ஈகோவை விட்டு, உறவுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்வதே இந்த `மாமன்' சொல்லும் சேதி!
திருச்சியில் சொந்த பந்தங்களுடன் வாழும் நபர் இன்பா (சூரி). தன் அக்கா கிரிஜா (ஸ்வாசிகா) மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் அவர், அக்காவுக்கு பத்து ஆண்டுகள் கழித்து பிறக்கும் பிள்ளை மீதும் பிரியத்தை கொட்டுகிறார். வருடங்கள் உருண்டோட மாமன் - மாப்பிள்ளை பிணைப்பு, அவர்களின் அலப்பறைகள் கூடிக் கொண்டே இருக்கிறது. அது எந்த அளவு என்றால், காதலித்து திருமணம் செய்து கொண்ட இன்பா - ரேகாவுக்கு (ஐஸ்வர்ய லக்ஷ்மி) இடையே விரிசல் விழுவது, அதனைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் வரும் சண்டைகள் என செல்கிறது. ஒரு கட்டத்தில் மனைவியா? அக்கா குடும்பமா? என்ற நிலை வர இன்பா எடுக்கும் முடிவு என்ன? கோபங்களும் சண்டைகளும் சரியானதா? என்பதெல்லாம் தான் மாமன்.
மாமன் மூலம் கதை ஆசிரியராக களம் இறங்கியுள்ள சூரிக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே குடும்ப அமைப்புக்குள் வரும் சிக்கல்களை, அதீத பாசம் ஒரு கட்டத்தில் சுயநலம் ஆகும் சூழல், குழந்தை வளர்ப்பு சிக்கல் போன்றவற்றை பேசி இருக்கிறார்.
நடிகர்களின் நடிப்பு பொறுத்தவரை, சூரி தனக்கு தகுந்தது போல ஒரு டெய்லர் மேட் ரோலை வடிவமைத்து அதில் கச்சிதமாக ஒளிர்கிறார். அக்காவை கருத்தாக பார்த்துக் கொள்வது, மாப்பிளையுடன் தானும் ஒரு குழந்தையாக விளையாடுவது, ஐஸ்வர்ய லெக்ஷ்மியுடன் காதல் என பாசம், ஜாலி, ரொமான்ஸ்ஸில் ஸ்கோர் செய்பவர், உறவுகளுக்குள் விழும் விரிசலை சரி செய்ய முடியாமல் தவிப்பதும், ஏங்குவதுமாக செண்டிமென்டில் அசத்துகிறார். அடுத்ததாக கவர்வது ஸ்வாசிகா, ஐஸ்வர்ய லெக்ஷ்மி. குழந்தை இல்லை என படும் அவமானங்களை மனதில் வைத்து மருகுவது, மகனின் சேட்டைகளை சமாளிக்க முடியாமல், அடிப்பது பின் அழுவது, அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அழுவது என மனதில் நிற்கிறார். ஐஸ்வர்ய லெக்ஷ்மி சூரியிடம் ப்ரெப்போஸ் செய்யும் போது காதலையும், திருமணத்துக்கு பிந்தைய பிரச்சனைகளை சின்ன சின்னதாக வெளிக்காட்டி, பின்பு வெடிப்பது என பிரமாதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். மாஸ்டர் பிரகீத் சிவனுக்கு வெல்கம். சின்ன பாத்திரம் என்றாலும் பாபா பாஸ்கர் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கீதா கைலாசம், பால சரவணன், ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் போன்றோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜாலியாக நகரும் களத்துக்கும், எமோஷனலாக நகரும் கருத்துக்கும் அழுத்தம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். காட்சியின் உணர்வுகளை கடத்த பெரிதும் உதவி இருக்கிறது ஹேஷம் அப்துல் வஹாபின் பின்னணி இசை. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் மனதில் நிற்கும்படி எதுவும் இல்லை. ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் இடைவெளியே இல்லாமல் பாடல்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. ஹ்ரிதயம் படத்தின் பொட்டு தொட்ட பாடலின் தமிழ் வெர்ஷன் கண்ணாலே பேசுமா பாடல் மட்டும் கவர்கிறது.
முன்பு சொன்னது போல சூரி இந்தக் கதைக்குள் உறவுகளின் சிக்கல்கள்களை பேசியிருக்கிறார். ஒரு பெண் கருவுறவில்லை என்றால் பெண்ணை குறை சொல்லும் ஊர் ஆணை ஏன் குறை சொல்வதில்லை என்ற கேள்வியை எழுப்புவது? மனைவி பொறுத்துப் போக வேண்டும் என நினைத்த கணவன், தானும் பொறுத்து போக வேண்டும் என நினைக்கவில்லையே என உணருவது போன்ற விஷயங்களை அழகாக கதையில் கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் பிரச்சனை, சூரி மற்றும் குடும்பத்துக்கு இடையே வரும் சிக்கல்கள் அதிர்ச்சிகரமாக இருக்கும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்பதுதான். உதாரணமாக ராஜ்கிரண் - விஜி சந்திரசேகர் ஜோடியை வைத்து கணவன் - மனைவி உறவில் வரும் சிக்கல்களையும், அதை கையாள்வது எப்படி என்பதை பற்றியும் பேச முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது மற்றும் ஒரு காட்சியாக வருகிறதே தவிர அதனால் படத்தில் எந்த அழுத்தமும் சேரவில்லை. பொதுவாகவே சூப்பர் சீனியர் ஜோடிகளின் உணர்வுப்போராட்டங்களும், காதல் நையாண்டிக் காட்சிகளும் ஒருவித ஈர்ப்பை உண்டுபடுத்தும். ராஜ்கிரணும், விஜியும் சிறப்பாகவே நடித்திருந்தாலும், எழுத்தில் போதிய அழுத்தம் இல்லாததால், 'இப்படியொரு போர்சன் படத்துல வச்சுக்கலாம் பாஸ்' என எழுதப்பட்டதாகவே அந்தக் காட்சிகள் நகர்கின்றன. இது போல படத்தில் பல விஷயங்களை சொல்லலாம். போலவே குடும்ப அமைப்புக்குள் நடக்கும் சுரண்டலையோ, அத்துமீறலையோ பற்றி பேசாமல் அதை ரொமான்டிசைஸ் செய்து கடந்து போயிருப்பது பழைய கால சீரியல் தன்மையை கொடுக்கிறது. அதிலும் , அபத்தமான புறந்தள்ள வேண்டிய விஷயங்களை எல்லாம் வலிந்து ரொமான்டிசைஸ் செய்திருக்கிறார்கள். ஐஸ்வர்ய லக்ஷ்மியின் கதாபாத்திரத்தின் புரிதல் குறைபாடு தான் பிரச்னைகளுக்குக் காரணமோ என்னும் அளவுக்கு படம் பார்ப்பவர்களையும் சேர்த்து சிக்கலில் தள்ளுகிறது இந்த மாமன். 'இதெல்லாம்' இல்லையென்றால் எவ்வளவு பெரிய மன உளைச்சல் உண்டாகும் தெரியுமா என பேசி பேசியே நமக்கு மன உளைச்சல் வர வைக்கிறார்கள்.
மொத்தத்தில் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மோதலை ஈகோவாக எடுத்துக் கொள்ளாமல், வீட்டுக் கொடுக்க வேண்டும் எனப் பேச வந்து, அதை சுற்றி வளைத்து சொல்லி பாதி கருத்தை மட்டுமே கடத்தியிருக்கிறது படம். ஓரளவுக்கு எமோஷனலனாக இருந்தாலே போதும் என்பவர்கள், இந்த மாமனுக்கு தாராளமாய் மொய் செய்யலாம்.