BYRI
BYRI  BYRI
திரை விமர்சனம்

BYRI review | புறா பந்தயத்தால் கிளம்பும் பகையும், தொடரும் உயிர்பலியும்..!

Johnson

நாகர்கோவில் பலரும் அங்கு பிரபலமான புறா பந்தயத்தில் வெற்றிபெறுவதை கௌவரமாக கருதுகிறார்கள். புறா பந்தயத்தை பார்த்தும், அதில் வெற்றியடைவதன் உணர்வையும் புரிந்தும் வளரும் இளைஞன் லிங்கம் (சையத் மஜீத்). அவனுக்கும் புறா பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசை. ஆனால் மூன்று தலைமுறையாக புறா பந்தயத்தால் குடும்பம் சீரழிந்தது. எனவே அடுத்த தலைமுறையாவது படிக்கட்டும் என லிங்கத்தின் ஆசைக்கு குறுக்கே நிற்கிறார் அவனது தாய். இருந்தும் அவருக்குத் தெரியாமல் பந்தயத்திற்கு பதிவு செய்தவது, புறாவுக்கு நீண்ட நேரம் பறக்கும் பயிற்சி அளிப்பது என ரகசியமாக தன் காய்களை நகர்த்துகிறான் லிங்கம். ஆனால் லிங்கத்தின் மீது ஒருவன் கொண்ட பகையும், லிங்கமே தேடி சேர்த்துக் கொண்ட ஒரு பகையும் எப்படி அவன் வாழ்வையும், அவனை சுற்றியுள்ளவர்கள் வாழ்வையும் பாதிக்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தின் டிரெய்லர் பார்த்த போதே சிலர் இது கொஞ்சம் குறையுள்ள படம் தான் என நினைத்திருக்கக் கூடும். ஆம், படத்தின் மேக்கிங் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், நடிகர்களின் நடிப்பும், ஒவ்வொரு காட்சியமைப்பும் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். ஆனால், `பைரி’ தனித்துத் தெரிய காரணம் அதன் Raw தன்மையே. இயக்குநர் ஜான் க்ளாடி, புறா பந்தயம் சம்பந்தப்பட்ட விவரங்களையும், அந்தப் போட்டியினால் எழுகிற பகைமையும் பற்றி மிக அழுத்தமாக சொல்கிறார்.

படத்தின் துவக்கத்தில் சுயம்பு (வினு லாரன்ஸ்) பெரிய யுத்தத்துக்கு தயாராவது போல, ஒரு நபரை கொலை செய்யும் வெறியுடன் அறிமுகமாகிறார். அந்தக் காட்சியில் இருந்தே படம் பரபரக்க ஆரம்பிக்கிறது. படத்தின் எல்லா குறைகளையும் மறக்கடிப்பது, அந்த வேகமும், அழுத்தமாக காட்சிகளுக்குள் விரவி இருக்கும் கதை மாந்தர்களின் கோபமுமே. வெட்டுவேன் குத்துவேன் எனக் கிளம்பும் இளைஞர் கூட்டத்தை, வழி நடத்தும் ரமேஷ் (ரமேஷ் ஆறுமுகம்) கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், பல இடங்களில் அவர் சொல்லும் வசனங்களும் கவனிக்க வைக்கிறது. சுயம்புவிடம் பலகட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்த பின்னும் அவன் ஆறா சினத்துடன் இருக்க, முன்கதை ஒரு வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. இந்த நரேஷனும் நமக்கு ஆரம்பத்தில் ஏதோ போல இருந்தாலும், போகப் போக படத்தின் பாகமாக மாறுகிறது. படத்தின் பல காட்சிகளில் தேவையான டென்ஷனை கொஞ்சமும் குறைவின்றி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜான் க்ளாடி. உதாரணமாக இடைவேளைக்கு முன்பு வரும் ஒரு காட்சியும், தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியும், பின் வரும் இடைவேளையும் கச்சிதம். அதற்கு அதிகப்படியாக உதவுவது இசையமைப்பாளர் அருண் ராஜின் பின்னணி இசைதான்.

இந்தக் கதைக்கான களம் புதிதாக இருந்தாலும், கதை சொல்லும் பாணியும், திரைக்கதையும் பல இடங்களில் ஆடுகளத்தை நினைவுபடுத்துகிறது. இது பெரிய குறையில்லை தான். ஆனாலும், முன்பு சொன்னது போலவே, மேக்கிங், நடிப்பு, காட்சியமைப்பு போன்றவை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அதோடு இன்னும் இரண்டு விஷயங்களை சொல்லலாம். படம் முழுக்க முழுக்க அந்த மனிதர்களின் விளையாட்டையும், பிரிவினர்களையும் பற்றிய விவரங்களை அதிகப்படியாகவும், வேக வேகமாகவும் வழங்குகிறது. இவற்றை இன்னும் ஒழுங்கான திரைக்கதை வடிவத்துக்குள்ளும், காட்சிகளுக்குள்ளும் பொறுத்தி வழங்கியிருக்கலாம். அதன் விளைவாக படத்தில் இருவிதமாக உணர்வுகள் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக பதியாமல் போகிறது. ஒன்று ஹீரோவின் குடும்பம், நண்பர்கள் போன்றோரின் பாசம், இன்னொன்று எதிரணியின் பகை, இரண்டும் தெளிவில்லாத வகையில் வந்து விழுகிறது.

படத்தின் தலைப்பு `பைரி’ என்பது, பந்தயத்தில் பறக்கும் புறாக்களை, வேட்டையாடிச் செல்லும் பறவையை குறிப்பிடுகிறது. அது இன்னொரு விதத்தில் இந்த விளையாட்டினூடாக எழும் பகையாலும், விரோதத்தாலும், ஈகோவாலும் மனிதர்களை வேட்டையாடும் சக மனிதனைக் குறிப்பதாவும் பட்டது. எழுத்திலும், ஆக்கத்திலும் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால், தரமான ஒரு படமாக வந்திருக்கும் பைரி. ஆனாலும் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைத்து முடிக்கும் போது, கண்டிப்பாக அடுத்த பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுகிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.