Mammootty
Mammootty BRAMAYUGAM
திரை விமர்சனம்

கடவுள், சாத்தான், விதி கொஞ்சம் கள்ளம்... மம்முட்டியின் நடிப்பில் ஈர்க்கிறதா BRAMAYUGAM..?

karthi Kg

யட்சியின் காமக் கண்களிலிருந்து உயிர்தப்பி ஓடிய ஒரு பானன், தன் அடுத்த கண்டத்திலிருந்தும் தப்பித்தானா என்பதே Bramayugam.

BRAMAYUGAM Mammootty

காட்டுவழி பாடிக்கொண்டே செல்லும், மணிகண்டன் ஆச்சாரியும், அர்ஜுன் அசோகனும் (தேவன்) ஒரு யட்சியைக் கண்டு மயங்கி நிற்கிறார்கள். மணிகண்டன் ஆச்சாரி யட்சியின் அழகில் விழ, அர்ஜுன் தப்பித்து நதிக்கரை தாண்டி நிற்கும் ஒரு பெரிய மாளிகைக்குள் தஞ்சம் அடைகிறார். அந்த பெரிய வீட்டில் வேலை செய்யும் ஒற்றை நபரிடம் வழி தவறி வந்த கதையை தேவன் சொல்ல, உள்ளிருந்து ஒரு குரல் அவனை நிலை குலையச் செய்கிறது. அந்த மாளிகையின் சொந்தக்காரரான மம்மூட்டி (கொடுமன் போட்டி) அதிகாரத் தோரணையில் தேவனை பாடச் சொல்கிறார். தன் மாளிகையில் விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள அடைக்களமும் தருகிறார்.மம்மூட்டியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்பட அங்கிருந்து தப்பிக்க எண்ணுகிறான் தேவன். கிராமத்தில் தனியாய் இருக்கும் தன் தாயை விரைவில் பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறான் தேவன். ஆனால், விதி அவ்வளவு எளிதில் வளைந்துகொடுக்குமா என்ன. யட்சி யார், சாத்தான் யார், தேவன் யார், சமையல்காரன் யார் என்பதையெல்லாம் இறுதிவரை கொண்டுசென்று சஸ்பென்ஸ் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.

முழுக்கதையையும் எழுதிட்டீங்களே என்றெல்லாம் கோபித்துக்கொள்ள வேண்டும். இது கதை அல்ல. இப்படியான எண்ணற்ற கதைகள் நம் மண்ணில் உண்டு. காந்தாராவைப் போல, தும்படைப் போல மற்றுமொரு செவிவழிக்கதை தான் பிரமயுகமும். ஆனால் அதில் உருவகங்களாலும் வசனங்களாலும் மாயாஜாலங்கள் நிகழ்த்தியிருக்கிறார் ராகுல். படத்தில் பெரும்பலம் வசனங்கள். பிராமணர்கள், சாத்தான், கடவுள், விதி, கலியுகம், அதிகாரம் என பலவற்றைப் பற்றி வசனங்கள் வசவுகளாக கொட்டிக்கொண்டே இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று ஃபிரான்சிஸ் இட்டிகோரா. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மலையாள மூலத்தை எழுதிய ராமகிருஷ்ணன் தான் பிரமயுகத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார். பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஃபிரான்சிஸ் இட்டிகோராவைப் போல இதிலும் ஒரு அமானுஷ்யமான எழுத்துநடை. அதன் அரசியலைப் பற்றியெல்லாம் சிந்திக்கவிடாமல் நம்மை உள்ளிழுக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் ராமக்கிருஷ்ணன். அதை இதிலும் மெய்ப்பித்து இருக்கிறார். ராகுலின் முதல் படமான பூதகாலத்திற்கும் ஒளிப்பதிவு சேஹ்நத் ஜலால் தான். வித்தியாசமான கோணங்களின் மூலம் ஈர்க்கிறார். ரீங்காரமிட்டிக்கொண்டே இருக்கும் பானன் பாடல்களையும் , பின்னணி இசையையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் கிறிஸ்டோ சேவியர். dice விளையாட்டுக்கு தேர்வு செய்த கருவியிலிருந்து அந்த வீட்டுக்குள் வினோதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஜோதிஷ் ஷங்கரின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது.

அமெரிக்க இயக்குநர் ஜோர்டன் பீலேவைப் போல, ஹாரர் த்ரில்லர் பாணியிலான சினிமாக்கள் ராகுலுக்கு எளிதாக கையாளவருகின்றன. பூதகாலம் படத்தைப் போலவே இதில் த்ரில்லரை துணைக்கு அழைத்து கதையை எழுதியிருக்கிறார். ஷாட்கள் தேர்வு செய்யப்பட்ட விதம், பிளாக் & ஒயிட்டில் எடுக்க முடிவு செய்தது; உருவகங்கள் என பலவேறு விஷயங்களில் ஆச்சர்யப்படவைக்கிறார். ராகுல் சதாசிவன் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார். ஐந்தே கதாபாத்திரங்கள் இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் படத்தின் பெரும்பகுதி மூன்றே கதாபாத்திரங்களை மையமிட்டு நகர்கின்றது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையால் நம் கண்களை திரையைவிட்டு அகலாது பார்த்துக்கொள்கிறார். படத்தை இணைந்து தயாரித்திருப்பது நம்ம ஊர் Y not studios. நல்ல நடிகர்களைக் கொண்டு ரீமேக் செய்யலாம். இல்லையேல் அப்படியே விட்டுவிடுவது தான் இந்த படத்துக்குச் செய்யும் நன்றி.

வழக்கமாக வளரும் கலைஞர்களுக்கு 'இது இந்த நடிகரின் காலம்' என எழுதுவது வழக்கம். சூப்பர் ஸ்டார் மம்முட்டி கிட்டத்தட்ட 70 வயதில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த தசாப்தத்தில் அவர் அளவுக்கு யாரும் இந்தியத் திரையலகில் நடித்ததில்லை என உறுதியாகச் சொல்லலாம். 'நண்பகல் நேரத்து மயக்கம்' , ' கண்ணூர் ஸ்குவாட்', Rorschach, பீஷ்ம பர்வம், 'காதல் தி கோர்' என இந்த சீசனில் ஒய்டு பந்தாகவே இருந்தாலும் சிக்ஸ் அடித்துக்கொண்டிருக்கிறார் மம்மூட்டி. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், மம்மூட்டியுடன் போட்டி போடும் அளவுக்கு யாரும் இப்போது இந்தியத் திரையுலகில் நடிப்பதில்லை. அவர் வயதில் அவர் அளவுக்கு வெரைட்டியான கதைக்களங்களை தேர்வு செய்து யாரும் நடிக்கவில்லை. அவருக்கு அவரே தான் போட்டியாளர். இந்தக் கதை உருவாகும் போதே ஒரு சாத்தான், மனித உடலுக்குள் குடியேறுவதைப் போல, மம்முட்டியிடம் வந்து சேர்ந்திருக்கிறது. படத்தில் சொல்வது போல விதிப்பயன். பானனாக வரும் அர்ஜுன் அசோகனும் சளைத்தவறில்லை. ஜூன் , ரோமாஞ்சம் மாதிரியான படங்களில் அர்ஜுனை இதற்கு முன் கண்டிருந்தாலும் இதில் களம் பெரிது, போட்டியாளர் அதைவிடப் பெரிது. பயம் சார்ந்த காட்சிகளில் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

Arjun Ashokan

இது எல்லோருக்குமான படமா என்கிற கேள்வி நிச்சயம் எழும் . அதுதான் இந்தப் படத்தின் குறை. ஹாரர் த்ரில்லர் விரும்பிகள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

சென்னையில் ஆங்கில் சப்டைட்டில்களுடன் படம் வெளியாகியிருக்கிறது.