ஹீரோவின் வாழ்க்`கை'யை புரட்டிப்போடும் சம்பவமே I’m Game
டான் ஜான் (துல்கர் சல்மான்) ஒரு பணக்கார, சூதாட்டத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர். ஊரெல்லாம் கடன், பொறுப்பின்றி வாழ்க்கை என செல்லும் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் வலது கையை அவர் இழந்து விட, வேறொருவரின் கை ஜானுக்கு பெருத்தப்படுகிறது. அந்தக் கை வாழ்க்கைக்குள் வந்த பின் நிகழும் அமானுஷ்ய மாற்றங்களையும், துரத்தும் பகையையும் ஜான் எப்படி சமாளித்தார்? இந்தக் கதைக்குள் மிஷ்கின் எப்படி வருகிறார்? என்பதை எல்லாம் சொல்லும் படமே I’m Game.
Fantasy concept, Mystery மற்றும் கதையின் வித்தியாசமான அணுகுமுறையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிஹாஸ் ஹித்யாத். படத்தின் முதல் பாதி ஓரளவு Hook செய்கிறது.
படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று துல்கரின் நடிப்பு. டான் ஜான் கதாபாத்திரத்தின் வெவ்வேறு உணர்வுகளை அவர் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். பொறுப்பற்ற இளைஞனாக பணத்தை செலவழிப்பது, கடன் காரர்களை சமாளிப்பது என ஒருபுறம், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் பதறுவது என வெவ்வேறு தன்மைகளை நன்றாக வெளிப்படுத்துகிறார். நாயகியாக வரும் கயாடு லோஹருக்கு கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையை முடித்திருக்கிறார். துணை பாத்திரங்களாக வரும் கதிர், சம்யுக்தா விஸ்வநாத், வினய் ஃபோர்ட் ஆகியோர் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முக்கியமான பாத்திரத்தில் வரும் ஆண்டனி வர்கீஸ் வெகுளியான நபராகவும், உண்மையை பேச போராடும் கோபக்கார இளைஞராகவும் ஈர்க்கிறார்.
படத்தின் ஜிம்ஷி ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசை, அஜயன் கலை இயக்கம் என தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய குறை எனப் பார்த்தால், Fantasy மற்றும் supernatural thriller என்ற வித்தியாசமான பாதையில் பயணிக்கும் படம், இடைவேளைக்குப் பிறகு சாதாரண Revenge drama-வாக மாறிவிடுகிறது. குறிப்பாக துல்கர் இல்லாமல் இரண்டாம் பாதியில் 45 நிமிடங்கள் வரும் flashback பகுதி படத்தின் வேகத்துக்கு தடை போடுகிறது.
மேலும், சில ஆக்ஷன் மற்றும் பழிக்குப் பாலி என மிகவும் பழக்கப்பட்ட commercial cinema template-ஐ நினைவுபடுத்துகின்றன. இதனால் ஆரம்பத்தில் இருந்த புதுமையான உணர்வு குறைந்து விடுகிறது. தமிழில் வெளியான `பீச்சாங்கை', `மாவீரன்', `காஞ்சனா' ஆகிய படங்களின் தாக்கம் மிக ஆழமாக இருப்பதை உணர முடிகிறது.
மொத்தத்தில ‘I’m Game’ புதுமையான முயற்சியாக துவங்கி, மிக வழக்கமான ரிவெஞ் படமாக முடிவது சறுக்கல். இன்னும் நல்ல திரைக்கதை இருந்திருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும் இந்த கேம்.