காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா காசேதான் கடவுளடா
திரை விமர்சனம்

காசேதான் கடவுளடா | ஒரிஜினல் படத்தை யூடியூப்லயாவது பார்த்திருக்கலாமே சார்..!

karthi Kg

தன் வீட்டிலேயே திருட ஐடியா போடும் கும்பல் அதைச் சாதித்தார்களா இல்லையா என்பதே காசேதான் கடவுளடா படத்தின் ஒன்லைன்.

காசேதான் கடவுளடா

தேங்காய் சீனிவாசன், முத்துராமன், MRR வாசு, ஸ்ரீகாந்த், லட்சுமி, மனோரமா, ரமா பிரபா என பலர் நடித்து நம்மைப் பலமுறை சிரிக்க வைத்த படத்தை மீண்டும் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை இப்போதைய 2k கிட் ஒருவர் பார்த்தாலும், அவராலும் சில காட்சிகளில் சிரிக்க முடியும். வரிக்கு வரி காமெடி வசனங்களை கொட்டித் தீர்த்திருப்பார்கள். 1972ல் சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான `காசேதான் கடவுளடா’ படத்தின் மார்டன் வெர்ஷனைதான் ஆர்.கண்ணன் அதே பெயரில் இயக்கியிருக்கிறார்.

சகா (தலைவாசல் விஜய்), ராமு (சிவா) இவர்களின் தந்தை பெரிய பணக்காரர். ஆனால் தன் சொத்தை பொறுப்பில்லாமல் சுற்றும் தன் மகன்களுக்கு எழுதி வைக்காமல் மூத்த மகன் சகாவின் மனைவி (ஊர்வசி) பெயரில் எழுதி வைக்கிறார். எனவே அந்தக் குடும்பமே பணத்திற்கு ஊர்வசிவை மட்டுமே நாடி இருக்கிறது. தங்கை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல, உறவினரின் கடனை அடைக்க, நண்பனின் தொழிலுக்கு உதவ என பல விதங்களி பணத்தேவை ஏற்படுகிறது ராமுவுக்கு. எனவே சொந்த வீட்டிலேயே திருட திட்டமிடுகிறார். அவரின் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.ஒரிஜினல் கதையில் வரும் தங்கைக்கான பிரச்னை, க்ளைமேக்ஸ் போன்ற சிலவற்றை மாற்றிவிட்டு திரைக்கதையில் பெரிய மாற்றமில்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் ஆர். கண்ணன்.

காசேதான் கடவுளடா

பொதுவாக ரீமேக் படங்கள் என்றாலே அதில் பெரிய சிக்கல் ஒன்று உண்டு. அதன் ஒரிஜினல் படத்துடன் ரீமேக் ஒப்பிடப்படும். தமிழில் இருந்து தமிழுக்கே ரீமேக் செய்யப்பட்டு பெரிய அளவில் பெயர் பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நான் அவன் இல்லை, பில்லா போன்ற சில தான் உண்டு. வெறுமனே ரீமேக் ரைட்ஸ் வாங்கிவிட்டோம் என்ற அழுத்தத்தால் மட்டும் படத்தை எடுப்பவர்கள் இன்னொரு ரகம். காசேதான் கடவுளடா இந்த இரண்டாவது ரகத்துக்கும் கீழான ரகம்.

இந்தப் படத்தை எழுதுவதில் எந்த மெனக்கெடலும் இல்லை என்பது படத்தின் முதல் காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. ரீமேக்கிற்கு ஏற்றபடி காட்சிகளை சுவாரஸ்யமாக எழுதுவதோ, ஃப்ரெஷ்ஷான காட்சிகளோ எதுவும் இல்லை. அதனாலேயே படம் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதோ, அதில் வரும் சில அவுட் டேட்டட் வசனங்களோ நம்மை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. படத்தில் இருக்கும் பாராங்கல் பிரச்னைகளுக்கு நடுவே இந்த காலாவதி வசனங்கள் எல்லாம் ஜூஜூபி. காட்சிகளையும் எவ்வளவு மோசமாக எழுதி இயக்க முடியுமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்தக் காட்சியிலும் காமெடி ஒர்க் அவுட்டாகவில்லை. நடிகர்களும் கடமைக்கு நடித்தது போல் தான் இருந்தது. குறைந்தபட்ச மேக்கப், மெனக்கெடல் என எதுவுமே இல்லாமல் அவ்வளவு அமெச்சூராக இந்தப் படத்தை அணுகியிருக்கிறார். பச்சையாகத் தெரியும் டூப், பேப்பரில் வரைந்து வைத்தது போலிருக்கும் லாக்கர் செட்டப் . அதெப்படி ஒரு படத்தில் எல்லா டிப்பார்ட்மெண்ட்டும் ஒப்பேற்ற முடியும். ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்கள் இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்கிற முனைப்பு மட்டுமே இருப்பது போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

சிவா தனது சிறந்த நடிப்பிற்காக பெயரெடுத்தவர் கிடையாதுதான். ஆனால் இதில் அவர் நடிப்பதைப் பார்த்தால் ஒரு சின்ன எஃபர்ட் கூட எடுத்திருப்பதாக தோன்றவில்லை. எந்தக் காட்சிக்கும் ரீடேக் எல்லாம் போயிருக்க மாட்டார்கள் போல. ஊர்வசி தன்னால் முடிந்த வரை காட்சியில் ஒரு ஹூமரைக் கொண்டு வர போராடுகிறார், ஆனால் ஸ்க்ரிப்டில் இருந்தால் தானே ஸ்க்ரீனில் வரும். ப்ரியா ஆனந்த் தன்னாலானதை செய்ய முயல்கிறார், ஆனால் அவரை வெறும் ஒரு க்ளாமர் பாடலுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு ஓரங்கட்டி விடுகிறார்கள். நடிகர்களே இரண்டாவது டேக் போய்க்கலாமே என்று சொல்லியிருந்தால்கூட, அதெல்லாம் எதுக்குங்க என வேகவேகமாக முடித்திருப்பார் போல கண்ணன்.

யோகிபாபு டப்பிங்கில் போய் புது டயலாக் சேர்க்கிறேன் என்ற கொரளி வித்தையை எப்போது நிறுத்துவாரோ தெரியவில்லை. ஒரு காட்சியில் “கம்பீரம் எல்லாம் சரத்குமாருக்கு தான் செட் ஆகும்” என்கிறார், கம்பீரம் என்ற பெயரில் சரத்குமார் ஒரு படம் நடித்திருக்கிறார் என்பது புரிந்து ஆடியன்ஸ் அதற்கு சிரிப்பதற்குள், ஆர்.கண்ணன் அடுத்த படமே எடுத்து முடித்துவிடுவார். இவர்கள் தவிர விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், சிவாங்கி, கருணாகரன், மனோபாலா, புகழ், சுப்பு பஞ்சு, சித்தார்த் விபின் என பலர் வந்து போகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரே ஒருவர் கூட நம் மனதில் நிற்கும்படி இல்லை.

இந்தப் படம் வெள்ளிக்கிழமை காலை வெளியாக வேண்டியது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாகவில்லை. இன்று காலையும் வெளியானதா இல்லை என்று தெரியாமல், திரையரங்கிற்கு சென்று விசாரித்துவிட்டு படத்தைப் பார்த்து வந்தோம். கிட்டத்தட்ட நாற்பது பேருடன் படம் பார்த்தோம். அந்த நாற்பது பேர் இந்த படத்தைப் பார்க்க ஒரு எஃபர்ட் எடுத்திருப்பார்கள் அல்லவா, அதைக்கூட இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் டீம் எடுக்கவில்லை என்பது தான் பெருஞ்சோகம்.

சந்திரமுகி படம் வந்த போது ஒரு சொற்றொடர் செம்ம ஃபேமஸ். சந்திரமுகி பார்த்த அனைவரும் ஒருமுறையாவது மணிச்சித்திரதாழ் பார்க்க வேண்டும். மணிச்சித்திரதாழ் பார்த்தவர்கள் தயவு செய்து சந்திரமுகி பார்த்துவிடாதீர்கள் என்பது தான் அது. சந்திரமுகி கூட காமெடி படம் என்கிற ரீதியில் சிரித்துக் கடக்கலாம். ' காசேதான் கடவுளடா' எல்லாம் படம் பார்ப்பவர்களைத் துச்சமென நினைக்கும் மெத்தனம் மட்டுமே.