Rajinikanth Coolie
திரை விமர்சனம்

COOLIE Review | க்கூ க்கூ க்கூ கூலி பவர்ஹவுஸே... பவர்ஃபுல்லாக இருக்கிறதா..?

வீட்டுக்கே தேவையான கரண்ட் இல்லாத இந்தக் கதையை வைத்துக்கொண்டு, கூலிப் பவர்ஹவுஸே பின்னணி இசை எல்லாம் தேவைதானா லோகேஷ்..?

Johnson

தன் நண்பனை கொன்றவனை கண்டுபிடிக்க களம் இறங்கும் நாயகனின் முயற்சியே, கூலி

சென்னையில் சொந்தமாக மேன்சன் வைத்து நடத்திவருகிறார் தேவா (ரஜினிகாந்த்). குடிக்கக்கூடாது, கண்ட சேனல் பார்க்க கூடாது, பர்சனல் போனை யூஸ் பண்ண கூடாது, ரூம் நம்பர் 114க்கு போகவே கூடாது என பல கண்டிஷன்கள். திடீரென விசாகப்பட்டினத்தில் இருந்த தேவாவின் நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) இறந்து போகிறார். (ஸ்பாய்லர் எல்லாம் இல்ல, ஷாக் ஆக வேணாம்). தந்தையை இழந்து நிற்கும் அவரது மகள்கள் ப்ரீத்தி (ஸ்ருதி) மற்றும் அவரின் தங்கைகள் ஆகியோருக்கு ஆதரவாக நிற்கிறார் தேவா. கூடவே ராஜசேகரின் மரணம் ஒரு கொலை எனத் தெரிந்துகொள்ளும் தேவா கொலைகாரனை தேடி களம் இறங்குகிறார். இந்த கொலைக்கும் விசாகப்பட்டின துறைமுகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சைமனுக்கும் (நாகர்ஜூனா) தொடர்பு இருப்பதாக தெரிகிறது. உண்மையை தெரிந்துகொள்ள துறைமுகத்துக்குள் செல்கிறார் தேவா. அதே நேரத்தில் சைமன் வாட்ச் போன்ற  பொருள் கடத்தல் தாண்டி, வேறு ஏதோ செய்கிறார் என காவல்துறை சந்தேகித்து பல உளவாளிகளை அனுப்புகிறது. அதான் பின் நடப்பவை என்ன? ராஜசேகரை கொன்றது யார்? ஏன்? உண்மையில் அந்த துறைமுகத்தில் நடப்பது என்ன? என்னதெல்லாம் தான் மீதிக்கதை.

படத்தின் பலம் ரஜினிகாந்த் தான். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆளும் மாஸ் சற்றும் குறையவில்லை. நண்பனின் இழப்புக்கு வருந்துவது, எதிரிகளை பந்தாடுவது, ஜாலி கலாட்டா என அசத்துகிறார்.Deaging செய்யப்பட்ட ரஜினி இன்னும் சிறப்பு. அதற்கு ஏற்றது போலவே குரலையும் வின்டேஜ் ஸ்டைலில் மாற்றி இருந்தது ரசிக்க வைக்கிறது.

Sruthi Haasan | Lokesh Kanagaraj

ஸ்ருதிஹாசனுக்கு முழுக்கவே சீரியஸ் ரோல், சிறப்பாக செய்திருக்கிறார். சௌபின் ஒரு வித்தியாசமான வில்லன் வேடம், அதனை முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார். நாகர்ஜூனாவுக்கு காட்சிகள் அதிகம் என்றாலும், அழுத்தம் குறைவு. எனவே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஈர்க்கவில்லை. படத்தின் சர்ப்ரைஸ் ரச்சிதா ராம். அமைதியாக வருபவர் கொடுக்கும் அசத்தல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சிறப்பு. சத்யராஜ், உபேந்திரா, ஆமீர்கான் என கெஸ்ட் ரோலில் வந்து செல்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் யார் என்ற முன்கதையை சிறப்பாக வடிவமைத்ததும், அதற்கு நம்மை மெல்ல மெல்ல தயார் செய்து, முக்கியமான இடத்தில் சொல்வதும் லோகேஷ் கனகராஜின் களாசிக் டச். வழக்கமான பழிக்கு பழி கதை என்றாலும் அதை முடிந்தவரை புதுமையாக கொடுக்க முயன்றிருக்கிறார். 

படத்தின் பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை. ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனியான பின்னணி இசை கொடுத்து அசத்துகிறார்.  படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் மோனிகா பாடல் பார்க்க, கேட்க சிறப்பு. அன்பறிவு சண்டைகாட்சிகள் ஒவ்வொன்றும் பட்டாசு. குறிப்பாக மேன்சன் சண்டைகாட்சி அட்டகாசம். கிரிஷ் ஒளிப்பதிவு படத்தை படு ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறது.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். பெரிய ஸ்கேல், நட்சத்திர பட்டாளம், அனிருத் இசை போன்றவை மட்டும் போதும் என லோகேஷ் நினைத்துவிட்டது போல தான் இருக்கிறது. படத்தின் சுவாரஸ்யம் என சொல்ல ஃபிளாஷ்பேக் தவிர ஏதும் இல்லை. சௌபின் போடும் திட்டம், சத்யராஜ் கொலை செய்யப்பட்ட காரணம், ரஜினியின் குடும்பம் பற்றிய உண்மை சொல்லப்படாமல் இருப்பது என எந்த விஷயத்திலும் தெளிவே இல்லை. அதனாலேயே நம்மால் படத்துடன் ஒன்றவே முடியவில்லை. மேலும் ரஜினிக்கு எதுவும் ஆகப் போவதில்லை, அவர் எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்ற உணர்வு இருப்பதால், யாருக்கு ஆபத்து வந்தாலும் அது பெரிதாக நமக்கு பதபதைப்பை தரவில்லை. 

குறிப்பாக படத்தில் வில்லனுக்கான பலம் என்பது எதுவுமே இல்லை, எனவே ஹீரோவுக்கு ஆபத்தே இல்லை. படத்தில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

முதல் பாதி படம் வரை, ஓரளவு சுவாரஸ்யமாக நகர்கிறது கதை. அதுவரை என்ன மர்மங்கள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுகிறது. ஆனால் அதன் பின்பு எல்லாம் நாம் யூகித்த விதத்தில் நடக்கிறது. இரண்டாம் பாதியில் சில கேமியோ, ஒரு ஃபிளாஷ்பேக் தவிர எதுவும் சொல்லும் அளவு இல்லை.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான ரஜினி படமாகவும், சுமாரான லோகேஷ் படமாகவும் எஞ்சுகிறது. ஆனால் பெரிய அளவில் தொய்வோ, நம் பொறுமையை சோதிக்கும் காட்சிகளோ குறைவு என்பது மட்டும் ஆறுதல். மற்றபடி ஒன் டைம் வாட்சபுள். படத்தில் இருக்கும் வன்முறைக்காக இது குழந்தைகள் பார்க்கும் படம் அல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.