விஜய் | த்ரிஷா
விஜய் | த்ரிஷா LEO
திரை விமர்சனம்

LEO Movie Review | பார்த்திபன் தான் லியோவா... அதுவா முக்கியம் அந்த LCU..?

Johnson

அப்பாவி பார்த்திபனா? அதிரடி லியோவா? என்ற சந்தேகத்தில் நடக்கும் இரத்தக்களரி தான் லியோ.

பார்த்திபன் (விஜய்) ஹிமாச்சல் பிரதேஷில் தன் மனைவி சத்யா (த்ரிஷா) மற்றும் மகன், மகளுடன் அமைதியாக வசித்து வருகிறார். காஃபி ஷாப் தொழில், ரேஞ்சர் ஜோஷி (கௌதம் மேனன்) நட்பு என வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவத்தால், பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அந்தப் பிரச்சனையால் பார்த்திபனின் அடையாளமே சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. உண்மையிலேயே இவர் பார்த்திபன் தானா? இல்லை லியோ என்ற பெரும் போதைப்பொருள் சாம்ராஜ்ய தலைவன் ஆண்டனி தாஸின் மகனா? என்ற கேள்வி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. அதன் பின் வரும் பிரச்சனைகளை பார்த்திபன் எப்படி சமாளிக்கிறார்? உண்மையில் அவர் யார்? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பலமே விஜய் தான். அமைதியான பார்த்திபனாக, குடும்பத்திற்கு பிரச்சனை என வரும் போது சண்டையில் இறங்குவது, எமோஷனலாக உடைந்து அழுவது என பல இடங்களில் அசத்துகிறார். அடுத்த படியாக மனதில் நிற்பது சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கதாபாத்திரங்கள் தான். அவர்களின் வில்லத்தனம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. த்ரிஷாவுக்கு ஒரு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் தான் என்றாலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் எவருக்கும் பெரிதாக முக்கியத்துவம் கிடையாது. திடீரென வருகிறார்கள் திடீரென காணாமல் போகிறார்கள் அவ்வளவே.

நடிகர்களை எல்லாம் ஓவர் டேக் செய்து படத்தில் தனித்துத் தெரிவது அனிருத்தின் இசை தான். சில ஆங்கில பாடல்களாகட்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் கொடுத்த பின்னணி இசையாகட்டும் படத்தை தூக்கி நிறுத்தும் தூண் அனிதான். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பல காட்சிகளில் பிரமாதமாக இருக்கிறது. படமே ஆக்‌ஷன் ஜானர் என்பதால் அதில் தனிகவனம் செலுத்தியிருக்கிறார்கள் அன்பறிவ். சண்டைக்குப் பின் சண்டை, சண்டைக்கு பின் சண்டை என நகரும் கதை, ஆனால் எந்த சண்டைக்காட்சியும் போர் அடிக்காத விதத்தில் இருக்க வேண்டும் என உழைத்திருக்கிறார்கள். சதீஷ்குமாரின் கலை இயக்கத்துக்கு தனி பாராட்டுகள்.

இது மிகச் சாதாரணமான (history of violence படத்திற்கான ட்ரிப்யூட் என்பதை டைட்டில் கார்டிலேயே போடுகிறார்கள்) ஆக்‌ஷன் கதைதான். ஆனால் படத்தின் எழுத்தாளர்கள் லோகேஷ், ரத்னகுமார், தீரஜ் ஆகிய மூவரும் அதை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார்கள். படத்தின் துவக்கத்தில் பார்த்திபன் கதாபாத்திரம் ஒரு விஷயத்தை சொல்வார். ஹைனா எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும் போது அமைதியாக தான் இருக்கும். அந்தக் குடும்பத்தை அது பிரியும் சூழல் வரும்போது மிக ஆக்ரோஷமாக மாறும். இந்த setupக்கான payoffதான் பின்னால் வரும் மொத்த கதையுமே. படம் வெளியாகும் வரை இது LCUவா இல்லையா என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. படம் பார்க்கவிருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்துவிடக்கூடாது என்பதால் அது சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். இதைத் தாண்டி விஜய்யின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் வைப்பது, லோகியின் சிக்னேச்சர் ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியிருந்த விதம், என பல விஷயங்கள் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை கூட்டுகிறது.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஏனோ மிஸ்ஸிங். குறிப்பாக ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு மூட நம்பிக்கை சார்ந்த காட்சி சுத்தமாக ஒட்டவில்லை. மேலும் அர்ஜுன் - லியோ இடையேயான பிரச்சனை என்ன என்பதும் தெளிவாக இல்லை. அர்ஜுன் மட்டுமல்ல, படத்தில் இன்னும் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் ஒரு முழுமையான கதாபாத்திரம் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பார்த்திபனா? லியோ?வா என்ற குழப்பத்தை ரிப்பீட்டாக காட்சிகள் வருவது ஒரு கட்டத்துக்கு மேல் அயர்ச்சியை தருகிறது. படத்தின் நீளமும் ஒரு கட்டத்துக்கு மேல் சோதிக்கிறது.

இது மிக வன்முறையான படம், போதைப் பொருள், புகைப்பிடிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்தக் கதை களத்துக்கு அவசியமானது. எனவே இது போன்ற விஷயங்கள் இருந்தால் அந்தப் படத்தை பார்க்க மாட்டேன் என்பவர்கள் தவிர்க்கலாம். கண்டிப்பாக இது குழந்தைகள் பார்ப்பதற்கு உகந்தது அல்ல.

வீடியோ விமர்சனத்திற்கு:

மொத்தத்தில் இது அதிரடியான ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கான விருந்து, விஜய் ரசிகர்களுக்கு ராஜ விருந்து. படத்தின் குறைகளை சரி செய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக இருந்திருக்கும்.