'ஹாட்ஸ்பாட்' படத்தின் தொடர்ச்சியாகவே படம் துவங்குகிறது. 'ஹாட்ஸ்பாட் 2' படத்துக்கான கதை கேட்கும் படலத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஜே. பாலமணிமார்பன் (படத்திலும் அதே பெயர் தான்). அவரிடம் கதை சொல்ல வரும் பெண் ஷில்பா (ப்ரியா பவானி ஷங்கர்) மூன்று குறும்படங்களின் கதைகளை சொல்கிறார்.
தாதா, ராசா என இரு உச்ச நடிகர்களின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள் ஜேம்ஸும் (ரக்ஷன்), சத்யாவும் (ஆதித்யா பாஸ்கர்). ரசிக மனோபாவத்தில் நட்சத்திரங்களைக் கொண்டாடுவது, போட்டியாக நினைக்கும் நட்சத்திரங்களின் போஸ்டர்களைக் கிழிப்பது, அவர்கள் ரசிகர்களுடன் மோதுவது என இவர்களுக்கிடையில் ஃபேன் வார் முட்டிக்கொள்கிறது. திடீரென சத்யாவின் மனைவியையும், ஜேம்ஸின் குடும்பத்தினரையும் மர்ம நபரொருவர் கடத்திவிடுகிறார். எதற்காக? அதன் மூலம் சொல்லப்படும் கருத்து என்ன? என்பதே இந்த எபிசோடின் கதை.
மகள் ஷர்னிதா (சஞ்சனா திவாரி) வெளிநாட்டில் படிப்பு முடித்துவிட்டு நாடு திரும்ப அவரை அழைத்து வர செல்கிறார் பாஸ்கர் (தம்பி ராமையா). மகளின் மாடர்ன் உடை, உடன் இருக்கும் ஆண் போன்றவை பாஸ்கருக்கு ஏற்புடையதாக இல்லை. இதனிடையே பாஸ்கரின் முதலாளி, ஷர்னிதாவை தன் மகனுக்கு பெண் கேட்க, அதற்கு ஷர்னிதா நடந்து கொள்ளும் விதமும் அதன் விளைவுகளும், அதன் மூலம் முன்வைக்கப்படும் மெசேஜும் தான் கதை.
`எனக்கொரு கேர்ள்ஃபிரெண்ட் வேணுமடா' என பல முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர் யுகன் (அஷ்வின் குமார்). இந்த சூழலில் அவர் புதிய சிம்கார்ட் வாங்கி அதனை ஆக்டிவேட் செய்கிறார். அவர் செய்யும் ஒரு கால் எதேர்ச்சையாக எதிர்காலத்தில், அதாவது 2050ல் வாழும் நித்யாவுக்கு (பவானி ஸ்ரீ) போகிறது. மோதலில் துவங்கும் இந்த கால், பின்னர் நட்பும், காதலுமாக முன்னேறுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் இவர்களின் காதல் என்ன ஆகிறது? இந்தக் கதையில் சொல்லபப்டும் நியதி என்ன? என்பதெல்லாம் இந்த மூன்றாவது எபிசோடின் கதை.
இவை மூன்று தவிர கடந்த பாகம் போலவே இதில் கதை சொல்லும் நபருக்கு ஒரு தனிப்பட்ட நோக்கமும் நிறைவேற வேண்டும். அது நிறைவேறியதா என்பதையும் சொல்கிறது இந்த 'ஹாட்ஸ்பாட் 2'. முதல் பாகத்தில் 4 கதைகளில் கருத்து சொன்ன விக்னேஷ் கார்த்திக், இந்த பாகத்தில் மூன்று கதைகளுடன் வந்திருக்கிறார்.
நடிகர்கள் பின் சுற்றும் விட்டேத்தி ரசிகர்களாக சுற்றும் இளைஞர்களைப் பிரதிபலிக்கும் ரக்ஷன், ஆதித்யா பாஸ்கரின் கதாபாத்திரங்களில் இளைஞர்களின் ஆர்வம் தெரிந்தாலும், நடிப்பில் எந்த அழுத்தமும் இல்லாதது மைனஸ். மிக மேலோட்டமாக ஒரு நடிப்பையே கொடுக்கிறார்கள். எம்.எஸ். பாஸ்கருக்கு இது கேக்வாக் பாத்திரம், மனதில் பதியும் பாத்திரம் இல்லை என்றாலும் அவர் நடிப்பில் குறையேதுமில்லை. தம்பி ராமையா தனக்கென வைத்திருக்கும் Stock ரியாக்ஷன்களையே கொடுத்திருக்கிறார். சஞ்சனா திவாரியின் பாத்திரம் போலவே அவர் நடிப்பும் மிகையாகவே இருக்கிறது. வசனங்கள் பேசுவதில் கூட அத்தனை போலியான பாவனைகள். காதலுக்காக ஏங்கி தவிக்கும் நபராக ஈர்க்கிறார் அஷ்வின் குமார், சில காட்சிகளில் மட்டும் வரும் பவானி ஸ்ரீக்கு நடிப்பில் பெரியளவில் வேலை கொடுக்கப்படவில்லை. இவர்கள் எல்லோரையும் தாண்டி நரேடராக வரும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பு சிறப்பு. இந்தக் கதைக்குக் கூடுதல் மைலேஜ் சேர்க்கும் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
மூன்று கதைகளும் வெவ்வேறு உணர்வுகளை பற்றி பேசுவதற்கு ஏற்ப, படம்பிடித்த விதம், காட்சிகளின் வண்ணங்கள் என வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்கள் ஜகதீஷ் ரவியும், ஜோசஃப் பவுலும். படத்தில் நீளம் பிரச்னை இல்லை என்றாலும், கதையாக நீட்டி முழக்கி சொல்ல அவசியம் அற்ற காட்சிகளை ட்ரிம் முடித்திருக்கலாம் எடிட்டர். பின்னணி இசையில் முடிந்த வரை படத்துக்கு எனர்ஜி சேர்க்கிறார் சதிஷ் ரகுநாதன். முதல் பாகத்தில் வரும் அதே நாதஸ்வர பின்னணி இசையே இங்கும் பெரும்பான்மையான இடங்களில் ரிப்பீட் மோடில் பயன்படுத்தியதை குறைத்திருக்கலாம்.
முதல் கதையில் ரசிகர்கள் சண்டை பற்றி பேசிய கருத்துக்கள் தேவையானது என்றாலும், அவை சொல்லப்பட்ட விதம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. இரண்டாவது கதையில் வெளிநாட்டில் படித்து வந்த பெண் ஆடை சுதந்திரத்தை தவறாக கையாள்கிறார் என்ற தொனியிலும் ஏற்புடையதாக இல்லை. இந்த படத்திலேயே ஓரளவு நல்ல ஐடியாவாக இருந்தது மூன்றாவது கதை மட்டுமே. ஆனால் அதுவும் முன்பு பல படங்களில் பார்த்தது என்பது சின்ன சறுக்கல். மொத்தமாக பார்த்தால், சொல்லும் கருத்துக்களில் இன்னும் தெளிவும், நேர்த்தியும் இருந்திருக்கலாம், ஆனாலும் ஓரளவு பொழுதுபோக்கை கொடுக்கும் ஒரு படமாக 'ஹாட்ஸ்பாட் 2 மச்'ஐ எடுத்துக் கொள்ளலாம்.