கேங்ஸ்டர் உலகில் ஒரு தேவதாஸின் கதையே இந்த DC
அரசு (தலைவாசல் விஜய்) என்ற முன்னாள் காவலரின் குழுவின் உறுப்பினர் தேவதாஸ் (லோகேஷ்). அரசாங்க துப்பாக்கிகளை கொள்ளையடித்த வழக்கில் போலீஸ் அரசுவின் கேங்கை தேடுகிறது. தலைமறைவாக இருக்க வேண்டிய நேரத்தில் தேவதாஸ் & கோ துப்பாக்கி கேஸை விசாரிக்கும் போலீஸையே சுட்டு கொல்லுகிறது. போலீஸிடம் இருந்து தப்பி துப்பாக்கிக்கான பணத்தை பெற்ற கிளம்புகிறது தேவதாஸ் & கோ. இந்தப் பயணத்தில் அவருக்கு வரும் ஆபத்துக்கள் என்ன? இவர்களுடன் சந்திரா (வாமிகா கபி) எப்படி இணைகிறார்? போஸீஸ் vs கேங்ஸ்டர் மோதல்ல ஜெயிக்கிறது யாரு? இதெல்லாம் தான் DC
தேவதாஸ் பார்வதி என்ற Epic காதல் கதையை ஒரு கேங்ஸ்டர் ஜானருக்குள் கொடுக்க முயற்சித்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அதை முடிந்த வரை சுவாரஸ்யமாக கொண்டு வந்திருக்கிறார்.
அனிருத்தான் இந்தப் படத்தின் முதல் ஹீரோ மற்றும் பெரிய ப்ளஸ் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை. தன்னுடைய பின்னணி மூலம் ஒவ்வொரு காட்சியையும் 100 மடங்கு சிறப்பானதாக்குகிறார். ஆக்ஷன் எமோஷன் என எல்லா உணர்வுகளுக்கும் அவர் கொடுக்கும் இசையால், இது Full on Ani's show என்றே சொல்லலாம். நடிப்பாக பார்க்கையில் லோகேஷ் கனகராஜ்க்கு உணர்ச்சிகரமாக நடிக்கும் ரோல் இல்லை. எனவே தன்னால் முடிந்த அளவு ஒரு நல்ல நடிப்பை கொடுக்கிறார். வாமிகா கபி நடிப்பு மிகவும் சிறப்பு. சலிப்புடன் ஒரே இடத்தில் வாழ்க்கையை நடத்தும் உணர்ச்சி, முதல்முறை தேவதாஸை சந்திக்கும் இடம், மருத்துவமனையில் வெடித்து அழும் இடம் என பல காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஹீரோவின் நண்பர்களாக அவினாஷ், ஜவஹர் சக்தி, பிரணவ், சின்ன ஒரு பகுதியில் வரும் சஞ்சனா, அப்பா ரோலில் கஸ்தூரி ராஜா என துணை கதாபாத்திரங்கள் நடிப்பும் கச்சிதம். கிரிஷ் தயால் வில்லத்தனம் ஓரளவு ஈர்க்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக அனிருத்தின் இசைக்கு பக்காவாக பொருந்துகிறது முகேஷ் ஜி ஒளிப்பதிவு. படத்தை ரொம்பவும் ஸ்டைலிஷாக கொடுக்க உழைத்திருக்கிறார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. பி சி ஸ்டண்ட்ஸ் சண்டைக்காட்சிகளை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறது.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால் படத்தில் எமோஷனல் கனெக்ட் இல்லை என்பது தான். இந்தப் படமே தேவதாஸ் மற்றும் அவனை சார்ந்த மனிதர்களுடைய எமோஷன் பற்றி சொல்லும் படம். அப்படியான ஒரு படத்தில் அந்த எமோஷனல் கனெக்ட் இல்லை என்பது பின்னடைவே. குறிப்பாக தேவதாஸ் - பார்வதி இடையேயான உறவில் சுத்தமாக அழுத்தம் ஏதும் இல்லை. எனவே அது சார்ந்து படம் நெடுக வரும் விஷயங்களிலும் ஈர்ப்பு இல்லை. இந்தக் குழுவை போலீஸ் துரத்துகிறது என்பதை தவிர வேறு எந்த சிக்கலும் இல்லை. எனவே ஒரு கட்டத்துக்கு மேல் போலீஸ் - கேங்ஸ்டர் துரத்தல் சலிப்பை ஏற்படுத்துகிறது. எப்போதும் போல அருண் மாதேஸ்வரன் படத்தில் வரும் அளவுக்கு அதிகமான வன்முறை இந்தப் படத்திலும் இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு மாஸ் கேங்ஸ்டர் கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு ட்ரீட் இந்த DC.