ஒரு கொலையும், அதனால் உருவாகும் சிக்கல்களுமே 'ரிவால்வர் ரீட்டா'
பாண்டிச்சேரியில் பெரிய டான் டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்). முன்பகை காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிடுகிறது ஒரு கும்பல். அதே பாண்டியில் தன் குடும்பத்தோடு வசித்துவருகிறார் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்). இவருக்கு ஏரியா போலீஸ் உடன் ஒரு பிரச்சனை ஏற்பட எப்படியாவது ரீட்டாவை பழி தீர்க்க காத்திருக்கிறார் அந்த போலீஸ். எதிர்பாராமல் நடக்கும் ஒரு கொலையால் இந்த இரண்டு கதையும் இணைகிறது. அதன் பின் நடப்பவை என்ன? வரும் ஆபத்திலிருந்து ரீட்டா தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
இது போன்ற த்ரில்லர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சம்பந்தமே இல்லாத சிலரது வாழ்க்கை ஒரு சம்பவத்தில் இணையும். இன்னொன்று ஒரு சம்பவத்தால் இணையும் சிலரது வாழ்க்கையில் எதிர்பாராமல் அமையும் ஒரு சம்பந்தம். இதில் ரீட்டா இரண்டாவது வகை. அதில் முடிந்த அளவு காமெடியும் சேர்த்து சுவாரஸ்யத்தை சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சந்துரு.
லீட் ரோலில் கீர்த்தி சுரேஷ், தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்வது, எதிரிகளை குழப்ப முயல்வது, சதி திட்டம் தீட்டுவது, இதோடு சேர்ந்து காமெடி டெம்போவையும் கைக்குள் வைத்திருப்பது என படத்தை ஓரளவு தாங்கி பிடிக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் ஷோ ஸ்டீலர் ராதிகா தான். இத்தனை வருட சினிமா அனுபவமும், அவரது திறமையும் போட்டி போட்டு திரையில் மின்னுகிறது. இந்தப் படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் காமெடி சரவெடி தான். வெள்ளந்தியாக 'நம்ம வீட்டுக்குள்ளயே புதைச்சிட்டா' எனக் கேட்பதில் துவங்கி, இறுதியில் 'அத்தை சொல்றேன்' என்பது வரை அதகளம் செய்கிறார். ஒரே வசனத்தை ஒரு இடத்தில் காமெடியாக சொல்வது, இன்னொரு இடத்தில் எமோஷனாக சொல்வது என காட்டும் வித்தியாசம் எல்லாம் அவர் OG என்பதை தெளிவாக காட்டுகிறது. இன்னும் சொல்வதென்றால், ராதிகாவுக்கு பதில் வேறு யார் நடித்திருந்தாலும், இந்தப் படத்தை பார்க்கவே முடியாத அளவு மோசமானதாகி இருக்கும் எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அந்த அளவு ஒன்றை ஆளாக படத்தை தாங்கி இருக்கிறார்.
இதற்கு அடுத்து ஈர்ப்பது அஜய் கோஷ். சின்ன பாத்திரம் தான், படம் முழுக்க அவருக்கு ஒரே வேலை தான், அதை வைத்து உருவாக்கப்பட்ட காமெடி எல்லாம் சிக்ஸர் தான். அதே போல ரெடின் கிங்ஸ்லியின் காமெடி ஒரு இடத்தில் மட்டும் ப்ளாஸ்ட். சுனில் ஒரு வழக்கமான வில்லன் ரோல், சும்மா வந்து போகிறார். இவர்கள் தவிர சூப்பர் சுப்புராயன், ஜான் விஜய், அகஸ்டின், கதிரவன், சென்ட்ராயன், ப்ளேடு சங்கர், கல்யாண், சுரேஷ் சக்கரவர்த்தி, காயத்ரி ஷான், அக்ஷிதா அஜித் எனப் பலர் இருக்கிறார்கள், அவ்வளவே. இந்தப் படத்தின் நிகழ்கால கதைக்கு 18 வருடங்களுக்கு முன்பு நடந்த இரு சம்பவங்களை சொல்லி ஆரம்பித்ததும், அது ஒரு பூமராங் போல எப்படி திரும்பி எல்லோரையும் தாக்க வருகிறது என்றும் எழுதப்பட்ட திரைக்கதை படத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது. தொழில்நுட்ப ரீதியில் ஷானின் பின்னணி இசை, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு ஆகியவை இரண்டும் படத்தை பலப்படுத்துகிறது.
இந்தப் படத்தின் குறைகள் என்றால், மிக வசதியாக எழுதப்பட்டிருப்பதே. ஒரு கும்பலுக்கு தேவையான ஒன்று கீர்த்தி வீட்டில் இருக்கிறது, அந்த கும்பலால் எளிதாக அந்த வீட்டுக்குள் நுழைந்து எடுக்க முடியும். ஆனால் அந்த கும்பல் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலையை தான் செய்கிறது. அது ஏன் என்பதற்கான ஒரு லாஜிக்கும் இல்லை. காமெடி படத்திற்குள் இவ்வளவு விஷயம் பார்க்க வேண்டியது இல்லை என்றாலும், படம் முழுக்க இப்படியான காட்சிகள் ஏராளம். மேலும் படம் முழுக்க பல விஷங்கள் வசனத்தின் மூலம் மட்டுமே கடத்தப்படுவது அயற்சியை தருகிறது. ஜான் விஜய் சப்மந்தப்பட்ட காட்சிகளில் எதுவும் சுவாரஸ்யமே இல்லை, ரெடினின் ஒரு காட்சி தவிர மற்ற அனைத்தும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. படத்தில் அவரை ரூமில் போட்டு போட்டு அடைத்து வைக்கும் காட்சி நமக்கும் நிம்மதியை தருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்ராயன் வைத்து ஒரு காமெடி முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது ஆபாச வசை சொல் என்பதால் சென்சார் அந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் வெட்டி எரிந்திரிருக்கிறது, எனவே அந்த காட்சி வைக்கப்பட்டதன் அவசியமே தோல்வியில் முடிந்திருக்கிறது.
இப்படியான பல சிக்கல்களை சரி செய்து கதையை இன்னும் வலுப்படுத்தி இருந்தால், இந்த ரிவால்வர் ரீட்டா, மறக்க முடியாத காமெடி ப்ளாஸ்ட்டாக அமைந்திருக்கும்.