தன்மானம் + மிடில் க்ளாஸ் என்ற டபுள் பைக்கில், ஸ்டாண்டிங்கில் செல்ல ஆசைப்படும் குடும்பஸ்தனின் கதை.
நவீன் (மணிகண்டன்) குடும்பத்தை எதிர்த்து வெண்ணிலாவை (சான்வே மேக்னா) காதல் திருமணம் செய்கிறார். இழுத்துப் பிடித்து குடும்ப செலவை சமாளிக்கும் நவீனுக்கு, மனைவியின் ஐ ஏ எஸ் கனவு, வீட்டை புதுப்பிக்க விரும்பும் அப்பாவின் ஆசை, ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மாவின் விருப்பம் என புது பட்ஜெட் கையில் தாக்கல் செய்யப்பட, இன்ப அதிர்ச்சியாக சீக்கிரமே அப்பா ஆகப் போகிறார் என்ற சர்பிரைஸும் போனஸாக கிடைக்கிறது. இது பத்தாது என அக்காவின் கணவருடன் ஈகோ, புது வேலை தேட வேண்டிய சூழல் என திரும்பும் திசை எல்லாம் வாழ்க்கை அவரை பந்தாடுகிறது. செலவை சமாளிக்க வாங்கும் கடன் ஒருபுறம், எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் மறுபுறம். இதன் பின் என்ன ஆகிறது என்பதே குடும்பஸ்தன்.
படத்தின் முதல் பலமே இதனை அத்தனை மனிதர்களாலும் கனெக்ட் செய்ய முடியும் என்பதுதான். "கையில ஒரு ரூபா கூட இல்லடானு யாராவது சொல்லும் போது அத நான் நம்புனது இல்ல. ஆனா இன்னைக்கு நானே அந்த நிலைமைல இருக்கறப்போதான் தெரியுது" என படத்தில் வரும் அத்தனை சினாரியோவும் இங்கு அநேக குடும்பஸ்தர்களோடு பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தும். படத்தின் முதல் பாதி முழுக்க ஒவ்வொரு காட்சியையும் சிரிப்பு ரோலர்கோஸ்டராக நகர்த்துவதால், படம் பறக்கிறது. எந்த காட்சியிலும் ஒரு தொய்வின்றி, பல காட்சிகளில் பட்டாசாக வெடிக்கிறது நகைச்சுவை. படத்தின் கதை, திரைக்கதை எழுதிய ராஜேஷ்வர் - பிரசன்னா கூட்டணிக்கு வாழ்த்துகள். பிரசன்னாவின் வசனங்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன்.
நடிப்பு பொறுத்தவரை மணிகண்டனுக்கு இது பெரிய லிஃப்ட். குடும்ப செலவுகளை நினைத்து திணறுவது, தனியாக உட்கார்ந்து புலம்புவது, அரிசி, பருப்பு, மூனு முட்டை இருக்கிறது என பெருமூச்சு விடுவது என நம்மை திரையில் பிரதிபலிக்கிறார். இடைவேளை காட்சியில் சிரிக்கவும், க்ளைமாக்ஸில் கலங்கவும் வைக்கிறார். இதற்கு அடுத்ததாக நம்மை கவர்வது, அக்கா கணவராக வரும் குரு சோமசுந்தரம். மாப்பிள்ளையை மட்டம் தட்ட காத்திருப்பது;சீனா கிளம்ப தயாராவது; தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுவது என அசத்தல். சகோதரியாக வரும் நிவேதிதா சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் படி நிறைவான நடிப்பு. சான்வே, கணவருடன் சண்டையிடும் காட்சி, எங்களுக்கு எல்லாம் மான ரோஷம் இல்லையா எனக் கேட்கும் காட்சிகளில் தனித்து தெரிகிறார். ஆர் சுந்தர்ராஜன், குடசநாடு கனகம், பாலாஜி சக்திவேல், முத்தமிழ், ஜென்சன், பிரசன்னா கச்சிதமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
சுஜீத் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, பல லைவ் லொகேஷன்களில் பதிவு செய்து, பார்க்கும் நமக்கும் ஒரு லைவ் உணர்வை கொடுக்கிறது. வைசாக் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தை எனர்ஜியாக கொண்டு செல்கிறது.
படத்தின் மைனஸ், முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பு, இரண்டாம் பாதியில் குறைகிறது. குறிப்பாக பேக்கரி மற்றும் கடன்காரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலேயே அதிகமாக சுற்றுகிறது. அதனால் கொஞ்சம் சுவாரஸ்யமும் குறைகிறது. இன்னொரு பக்கம் குரு சோமசுந்தரம் சம்பந்தப்பட்ட சைனீஸ் காமெடிகளும் கொஞ்சம் சோதிக்கிறது. மணி - சோமு இடையேயான ஈகோ மோதல் இன்னும் கொஞ்சம் சிறப்பான விதத்தில் முடித்திருக்கலாம், மிக அவசரமாக ஒரு முடிவை கொடுத்தது போல் இருந்தது. க்ளைமாக்சில் மணிகண்டன் சொல்லும் விஷயங்கள் மூலம் படம் கொஞ்சம் எமோஷனல் ஆனாலும், அதை மீண்டும் காமெடியாக மாற்றுவதால் அந்த உணர்வு சற்று குறைகிறது. குடும்ப அமைப்பில் பெண்களில் நிலை பற்றிய வாதத்தை முன் வைக்கும் காட்சிகள் இருந்தாலும், அவை மிக மேலோட்டமாகவே நின்றுவிடுவது சோகம்.
மொத்தத்தில் இந்தப் படம் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், பெருவாரியாக நல்ல பொழுதுபோக்கையும், சிரிப்பையும் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வசை சொற்களோ, ஆபாச காட்சிகளோ, வன்முறையோ இல்லை என்பது கூடுதல் சிறப்பு.