Legend Saravanan Leader
திரை விமர்சனம்

தெறியான ஆக்ஷன், விஸ்வாசமான செண்டிமெண்ட் பேசும் லீடர்! | Leader Review | Legend Saravanan

கமர்ஷியல் களத்தில் விறுவிறுப்பாக ஒரு மாஸ் படம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைந்துள்ளார்.

Johnson

மகளுக்காக ஆபத்தான மிஷனில் இறங்கும் தந்தையின் கதையே `லீடர்'

சக்திவேல் (லெஜெண்ட் சரவணன்) தூத்துக்குடியில் தன் மகளுடன் வசிக்கிறார். மெக்கானிக் ஷெட்டில் வேலை, மகள் ஐரினை (இயல்) பள்ளியில் விடுவது, திருப்பி அழைத்து வருவது என ஒரு சராசரி அமைதி வாழ்க்கையை வாழ்கிறார். தூத்துக்குடியில் பெரிய சம்பவத்தை திட்டமிடும் டெவில் (சந்தோஷ் பிரதாப்) அந்த ஊரில் துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சால்ட் (பாகுபலி பிரபாகர்) உதவியுடன் பல கன்டெய்னர்களை போர்ட்டுக்குள் இறக்குகிறார். கன்டெய்னரில் ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகிக்கும் காவலதிகாரி இந்திரா (ஆண்ட்ரியா) அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரே புள்ளியில் இணையும் போது பல மர்மங்கள் வெளியாகிறது. அவை என்ன? துறைமுகத்தில் டெவில் போடும் திட்டம் என்ன? சக்திவேல் உண்மையில் யார்? இதை எல்லாம் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

Leader

கமர்ஷியல் களத்தில் விறுவிறுப்பாக ஒரு மாஸ் படம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைந்துள்ளார்.

லீட் ரோலில் லெஜெண்ட் சரவணன் கடந்த படத்தை விட சற்று முன்னேறி இருக்கிறார். லெஜெண்டில் மீம் மெட்டீரியலாக பார்க்கப்பட்டவர், இம்முறை தோற்றத்தை கச்சிதமாக பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். ஆனால் இன்னும் க்யூ கொடுத்ததும் பேசுவது போல் வசனம் பேசுவது, சில உணர்ச்சிகளை கடத்த தடுமாறுவது என இன்னும் பயிற்சி வேண்டும் அண்ணாச்சி. காதலனை நினைத்து வருந்துவது ஒரு பக்கம், கண்டெய்னரை குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாவது என ஆண்ட்ரியா கொடுக்கப்பட்ட வேலையை முடித்திருக்கிறார். மேலதிகாரியாக ஷ்யாம் சரவணனை பற்றிய மர்மத்தை ஆராய பரபரப்பாகிறார். பாயல் ராஜ்புத் ஃபிளாஷ்பேக் ஹீரோயினுக்கான வேலையை செய்கிறார். மகளாக வரும் இயல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கொடூர வில்லனாக சந்தோஷ் பிரதாப் முடிந்த வரை வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, படம் வேகமெடுக்க சற்று தாமதமானாலும், கண்டெய்னர் வெளியே வந்த பின்னால் திரைக்கதையும் பரபரப்பாகிறது. இடையே ஃபிளாஷ்பேக் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல வந்து பின்னர் மறுபடி கியர் மாற்றி வேகமாகிறது. என்ன நடக்கிறது என்ற மர்மத்தை உருவாக்கி, கடைசியாக இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்ற ரிவீல் வரும் ஐடியா பழசு என்றாலும், இந்தப் படத்துக்கு அது நன்றாக வேலை செய்துள்ளது. வெங்கடேஷ் ஒளிப்பதிவு கமர்ஷியல் மீட்டருக்கு ஏற்றவாறு காட்சிகளை பதிவு செய்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரியதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் பரபரப்பு கூட்டுகிறார். அதிலும் `முத்தை திரு' பாடலை பயன்படுத்தியது அட்டகாசம். மகேஷ் மேத்திவின் சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பெரிய பலம்.

Leader

இதில் குறைகள் என பார்த்தால், லாஜிக்காக இதெல்லாம் எப்படி நடக்கும் பாஸ் என்ற கேள்விகள் இருக்கிறது. அதனை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும், டிவிஸ்ட் வைப்பதற்கு ஏற்றவாறு வளைக்கப்பட்டுள்ள திரைக்கதை எங்கெங்கோ செல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் தேவைக்கும் மீறி இடம்பெற்றிருக்கும் வன்முறையும் ஒரு மைனஸ். மேலும் `தெறி', `விஸ்வாசம்' போன்ற படங்களும் அடிக்கடி நியாபகம் வருவதையும் தடுக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு கச்சிதமான படம் இல்லை என்றாலும், பொழுதுபோக்கிற்கு எந்த குறையும் வைக்காத ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னர்.