சுய மரியாதைக்காக சாமானியன் நடத்தும் போராட்டமே `என்ன விலை'
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் வீசும் சில்லறை காசுகளை நீரில் மூழ்கி சேகரித்து, அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருபவர் தவசி (கருணாஸ்). மகனின் படிப்பு, தங்கையின் திருமணம் என குடும்ப சுமை இருந்தும் நேர்மையாக வாழ்க்கை நடத்துபவர். எப்போதும் போல கடலுக்கு செல்லும் அவருக்கு ஒரு பதக்கம் ஒன்று கிடைக்கிறது. அதை நேர்மையாக போலீஸிடம் ஒப்படைக்கிறார். அந்தப் பதக்கம் தங்கம் என அறிந்து கொள்ளும் காவலர் அதனை விற்று பணம் பார்க்க நினைக்கிறார். அந்தப் பேராசைக்கு பலியாடாக மாற்றுகிறார் தவசி. இதன் பின்னர் நடக்கும் சில எதிர்பாரா திருப்பங்களால் செய்யாத குற்றத்துக்காக குற்றவாளியாக்கப்படுகிறார் தவசி. அவருக்கு வழக்கறிஞர் காஞ்சனாவாக (நிமிஷா சஜயன்) ஒரு புதிய நம்பிக்கை கிடைக்கிறது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளும், தவசியின் உண்மை வெளிவருவதற்கான போராட்டமும்தான் என்ன விலை படத்தின் மையக்கரு.
சாமானியர்களின் பக்கம் நின்று நியாயத்தை பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜீவ் பழூர். சீரியஸ் + காமெடி கலந்து அத்தனை செய்ய நினைத்திருக்கிறார்.
நடிகர்கள் பொறுத்தவரை தவசி கதாபாத்திரத்தில் கருணாஸ் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். சாதாரண மனிதனின் பயம், குழப்பம், அவமானம், கோபம் என ஒவ்வொரு உணர்வையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, தனது இழந்த மானத்தைப் பற்றி பேசும் காட்சிகளில் கருணாஸின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. நிமிஷா சஜயனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். வழக்கறிஞராக நீதிமன்றத்தில் அவர் முன்வைக்கும் வாதங்கள் படத்தின் முக்கியமான பகுதியாக அமைகின்றன. தந்திரமான போலீஸ் பாத்திரத்தில் மோகன் ராம் கவனம் ஈர்க்கிறார்.
சட்டம் முக்கியமா, நியாயம் முக்கியமா என்ற விவாதத்தை மையமாக வைத்து படம் எழுதப்பட்ட விதம் நன்று. அதே சமயம் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அங்குதான் சறுக்குகிறது என்ன விலை. இரண்டாம் பாதி முழுக்கவே கோர்ட் ரூம் டிராமாவாக இருந்தாலும், அதில் வரும் வாதங்கள் மிகவும் சோர்வை வரவழைப்பதாகவே இருக்கிறது. கருணாஸ் எடுக்கும் முடிவும், அதன் விளைவுகளும் என எதிலுமே இயல்புத் தன்மை இல்லை என்பதும் நம் பொறுமையை சோதிக்கிறது. அதனாலேயே சில இடங்களில் கதையின் நகர்வு நீளமாகத் தோன்றுகிறது.
ராமேஸ்வரத்தின் கடல், மக்கள் வாழ்க்கை மற்றும் சுற்றுப்புறத்தை இயல்பாக பதிவு செய்துள்ள ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். சாம்.சி.எஸ்-ன் இசையும் கதையின் உணர்வுகளுடன் பயணிக்கிறது.
மொத்தத்தில் ‘என்ன விலை’ ஒருவரின் நேர்மை, உண்மை, மானம் ஆகியவற்றுக்கு இந்த சமூகத்தில் என்ன விலை? என்ற கேள்வியை முன்வைக்கிறது. கேள்விகளில் இருக்கும் அழுத்தத்தை போல, படத்தில் சுவாரசியம் இருந்திருந்தால், நம்முடைய நேரத்திற்கு நல்ல விலையாக அமைந்திருக்கும் இந்த `என்ன விலை'.