90-களில் சேவப்பட்டி என்ற ஊரில் வசிக்கும் சுப்பு (சனந்த்), கார்த்தி (ரிஷிகாந்த்) இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். எப்போதும் ஊரில் அடிதடி, சண்டை எனச் செல்லும் இவர்களது வாழ்க்கை எதிர்பாராத ஒரு கொலையால் பிரிகிறது. சில காலம் கழித்து இந்த இரு நண்பர்களும் ஒரு பயணத்துக்காக ஒன்றிணைகிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்களுக்கு என்ன நடக்கிறது? அதற்கு முன்பு அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன? இருவருக்கும் இடையிலான நட்பு என்ன ஆனது என்பதையெல்லாம் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது ‘டோரதி’.
மிகவும் அழுத்தமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, அதைக் கவனமாகவும் கலைநயத்துடனும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். பாலினப் பாகுபாட்டை மையமாக வைத்து, அதை வெறும் கருத்தாக மட்டும் சொல்லாமல், கலை ரீதியாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
ரிஷிகாந்த், சனந்த் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான நட்பு மெல்லமெல்ல உருவாகும் விதமும், பின்னர் அந்த நட்பில் ஏற்படும் முரண்பாடுகளும், இவர்களின் நடிப்பால் பல மடங்கு உயர்கின்றன. சின்ன ரோலில் வந்தாலும் கீர்த்தி சுரேஷ் மனதில் பதிகிறார். ஆணவமான ஆண்களின் முகமாக முத்துப்பாண்டி, சௌந்தர்ராஜா, முத்துக்குமார் மூவரும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சில காட்சிகள் என்றாலும், முதலில் கொலைசெய்ய ஊக்கப்படுத்துவது, பின்னர் கொலை செய்ய வேண்டாம் எனத் தடுப்பது வரையிலான ஒரு முழுமையான பாத்திரமாக ராமசந்திரன் சிறப்பு செய்திருக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கியமான பலம் இளையராஜாவின் இசை. காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள், துள்ளலான தருணங்கள் என ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு தனது இசையால் விருந்து படைத்திருக்கிறார். திருவின் ஒளிப்பதிவும், கணேஷ் சிவாவின் எடிட்டிங்கும் படத்தின் காட்சியனுபவத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. குறிப்பாக, நான்-லீனியர் திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தை தொடர்ந்து தக்கவைக்க உதவுகிறது.
படம் தொடங்கி நீண்டநேரம் ஆன பிறகும் கதை இன்னும் தொடங்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியை நெருங்கிய பிறகுதான் நாம் எந்தக் கதையைப் பார்க்கப் போகிறோம் என்ற தெளிவு முழுமையாக கிடைக்கிறது.
ஆனால், படத்தை முழுமையாகப் பார்க்கும்போது இந்தத் தாமதம் மிகப்பெரிய குறையாகத் தெரியவில்லை. காரணம், கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு இடையேயான உறவையும் படம் பொறுமையாகக் கட்டமைக்கிறது. மொத்தத்தில், அழுத்தமான ஒரு கருத்தை மையமாக வைத்து, நட்பு, முரண்பாடு, மனித உறவுகள் எனப் பல விஷயங்களை அழகான திரைமொழியில் சொல்லி ஈர்க்கிறது இந்த ‘டோரதி’.