100 கோடியை கொள்ளையடிக்க ஒரு காமெடி கும்பல் செய்யும் முயற்சிகளே கதை...
ஊருக்குள் தொடர்ச்சியாக சில மாணவிகள் காணாமல் போவதை பற்றி பள்ளி ஆசிரியை சுஜிதா (கேத்தரின் தெரசா), உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப, அவ்வழக்கை விசாரிக்க ஒரு காவலதிகாரி ஆசிரியர் என சொல்லி சம்பந்தப்பட்ட ஊரில் இருக்கும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். அதே வேளையில் புதிதாக உடற்கல்வி ஆசிரியராக அப்பள்ளியில் இணைகிறார் சரவணன் (சுந்தர் சி). அதே பள்ளியில் இன்னொரு உடற்கல்வி ஆசிரியர் சிங்காரம் (வடிவேலு). ஊருக்குள் நடக்கும் பல மோச வேலைகளுக்கு பள்ளியின் தாளாளர், தண்ணி கேன் ஃபேக்டரி என்ற பெயரில் ஸ்பிரிட் தயாரிக்கும் உரிமையாளரே காரணம் எனத் தெரிந்து கொள்ளும் சரவணன், அவர்களை மாறுவேடத்தில் அடித்து வெளுக்கிறார். ஒரு கட்டத்தில் சரவணன் யார் என சுஜிதா, சிங்காரத்திடம் கூறி, தான் 100 கோடியை கொள்ளையடிக்க போவதாகவும் சொல்கிறார். உண்மையில் சரவணன் யார்? யாரிடம் கொள்ளையடிக்கிறார்? அவரால் கொள்ளையடிக்க முடிந்ததா என்பதெல்லாம் தான் மீதிக் கதை.
மணி ஹெய்ஸ்ட்டின் லோக்கல் வெர்ஷனாக இந்த மினி ஹெய்ஸ்டை நிகழ்த்தியிருக்கிறார் சுந்தர் சி. லாஜிக் எல்லாம் தாண்டி படத்தின் ஹுமர் பயங்கரமாக கை கொடுப்பதால் மிஷன் சக்ஸஸ். படத்தின் துவக்கம், சுவாரஸ்யமற்ற கதாப்பாத்திர அறிமுகங்கள் என ஆரம்பத்தில் சற்றே போர் அடித்தாலும், படம் நகர நகர நம்மை கட்டிப் போடுகிறார்கள் சுந்தர் சி அன்ட் கேங்கர்ஸ். ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெடித்து சிரிக்க வைக்கும் சுந்தர் சி ஃபார்முலா, படத்தின் இரண்டாம் பாதியில் பக்காவாக ஒர்க் ஆகி இருக்கிறது.
படத்தின் பெரிய ப்ளஸ் சுந்தர் சியின் வழக்கமான காமெடி ரகளை. அதிலும் சில்லி காமெடிகள், ஆள் மாறாட்டா காமெடிகள், கொள்ளையடிக்கும் போது நடக்கும் காமெடி என அத்தனையும் அசத்தல். நடிகர்கள் பொறுத்தவரை லீட் ரோலில் நடித்துள்ள சுந்தர் சி வழக்கம் போல் ஒரு சேஃபான ப்ளே செய்திருக்கிறார். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் படத்தின் காமெடி மீது கவனம் விழும் படி பார்த்துக் கொள்கிறார். கேத்ரின் தெரசா சம்பிரதாய சுந்தர் சி பட ஹீரோயின். காமெடி + பாடல்களுக்கு கூடுதல் கலர் சேர்க்கிறார். வடிவேலு - சுந்தர் சி, வின்னர் காம்போ மறுபடி இணைந்ததுள்ளது. "ஏன்டா உனக்கு போட வேற வேசமே கிடைக்கலையா", "எங்க அப்பா போட்டோ மாட்ட ஆணி கூட அடிச்சதில்ல, கம் வெச்சு தான் ஓட்டுனேன்" எனப் புலம்புவது, வீட்டுக்குள் சாவி எடுக்கும் போது நடக்கும் கலாட்டாக்கள் என பழைய வடிவேலு ஆங்காங்கே தெரிகிறார். ஆனாலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய இடத்தில் பவுண்டரி தட்டி திருப்திப்பட்டுக்கொள்கிறார். . ஆனாலும் அதைத் தாண்டி ஹுயூமரை படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சுந்தர் சி. அதிலும் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரம் பெண் வேடம் போட்டு வரும் போது தியேட்டர் மொத்தமும் பிளாஸ்ட் ஆகிறது. இப்படி படம் முழுக்க பல காமெடி வேலைகளை பார்த்திருக்கிறார்.
வாணி போஜனுக்கு மாதவி எனப் பெயர் வைப்பது, மத கஜ ராஜா ஓடும் தியேட்டர், சுவர் ஓரத்தில் அன்பே சிவம், காஃபி வித் காதல் என போஸ்டர் ஒட்டி இருப்பது, சின்னத்தம்பி பாட்டு என தன்னுடைய ரெஃபரான்ஸை படம் முழுக்க தூவி விட்டிருப்பதும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. சத்யா இசையில் குப்பன் தொல்லை பாடல் செம. பின்னணி இசையில் காமெடிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு காமெடியை மிஸ் செய்யாமல் பதிவு செய்திருக்கிறது.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால் முதல் பாதியிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதே. இடைவேளைக்கு கொஞ்சம் முன்பு வரை, செல்ஃப் எடுக்காமல் திணறுகிறது படம். காமெடி ஸ்க்ரிப்ட் அதற்குள் லாஜிக் எதற்கு என சொன்னாலும், சுந்தர் சி படங்களுக்கே உண்டான கண்வீனியன்ட் ரைட்டிங் சற்று மைனஸ். ஒரு கதாப்பாத்திரத்தை நல்லவராக காண்பித்து பின்னால் ட்விஸ்ட் வைப்பது, காவலதிகாரி யார் என்பதில் உள்ள ட்விஸ்ட் துவங்கி க்ளைமாக்சில் வரக் கூடிய ட்விஸ்ட் வரை எளிதில் யூகிக்க முடிந்ததே. அந்த பிளாஷ்பேக் ஆவது கொஞ்சம் புதிதாக யோசித்திருக்கலாம்.ஆனாலும் இந்த குறைகளைத் தாண்டியும் நகைச்சுவை நம்மை கவர்கிறது என்பதே படத்தின் பலம்.
மொத்தத்தில் சுமாரான 40 நிமிடத்தைக் கடந்துவிட்டால், என்டர்டெய்ன்மென்ட் கொடுக்கும் மீதிப்படத்தை ஜாலியாக ரசிக்கலாம்.