெறுமனே அவரின் சாதனைப் பட்டியலாக மட்டுமே நீள்கிறதே தவிர, ஒரு சினிமாவாக போதாமைகளுடன் இருக்கிறது. அவரின் வாழ்க்கைப் பதிவாகவும் எந்த விஷயத்தையும் அழுத்தமாகச் சொல்லாமல், ஒவ்வொரு காட்சியும் தகவல் தொகுப்பாக மட்டும் நகர்கிறது. அது பெரியாருக்கும் அவருக்குமான நட்பில் துவங்கி, அவருடைய ஜெர்மானிய பயணம் வரை பல விஷயங்கள் காட்டப்பட்டும் அவை எதுவும் படத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இல்லை. படத்தில் இருந்த சில காட்சிகளை இன்னும்கூடச் சிறப்பாக கொடுத்திருக்கலாம் எனவும் தோன்றியது. உதாரணமாக ப்ரியாமணி - மாதவன் இடையே நடக்கும் ஓர் உரையாடலைச் சொல்லலாம். முதல் பாதி வரைகூட ஓரளவு நகரக் கூடிய கதை, இரண்டாம் பாதியில் ரொம்பவும் தடுமாறுகிறது.
மொத்தத்தில் ஓர் ஆளுமையைப் பற்றிய கதை என்றாலும், சினிமாவாக இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கலாம்.