J BABY
J BABY  J பேபி
திரை விமர்சனம்

J BABY REVIEW | பேபியாக ஊர்வசி செம்ம... மொத்தத்தில் J பேபி எப்படி..?

Johnson

தாயைத் தேடிய இரு சகோதரர்களின் பயணமும், பாசமும் தான் களம்.

பேபியின் இளைய மகன் சங்கர் (தினேஷ்) ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர், மூத்தமகன் செந்தில் (மாறன்) ஒரு பெயின்டர். ஒரு நாள் காலை திடீரென, உடனடியாக காவல் நிலையத்திற்கு வரும்படி, காவலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. காவல் நிலையத்தில் அவர்கள் சந்திக்கும் முதல் கேள்வியே “உங்கள் அம்மா எங்கே?” என்பதுதான். ஜே பேபிக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் என்பதால், அவர்களில் ஏதாவது ஒரு வீட்டில் இருப்பார் என சங்கரும், செந்திலும் நினைத்திருப்பார்கள். ஆனால் காவலதிகாரி சொன்ன பின்புதான், அவர் கொல்கத்தாவில் இருக்கிறார் என்ற விவரம் தெரிகிறது. அம்மாவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும் சூழல் இருவருக்கும் உருவாகிறது. இந்தப் பயணம் எப்படியானதாக அமைந்தது? ஏற்கெனவே சண்டையில் இருக்கும் அண்ணன், தம்பி உறவு என்ன ஆகிறது? அவர்கள் தங்களின் அம்மாவை திரும்ப அழைத்து வந்தார்களா? என்பதெல்லாம் மீதிக்கதை.

ஜே பேபி படத்தின் முதல் ப்ளஸ், நடிப்பு. டைட்டில் ரோலான ஜே பேபியாக புகுந்து விளையாடியிருக்கிறார் ஊர்வசி. ஆட்களிடம் வம்பிளுப்பது, மகிழ்ந்து பேசுவது, பிரிந்து கிடக்கும் குடும்பத்தைப் பார்த்து கலங்குவது, மன அழுத்தத்தில் உழல்வது என எல்லா உணர்வுகளையும் தனது தேர்ந்த நடிப்பால் வெளிக்காட்டுகிறார். இவருக்கு அடுத்தபடியாக கவர்வது, மாறன். வழக்கமான காமெடி ரோலாக இல்லாமல், குணச்சித்திர பாத்திரம். சில இடங்களில் ஒன்லைனர் காமெடிகளில் சிரிப்பூட்டினாலும், சில எமோஷனல் காட்சிகளையும் சரிவர கொடுத்திருக்கிறார். அவரது மனம் மாறும் இடத்தில் மட்டும் நடிப்பு பெரிதாக இல்லை. இவர்களுடன் சேர்த்து நம்மை நெகிழச் செய்யும் பாத்திரமாக மூர்த்தி வருகிறார். அம்மாவைத் தேடியலையும் சகோதரர்களுக்கு பொறுமையுடன் வழிகாட்டுவது, ஒரு பேருந்து நிலையக் காட்சியில் கலங்கடிப்பது என மனதில் நிற்கும் பாத்திரம்.

இது ஒரு நிஜ சம்பவம் என்பதால், அந்த சம்பவத்தின் நிகழ்வுகளைப் படத்தில் இணைத்திருந்த விதம், அதை எமோஷனலாக கொடுத்த நேர்த்தியால் கவனம் பெருகிறார் இயக்குநர் சுரேஷ் மாரி. ஒரு சிதறிக் கிடக்கும் குடும்பம், அக்குடும்பத்தின் நபர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதையும் சொல்கிறது படம். மேலும் படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் மகிழ்ச்சி, கோபம், கிண்டல், நெகிழ்ச்சி எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக நம்மை முழுவதும் ஆட்கொள்கிறது. இது வழக்கமான `குடும்பம் எவ்வளோ முக்கியம், அம்மா எவ்வளோ முக்கியம்’ என்ற மெசேஜ் பட வகைக்குள் தான் இருக்கிறது. ஆனால் பிரச்சார நடை இல்லாமல் நகர்வதால் பார்க்க அழகாக இருக்கிறது.

டோனி ப்ரிட்டோ இசையில் பாடல்கள் இதமாக இருந்தாலும், கதையின் நகர்வைத் தடுக்கும் முட்டுக்கட்டைகளாக இருப்பது உறுத்தல். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு சென்னை மற்றும் கொல்கத்தாவினை அழகாக காட்சிபடுத்தியிருக்கிறது.

படத்தின் குறைகளாக சொல்வதென்றால், எமோஷனலாக படம் வலுவாக இருக்கிறது. ஆனால், ஒரு கலைவடிவமாக சுவாரஸ்யம் குறைவு என்பதே சிக்கல். படத்தில் பல அழகான விஷயங்கள் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தாமல் அப்படி அப்படியே விட்டு அடுத்த காட்சிக்கு நகர்கிறார்கள். உதாரணமாக ஒரு காட்சியில் இரு மகன்களும் “அம்மா அம்மா” எனக் கத்திக் கொண்டே செல்ல, சுற்றியுள்ள கட்டடத்தில் இருக்கும் அத்தனை அம்மாக்களும் இவர்களை பார்ப்பார்கள். இந்த தருணம் படத்தின் தன்மையுடன் ஒன்றியிருந்தும், மிக சாதாரணமாக, அதை மற்றும் ஒரு காட்சியாக கடந்து சென்றிருப்பார்கள். படத்தில் பேபி கதாப்பாத்திரத்தால், அந்தக் குடும்பம் படும் அவஸ்தைகளைக் காட்டியிருப்பார்கள். ஆனால் படத்தின் மையக் கதாப்பாத்திரமான பேபியின் சிக்கலையும், மன நிலையையும் மிக மேலோட்டமாகவே காட்டப்பட்டிருக்கும். மருத்துவமனை சார்ந்த அந்தக் காட்சிகளிலும் பேபி பற்றியதாக இல்லாமல், ஒரு டெம்ப்ளேட் காட்சிகளாக மட்டுமே இருக்கிறது. படத்திலேயே மிக சுவாரஸ்யமற்ற காட்சிகள் மருத்துவமனை சார்ந்த காட்சிகளே.

சிறு வயதில் பிள்ளைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, வயதான பின் தாய்க்கு, பிள்ளையின் ஆதரவும் அன்பும் எவ்வளவு தேவை என சொல்ல முயற்சித்திருக்கிறது. ஆனால் இன்னும் சிறப்பாக எழுதி, எடுத்திருந்தால் தவிர்க்க முடியாத சினிமாவாக இருந்திருக்கும்.