Fahadh Faasil
Fahadh Faasil மாமன்னன்
திரை விமர்சனம்

மாமன்னன் விமர்சனம் | 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' மாமன்னன் பேசும் அரசியல் யாருக்கானது..?

karthi Kg

'அதிகாரத்திற்கு வந்தால் மட்டும், இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மாறிவிடுறதா என்ன' என்பதைப் பற்றிப் பேசுகிறது மாமன்னன்.

சேலம் காசிபுரத்தின் சட்டமன்ற உறுப்பினர் மாமன்னன் (வடிவேலு), அவரது மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அதே ஊரில், அதே கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரத்தினம் (ஃபஹத் பாசில்). எல்லோரும் தன்னை உயர்ந்தவனாக பார்க்க வேண்டும், ஒடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் தனக்கு கீழானவர்கள் என்ற நினைப்பில் இருக்கும் ரத்தினத்திற்கும், அனைவரும் சமம் என சொல்லும் மாமன்னன், அதிவீரனுக்கும் இடையே சின்ன உரசலில் ஆரம்பிக்கிறது பிரச்சனை. அது பிரளயமாக உருவெடுத்த பின் என்னென்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதே மீதிக்கதை.

ரத்தினம் என்கிற ரத்தினவேலுவாக ஃபகத் ஃபாசில். தமிழகத்தில் ஆதிக்க சாதி மக்கள் நிறைந்த வீதிகளிலும், அவர்கள் வைத்ததுதான் சட்டம் என சொல்லப்படும் இடங்களிலும் நாம் பார்த்து அருவருக்கும் கதாபாத்திரம் ஃபகத் ஃபாசிலுக்கு. அதை அதி அற்புதமாக செய்திருக்கிறார். ஃபகத்தின் கதாபாத்திரத்தை மேலும் அடர்த்தியாக்குகிறது மாரியின் வசனங்கள். " இவர இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்" என்னும் ஒற்றை வரியில் அவருக்கான அரசியலை பேசிவிடுகிறார். அதே சமயம் வெறும் சாதிக் கட்சி நபராக மட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் நபராகவே படம் நெடுக வருகிறார். " இவனுக ஜாதி **** காப்பாத்துறது எல்லாம் என் வேலையில்ல. எங்க அப்பா எனக்கொரு இடத்தை இங்க உருவாக்கி வச்சிருக்கார். நான் என் பையனுக்கு அப்படியானதொரு இடத்தை உருவாக்கி தரணும்" . என ரத்தினவேலு பேசும் வசனம் அதனையொட்டியதுதான். நாயோ மனிதனோ தன்னை ஒரு கணம் கீழிறக்கும் யாரையும், எதையும் ரத்தினவேலு முடித்துக்கட்ட தயங்குவதே இல்லை. அவ்வளவு சீற்றத்துடன் ஒருவரை அறைந்துவிட்டு துப்பாக்கி எடுக்க விரையும் காட்சியாகட்டும்; மனைவியைக் ஆரத்தழுவிவிட்டு அடுத்து சபையில் செய்யும் விஷயமாகட்டும் ஃபகத் இந்த தசாப்தத்தின் ஆகச்சிறந்த கலைஞன்.

mari selvaraj | Vadivelu | Udhayanidhi Stalin

நகைச்சுவை நடிகரான வடிவேலுவை எமோசனலான காட்சிகளில் பார்ப்பது மிகவும் அரிது. பொற்காலம், சங்கமம், எம் மகன் மாதிரியான சில படங்களில் மட்டுமே வடிவேலுவின் அந்த முகத்தை நாம் கண்டிருக்கிறோம். இதில் முதல் காட்சியிலிருந்தே இறுக்குமான முகம் தான். தன் மகனுக்காக நியாயம் கேட்டு வெடவெடுத்துப்போய் நிற்குமிடத்தில் நம்மை அழ வைத்துவிடுகிறார்.

ஃபகத், வடிவேலு, கீர்த்தி போன்ற பெர்பாமர்களுக்கு இடையே நிச்சயம் காணாமல் போய்விடுவார் உதய் என்பது அனைவரும் அறிந்ததுதான். படத்தின் போஸ்டரிலும் அவர் பெயர் இறுதியாகத்தான் வந்தது. ஆனால், ' அப்பா நீ உட்காருப்பா' என்கிற ஒற்றைக் காட்சியில் அவருக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துவிடுகிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு கம்யூனிஸ்ட்டாக வருகிறார். அவருக்கான காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லாததால், ஒரு பாடல் கொஞ்சம் ஆறுதல் வசனம் என அவரின் கதாபாத்திரம் அப்படியே கடந்துவிடுகிறது.

மாரி செல்வராஜ் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை தன் முதல் இரு படங்களில் பேசியது போல மாமன்னனிலும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அவர் வடிவமைத்திருக்கும் விதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. படத்தின் துவக்கத்தில் மாமன்னன் - ரத்தினம் என இருவரின் வாழ்வையும் பேர்லல் காட்சிகளில் காட்டி துவங்கியதில் இருந்து, சாதாரணமான ஒரு காட்சியில் கூட மிகுந்த மெனக்கெடலைக் கொட்டியிருக்கிறார். படத்தில் பேசப்படும் வசனங்கள் மூலமாகவும் தனது அழுத்தமான கருத்துகளை பதிவு செய்கிறார். ' 'இங்க ஆதங்கப்படுறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும் போல' ; ' நான் இத்தனை வருஷமா எனக்கு கிடைச்சது எனக்கான உரிமைன்னு நினைக்காம, எனக்கு அவங்க போட்ட பிச்சைன்னு நினைச்சதுதான்' என மாமன்னன் கதாபாத்திரங்கள் வசனங்கள் ஒவ்வொன்றும் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனத்தில் கொட்டப்பட்டிருப்பவை. " ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்." என்பது மாரி நம் எல்லோருக்கும் சொல்லியிருக்கும் வாழ்நாளுக்கான பாடம்.

vadivelu

இரு கும்பல் மாறி மாறி நிகழ்த்தும் சூறையாடலில் ரஹ்மானின் பின்னணி இசை அதி அற்புதம். போஸ்ட் கிரெடிட்ஸ் பாடல் ரஹ்மான் ரசிகர்களுக்கான கூஸ்பம்ஸ் மொமன்ட். மாரி செல்வராஜின் எழுத்தை நமக்கு காட்சி விருந்தாக கடத்தியதில் ஒளிப்பத்திவாளர் தேனி ஈஸ்வர் வெற்றிபெற்றிருக்கிறார். குறிப்பாக மலை தொடர்பான காட்சிகளையும், மாமன்னன், ரத்தினவேலு வீட்டில் நிகழும் காட்சிகளையும் சொல்லலாம்.

வசனங்கள், புத்தருக்கான குறியீடுகள், விலங்குகளை வைத்துச் சொல்லப்படும் உருவகங்கள்; பன்றிக்குட்டி ஓவியங்கள் ; அம்பேத்கர் , பெரியார் சிலைகள் ; உண்மைச் சம்பவங்கள் என மாரியின் சில டச் இதிலும் தொடர்ந்தாலும், இரண்டாம் பாதி நம்மைக் கொஞ்சம் அதிகமாகவே சோதித்துவிடுகிறது. படத்தில் வரும் இரு அரசியல் கட்சிகளையும் நம்மால் எளிதாக தமிழகத்தில் இருக்கும் இரு கட்சிகளுடன் நம்மால் பொருத்திப்பார்க்க முடியும். இரண்டிலும் ஆதிக்க சாதியினரின் வாக்குகளைக் கவர , செல்வாக்கு மிக்கவர்களை கட்சியில் சேர்ப்பதுண்டு. ஆனால், இதையொட்டி நடக்கும் இரண்டாம் பாதிக்கான திரைக்கதையில் எந்தவித புத்திசாலித்தனமும் இல்லை. வெறுமனே ஒரு வீடியோ கேசட்டை வைத்து ' ஒரு விரல் புரட்சி'யை ஏற்படுத்துவது எல்லாம் மாரி மாதிரியான அழுத்தமான கதை சொல்லும் படைப்பாளிக்கு நியாயம் தானா எனக் கேட்கத் தோன்றுகிறது. டிவி விவாதம்; அரசியல் களத்தில் நிகழும் அவமானம் உட்பட பல விஷயங்கள் மேம்போக்காக கையாளப்பட்டிருக்கின்றன. அதைப் போலவே முதல் பாதியில் முக்கிய கதைக்குள் செல்லவே சில நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அந்தக் காட்சிகள் ஏன் என்றும் தெரியவில்லை. இரு தரப்பினரிடையேயான சண்டை மட்டுமே பிரதானமாக இருப்பதால், அதற்குள் ஆழமான காட்சி என எதுவும் இல்லை. இடைவேளைக்குப் பிறகு சரியத் துவங்கும் படம், க்ளைமாக்ஸில் தான் சற்று எழுகிறது. மாரி செல்வராஜ் தனது குறியீடுகள் வழி பேச நினைப்பது சற்று ஓவர் டோஸ் ஆகிவிட்டதோ என்ற உணர்வும் வருகிறது. ஒருவிஷயத்தை establish செய்துவிட்ட பின்பும், மீண்டும் மீண்டும் அதை விளக்கு முயல்வது ஏன் என புரியவில்லை.

மாரி செல்வராஜ் தான் பேசும் அரசியலில் எந்தவித சமரசமும் இல்லாமல் மீண்டும் ஒருமுறை அழுத்தமான படைப்பை முதல் பாதியில் கொடுத்திருக்கிறார். அது இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்திருப்பான் இந்த மாமன்னன்.