குற்றம் புரிந்தவன் pt web
திரை விமர்சனம்

குற்றம் புரிந்தவன் | நாம எவ்ளோ கெட்டவங்கன்னு மத்தவங்களுக்குத் தெரியாது.. நமக்குத்தான் தெரியும்!

தன் நெஞ்சம் அறிந்து பொய் சொல்லும் ஒருவன், அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே சோனி லைவில் வெளியாகியிருக்கும் 'குற்றம் புரிந்தவன்' தொடரின் ஒன்லைன்.

karthi Kg

தன் நெஞ்சம் அறிந்து பொய் சொல்லும் ஒருவன், அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே சோனி லைவில் வெளியாகியிருக்கும் 'குற்றம் புரிந்தவன்' தொடரின் ஒன்லைன்.

கிராமத்தில் மருந்தாளராக இருக்கும் பாஸ்கரன் தனது மனைவியுடன் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார். அரசு ஊழியராக இருந்தாலும், வெளியே தெரியாமல் ஊருக்குள் பலருக்கும் அவசர மருத்துவம் பார்த்துவந்து தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தன் மகள் வழி பேரனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பாஸ்கரனை வந்து சேர்கிறது. அவனுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னைக்கு, தன் வாழ்நாள் சேமிப்பை கொடுக்க முடிவெடுக்கிறார். இப்படியானதொரு தருணத்தில், தீடீரென பாஸ்கரனின் வீட்டிற்கு உதவி கேட்டு வருகிறார் ஒரு பெண்ணின் தந்தை. யார் அவர்? அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது?

பாஸ்கரனாக பசுபதி. விருமாண்டி படத்தில் பசுபதி பொய் சொல்லி நீதிமன்றத்தில் வென்றுவிட, வெளியே வரும் நெப்போலியன்,” மனசு தாண்டா கோர்ட். அதுக்கு அப்புறம் இதெல்லாம். நான் நிம்மதியா தூங்கிடுவேன். உன்னால முடியுமா” என கேட்டுவிட்டு நகர்வார். கிட்டத்தட்ட இந்தத் தொடரில் பசுபதி கதாபாத்திரத்திற்கு குற்றமும் தண்டனையும் இதுதான். தன் நெஞ்சம் அறிந்து அவர் சொல்லும் பொய்கள் அவரை எந்த அளவுக்கு வாட்டி வதைக்கிறது என்பதே இந்தத் தொடர். க்ரைம் த்ரில்லர், பாலியல் கொடுமைகள் என இந்தத் தொடர் பலவற்றைப் பேசினாலும், பாஸ்கர் கதாபாத்திரத்தின்வழி பசுபதி நமக்குள் அவர் அனுபவிக்கும் மனவேதனையை கடத்திவிடுகிறார்.

காவல்துறையில் கீழ்நிலை ஊழியராக விதார்த். எல்லா மகள்களுக்கும் அப்பாதான் சூப்பர்ஹீரோ என்பதால், விதார்த் எப்படியும் காணாமல் போன பெண் குழந்தைகளை கண்டுபிடித்துவிடுவார் என நம்புகிறாள் விதார்த்தின் குழந்தை. கையறு நிலையில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதால் வழக்கம் போல விதார்த் அதற்கு இயல்பாகவே பொருந்திப் போகிறார்.

பெண் குழந்தையை பறிகொடுத்துவிட்டு தேடும் தாயாக லட்சுமிபிரியா சந்திரமௌலி, ட்யூசன் வாத்தியாராக ஜானி, சர்ச் பாஸ்டராக அஜித் கோஷி, பாஸ்கர் மனைவியாக லிஸி ஆன்டனி பல பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சோனி லைவில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் போலவே இதிலும் ஜானிக்கு நல்லதொரு வேடம். சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு ட்விஸ்ட் என்கிற ஃபார்முலாவுடன் தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வமணி முனியப்பன். யார் குற்றவாளியாக இருப்பார் என்கிற whodunit பாணி ஒருபக்கம், பசுபதி கதாபாத்திரத்திற்கு இருக்கும் ஆற்றாமை ஒரு பக்கம் என இரண்டு பக்கத்திலும் சரியாகத் திட்டமிட்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. “ நாம எவ்ளோ நல்லவங்கன்னு நமக்குத் தெரியாது, மத்தவங்களுக்குத் தான் தெரியும்.. நாம எவ்ளோ கெட்டவங்கன்னு மத்தவங்களுக்குத் தெரியாது, நமக்குத்தான் தெரியும்” என கதையை ஒரு சில வரிகளில் சொல்லிச்சென்றது சிறப்பு. SN பிரசாத்தின் டைட்டில் ஸ்கோர் ஒருவித மென்சோகத்தை நமக்குள் கடத்துகிறது.

மனிதன் தன்னையும், தன்னை சுற்றத்தாரையும் காத்துக்கொள்ள எவ்வித எல்லைக்கும் செல்வான் என்பதே மையக்கரு என்றாலும், லிஸி கதாபாத்திரத்தின் போதாமை last actக்கு நியாயம் செய்ய மறுக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து இன்னும் கலைத்துறை பேச வேண்டும். ஆனால், அத்தகைய காட்சிகளை இன்னும் சென்சிபிளாக கையாண்டிருக்கலாம். அதே போல், இறுதி ட்விஸ்ட் கதையில் இருந்து முற்றிலுமாய் விலகி இருப்பதால் ஷாக் வேல்யூ ட்விஸ்ட்டாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதிர்ச்சிகர காட்சிகள் இருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்தல் நலம்.

எபிசோடுக்கு எபிசோடு ட்விஸ்ட் விரும்பு ரசிகர்கள் நிச்சயம் இந்தத் தொடரை BINGE WATCH செய்யலாம்.