கணவன் - மனைவி பிரிவும், மீண்டும் இணைய கணவனின் முயற்சிகளுமே `Mana Shankara Vara Prasad Garu'
தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர் ஷங்கர வர பிரசாத் (சிரஞ்சீவி). மிகப்பெரும் தொழிலதிபர் GVR (சச்சின் கேல்கர்) மகள் சசிரேகா (நயன்தாரா). இருவருக்கும் பிடித்துவிட்டதால் தந்தை எதிர்ப்பையும் மீறி பிரசாத்தை திருமணம் செய்து கொள்கிறார் சசிரேகா. பிரசாத்துடன் இரு குழந்தைகள், எளிமையான வாழ்க்கை என்று வாழ்க்கை போகிறது. சில காலம் கழித்து GVR இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள, வீட்டோடு மாப்பிள்ளையாக செல்ல சம்மதிக்கிறார் பிரசாத். ஆனால் அங்கு ஏற்படும் ஒரு மோதல் பிரசாத் - சசிரேகா விவாகரத்து வரை செல்கிறது. இதற்கு ஆறு வருடங்கள் கழித்து GVR உயிருக்கு ஆபத்து எனும் சூழல் வர, அவருக்கு பாதுகாப்பு கொடுக்க மீண்டும் மனைவி வீட்டுக்கு செல்கிறார் பிரசாத். காவல் வேலைகள் ஒருபுறம், மனைவி குழந்தைகளிடம் மீண்டும் சேர காதல் முயற்சிகள் மறுபுறம் என இயங்குகிறார் பிரசாத். தன் மனைவியுடன் மீண்டும் சேர பிரசாத் எடுக்கும் முயற்சிகள் பலித்ததா? GVR உயிருக்கு ஆபத்து யாரால் என கண்டுபிடித்தாரா? என்பதை எல்லாம் சொல்கிறது மீதிப்படம்.
அனில் ரவிப்புடியின் மசாலாவில் வின்டேஜ் சிரஞ்சீவியை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிரஞ்சீவி. படத்துக்காக என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் செய்கிறார். மாஸ் ஃபைட், க்ளாஸ் டான்ஸ், காமெடி கலாய், ஆங்காங்கே எமோஷன் என கம்ப்ளீட் சங்கராந்தி மீல்ஸ். படம் பிரதானமாக ஹுமர் சைட் எடுத்திருப்பதால், சிரஞ்சீவி செய்யும் காமெடி, சிரஞ்சீவியின் பாத்திரம் செய்யும் சொதப்பல்கள் வைத்து காமெடி, விசாரணை என்ற பெயரில் அவர் குழுவுடன் இணைந்து செய்யும் காமெடி, முன்னாள் மனைவியிடம் குழைந்து குழைந்து பேசுவது எனப் செம Entertainment கொடுக்கிறார். நட்பாக சிரஞ்சீவியிடம் அறிமுகமாவது, திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்பதுமாக க்யூட் சைட், முன்னாள் கணவரை வெறுப்பாக பார்ப்பது, முறைப்பது என ஆவேச சைட் இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறார் நயன்தாரா. சிரித்துக் கொண்டே தந்திர வேலைகள் செய்யும் பாத்திரத்தில் சச்சின் கேல்கரும் கச்சிதம். இவர்கள் தவிர ஹீரோவின் குழுவான கேத்தரின் தெரசா, ஹர்ஷ வரதன், அபினவ் ஆகியோரும் காமெடிக்கு உதவுகிறார்கள்.
இப்படத்துக்கு கூடுதல் ஃப்ளேவர் சேர்க்கிறது பீம்ஸின் பாடல்களும் பின்னணி இசையும். பாடலாக வெளியான போதே `மீசலா பிள்ளா', `சசிரேகா' ஆகியவை பெரிய ஹிட். இப்போது படத்தில் பார்க்கையில் அத்தனை பாடல்களும் பொழுதுபோக்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சமீர் ரெட்டி ஒளிப்பதிவில் பல காட்சிகள் மிகத் தரமாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு காமெடி என்டர்டெய்னர் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் அனில் ரவிப்புடி, அதில் வெற்றியும் அடைந்துள்ளார். சிரஞ்சீவியின் காமெடி டைமிங் கூடவே சேர்த்து பழைய அவரது படங்களின், அவர் சார்ந்த நிகழ்வுகளில் ரெஃபரன்ஸ் வைத்து ஜாலியாக்குகிறார். வெங்கடேஷ் வரும் காட்சியிலும் அதே எனர்ஜி. `சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலை படத்தில் பயன்படுத்தி இருந்த விதமும் ஸ்மார்ட் ஐடியா.
இப்படத்தின் குறைகள் என்றால் படத்தின் இரண்டாம் பாதியைத்தான் சொல்ல வேண்டும். முதல் பாதி முழுக்க நிறைய சுவாரஸ்யமான காமெடிகள் மூலம் கதையை நகர்த்திய அனில், இரண்டாம் பாதியில் ஒரே வீட்டை சுற்றி ரவுண்ட் அடிக்கிறார். கதையிலும் எந்த முன்னேற்றமும் நடப்பதில்லை. அது ரொம்பவே சோர்வைக் கொடுக்கிறது. கணவன் - மனைவி சண்டை, விவாகரத்து போன்றவற்றை மிக மேலோட்டமாக அணுகுவதும், பொறுத்துப் போவது தான் பெண்களுக்கான வழி என்றபடி கருத்தை முன் வைப்பதும் ஏற்க முடியாத விஷயம். மேலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இங்கிருக்கும் சட்டங்களை கேலி பொருள் ஆக்கிய விதமும் கண்டிக்கதக்கது. ஒரு பக்கம் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என `பகவந்த் கேசரி' படத்தை கொடுக்கும் அனில் ரவிப்புடி, இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக Women Joke அடிப்பது பெரிய முரண். அவற்றை அடுத்த படங்களில் இருந்தாவது அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் சற்றே இழுத்தாலும், குடும்பமாக பார்த்து ரசிக்க ஏற்ற ஒரு Entertainment, இந்த `Mana Shankara Vara Prasad Garu'