Fight CLub
Fight CLub  Fight CLub
திரை விமர்சனம்

Fight Club | மேக்கிங் செம்ம... ஆனா படம்..?

Johnson

அரசியல் சூழ்ச்சி, பகை, போதை, ஈகோ, ஒரு தலைமுறையை தவறான பாதைக்கு மாற்றுவது எனப் பல விஷயங்களைத் தொடுகிறது `ஃபைட் க்ளப்’

படத்தின் கதை 2004ல் துவங்குகிறது, முதன்மைப் பாத்திரமான செல்வா (விஜய் குமார்) கதையை நரேட் செய்கிறார். வட சென்னையின் ஒரு பகுதி மக்களுக்கு தலைவராக இருக்கும் பெஞ்சி (எ) பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கிறார். ஊர் மக்களை விரட்டியடிக்க வருபவர்களை எதிர்த்து பேசுவது, கஞ்சா விற்பது தன் தம்பியாகவே இருந்தாலும் அடித்து மிரட்டுவது, மாணவர்களை படிப்பிலும், விளையாட்டிலும் ஊக்கப்படுத்துவது எனப் பல விஷயங்களை செய்து கொடுக்கிறார். சீக்கிரமே தேர்தலில் நிற்க முடிவும் எடுக்கிறார். அவர் அதிகாரத்திற்கு வந்தால், தங்களுக்கு பாதிப்பு என, மெஞ்சமினின் எதிரிகள் அவரைக் கொலை செய்கிறார்கள். இதன் பின் ஏரியாவில் எல்லாம் மாறுகிறது. 2016க்கு கதை நகர்கிறது, கிருபா (சங்கர் தாஸ்) என்ற மோசமான நபர் அந்த ஏரியாவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். அவர் பேரை சொல்லி பல குற்றங்கள் நடக்கின்றன. செல்வா தனது சிறுவயது கனவான கால்பந்தாட்ட வீரர் ஆக முயன்று கொண்டே இருக்கிறார். இந்த சூழலில் மிக மோசமான பழிவாங்கும் என்னத்துடன் அந்த ஏரியாவுக்கு வரும் ஒரு நபரால் பலரது வாழ்க்கை நாசமாகிறது. இதனால் செல்வாவின் வாழ்வும் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. பிரச்சனைகளை செல்வா எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.

இடைவேளைக்கு முன்பான படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தது. பிரச்சனைகளை செட்டப் செய்து முடியும் அந்த இடைவேளை வரை சுவாரஸ்யம் குறையவில்லை. ஒரு பெரிய பிரச்சனை நிகழ்ப்போகும் காட்சியை காட்டி, எதனால் இந்த பிரச்சனை நடக்கிறது என்ற காரணத்தை சொல்லி பின்பு, முதல் காட்சியுடன் இணைக்கும் படியான கதை சொல்லலும் நன்று. மையக்கதைக்குத் தேவையே இல்லை என்றாலும், பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக இயல்பாக ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைகள் பற்றிதான் படமே என்பதால், படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கின்றார்கள் விக்கி மற்றும் அம்ரின்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு படத்தை அழகாகக் கொடுத்திருக்கிறது. பல காட்சிகளில் அவரின் லைட்டிங், இருளை படமாக்கியிருக்கும் விதம், சில Split Dioptre காட்சிகள் என எல்லாமும் கச்சிதம். அடுத்த பலம் படத்தின் ஹீரோ கோவிந்த் வசந்தா. பாடல்களில் யாரும் காணாத, அதன் மலையாள வெர்ஷன், திருமணத்தில் வரும் பாடல், பேருந்தில் வரும் கானா என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தின் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

விஜய் குமாருக்கு பெரும்பாலும் சண்டைக்காட்சிகள் தான் என்பதால், நடிப்பில் அழுத்தமாக செய்ய எந்த வேலையும் இல்லை. சின்ன கதாப்பாத்திரத்தில் வந்தாலும் கார்த்திகேயன் சந்தானம் மனதில் பதிகிறார். கிருபா பாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கர் தாஸ் நடிப்பு கவர்கிறது. இந்த அத்தனை பேரை விட மிக தரமான பாத்திரம் அமைந்திருப்பது ஜோசப் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன் நடிப்பு அட்டகாசம். உள்ளுக்குள் சதியைத் தீட்டிக் கொண்டே வெளியில் அக்கறையாக நடிக்கும் பாத்திரத்தில் அசத்துகிறார்.

Vijayakumar fight club

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இந்த மொத்தப் படமும் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறது. இந்தப் படத்தின் துவக்கத்திலும், டீசரின் துவக்கத்திலும் கூட ஒரு வசனம் வரும் “நா பொறக்கறதுக்கு முன்னடி பொறந்த சண்ட இது, யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது. வேற வேற பேருல, வேற வேற ஆளுங்க, இங்க அடிச்சிட்டே தா இருக்கப் போறாங்க” இதுதான் படத்தின் மையக்கரு. ஆனால் அதை சொன்ன விதத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. முன்பு சொன்னது போல படத்தின் முதல் பாதி பரபரப்பாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளோ, சொல்லப்படும் கதையோ கொஞ்சமும் அழுத்தமாக இல்லை. ஒருகட்டத்தில் சொன்ன விஷயங்களையே மறுபடி மறுபடி சொல்வது சோர்வை தருகிறது.

பள்ளியில் வரும் காட்சிகளில், ஹீரோவுக்கு வலிந்து ஒரு காதல் கதை வைப்பது எந்த விதத்தில் கதைக்கு சம்பந்தப்படுகிறது எனப் புரியவில்லை. அதில் வரும் ஒரு சிறப்பான நகைச்சுவை வசனத்தைத் தாண்டி வேறு எந்த பயனும் இல்லை. மேலும் படத்தை எளிதில் கணிக்கும் படி நகர்கிறது. க்ளைமாக்ஸ் இதுதான் என்பது வரை எல்லாம் சுலபமாக யூகித்த முடிகிறது. நடுவில் சுத்தமாக ஒட்டாத பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு. வெறுமனே ஷாக்கிங் வேல்யூவுக்காக வைக்கப்பட்டத்தைப் போலவே இருந்தது.

மொத்தத்தில் ஒரு நல்ல முதல் பாதி, அதைத் தக்க வைக்கும் வலிமை இல்லாத இரண்டாம் பாதி என மிக சுமாரான படமாக மட்டும் எஞ்சுகிறது `ஃபைட் க்ளப்’. மேலும் இதன் வன்முறைக்காகவும், cuss words, போதைப் பொருள் உபயோகத்திற்காகவும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது 18 வயதிற்குட்டப்பட்டவர்களுக்கு அல்ல.