Karthi Sardar 2
திரை விமர்சனம்

உலகைக் காக்கும் மிஷனில் அப்பா, மகன்.. சுவாரஸ்யமாக இருக்கிறதா சர்தார் 2? | Sardar 2 Review | Karthi

படத்தின் மிகப்பெரிய பலம் கார்த்திதான். மகன் விஜி கதாபாத்திரத்தில் பரபரப்பாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக எனர்ஜியுடனும் நடித்திருக்கிறார்.

Johnson

உலகை அழிக்க நினைக்கும் வில்லனை தடுக்கும் ஹீரோவின் கதை!

Sardar

RAW அமைப்பில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது ப்ளாக் டேக்கர் (எ) யோகி (எஸ்.ஜே. சூர்யா). அதிகாரிகளை கொல்வதற்கான காரணம் ‘Doku’ என்ற ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடிப்பதே. ஆனால் அதனை யோகி கைகளுக்குச் சேராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு போலீஸ் விஜி (கார்த்தி) மற்றும் அவரது தந்தை ஸ்பை சர்தார் (கார்த்தி) இருவருக்கும் வருகிறது. Doku என்பது என்ன? அதுகுறித்த எஸ்.ஜே. சூர்யாவின் திட்டம் என்ன? அப்பா–மகன் இணைந்து இந்த ஆபத்தான திட்டத்தை முறியடித்தார்களா என்பதே ‘சர்தார் 2’ படத்தின் மையக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் கார்த்திதான். மகன் விஜி கதாபாத்திரத்தில் பரபரப்பாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக எனர்ஜியுடனும் நடித்திருக்கிறார். அதேநேரத்தில், அதற்கு முற்றிலும் நேர்மாறான குணாதிசயத்துடன் வயதான சர்தார் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களையும் கார்த்தி கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது. ஆஷிகா, மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன் என மூன்று கதாநாயகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

Sardar

குறிப்பாக, கதையின் ஓட்டத்தில் அவர்களுடைய பங்களிப்பு தேவையான அளவில் இருக்கிறது. சீனாவில் நடைபெறும் அட்வென்ச்சர் காட்சிகள் சில இடங்களில் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும், ஓரளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.

தொழில்நுட்ப ரீதியாக ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. சாம் சி.எஸ். அமைத்திருக்கும் பின்னணி இசை ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் காட்சிகளுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிரச்னை அதன் நீளம்தான். கதை ஆரம்பத்திலேயே வேகமாக தொடங்கினாலும், அடுத்தடுத்து வரும் பல காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன. குறிப்பாக, சில ஆக்‌ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரடிக்க வைக்கின்றன.

எஸ்.ஜே. சூர்யா வழக்கம்போல் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தில் புதிதாகவோ, தனித்துவமாகவோ பெரிய விஷயம் இல்லை. அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கான பின்னணியும் போதுமான அழுத்தத்துடன் சொல்லப்படவில்லை. மேலும், சில எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களுடன் முழுமையாக கனெக்ட் ஆகாததால், படம் பொறுமையைச் சோதிக்கிறது.

மொத்தத்தில், ‘சர்தார் 2’ நல்ல கதைக்களமும், கார்த்தியின் சிறப்பான நடிப்பும் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர். ஆனால், கதையை இன்னும் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருந்தால், இது இன்னும் சுவாரஸ்யமான த்ரில்லராக மாறியிருக்கும்.