எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா பொம்மை | Bommai
திரை விமர்சனம்

பொம்மை விமர்சனம் | ராதாமோகன் படமா இது..?

Johnson

சிறுவயதில் தொலைத்த அன்பை திரும்பப் பெரும் ஆணின் உணர்வுப் போராட்டமே `பொம்மை’

S. J. Suryah | Priya Bhavani Shankar

ராஜகுமாரன் (எஸ்.ஜே.சூர்யா) ஜவுளிக்கடை பொம்மைகளுக்கு பெயின்ட் ஆர்டிஸ்ட். சிறு வயதில் தன் அம்மாவை இழந்து வாடும் போது அவருக்கு தோழியாக நந்தினி கிடைக்கிறார். வாழ்க்கை மறுபடி பழைய நிலைக்கு மாறுகிறது. ஆனால் நந்தினியும் அவர் வாழ்விலிருந்து இழக்கும் சூழல் உருவாகிறது. அந்த பாதிப்பிலிருந்து மீள பல ஆண்டு சிகிச்சைக்குப் பிறகு சகஜமாகி சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மீண்டும் நந்தினி அவரது வாழ்வில் ஒரு பொம்மை (ப்ரியா பவானி சங்கர்) வடிவில் கிடைக்கிறார். இதன் பிறகு என்ன வரும் சிக்கல்கள் என்ன? அதை ராஜகுமாரன் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதிக்கதை.

ராதாமோகன் வழக்கமான தனது மென்மையான கதையை, இந்த முறை கொஞ்சம் த்ரில்லர் சேர்த்து சொல்லியிருக்கிறார். அதை தனது நடிப்பின் மூலம் சில காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யா வெளிப்படுத்துகிறார். உதாரணமாக தன் முதலாளியிடம் கோபமாக பேசுவது, போலீஸ் ஸ்டேஷன் காட்சி போன்றவற்றை சொல்லலாம். கூடவே படத்தின் திரைக்கதை, ஒரு மனிதன் தன் மீது அன்பாய் இருந்த இரண்டு பெண்களை இழக்கிறான். மீண்டும் அந்த அன்பு இரு முறை பொம்மை வடிவில் வரும் போதும், அதை இழக்கும் சூழல் வரும் போதும் அவன் எந்த எல்லைக்கு செல்கிறான் என்பதை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படமாக பார்க்கும் போது எந்த அழுத்தமும் இல்லை என்பதுதான் பிரச்சனை.

இந்தப் படம் ஒரு வகையில் குணா, காதல் கொண்டேன் போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது. ஆனால் அவற்றில் நாம் உணர்ந்தவற்றை இந்தப் படத்தில் பெற முடியவில்லை என்பதுதான் சிக்கல். ராஜகுமாரனின் உணர்வுகள் நமக்கு சரியாக கடத்தப்படவில்லை. அதனால் ராஜகுமாரன் - நந்தினி இடையேயான காதலும், அது பிரிந்துவிடக்கூடாது என்ற உணர்வும் நமக்கு வரவே இல்லை. இன்னும் சில கதாபாத்திரங்களும் மிக மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. ராஜகுமாரனின் ஃப்ளாஷ்பேக்கை சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஒரு நண்பர் கதாபாத்திரத்தைக் கொண்டு வந்திருப்பது, திடீரென ப்ரியா (சாந்தினி) கதாபாத்திரத்தைக் கொண்டு வருவது, வசனத்திலேயே அவருக்கும் ராஜகுமாரனுக்கும் உள்ள தொடர்பை விவரிப்பது எல்லாம் ஒட்டவே இல்லை. இன்னொரு பக்கம் கொலைகளை விசாரிக்கும் காவலதிகாரிகள் சார்ந்த காட்சிகளும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்கிறது.

பொன் பார்த்திபனின் வசனங்கள் எமோஷனலான காட்சிகளிலும் சரி, காமெடியான வசனங்களாகவும் சரி படத்திற்கு வலுசேர்க்கவில்லை. ”சார் ரெண்டு கால் இல்லாதவன் கூட இருப்பான், போன்ல அவுட் கோயிங் கால் இல்லாதவன் இருப்பானா?” என்பதெல்லாம் என்ன ரகம் என்பதே புரியவில்லை. இசையமைப்பாளர் யுவனின் பின்னணி இசை சில காட்சிகளில் மட்டும் சிறப்பு. பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. மிகப் பிரபலமான தெய்வீக ராகம் பாடலை படத்தில் சில காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் எந்த அழுத்தமும் சேர்க்கவில்லை.

மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான ஐடியாவை எடுத்து, அதை மிக சுமாராக எழுதி படமாக்கியிருக்கிறார்கள். ராதாமோகன் படம் என்றால் நான் பார்ப்பேன் என சொல்பவர்களுக்கு கண்டிப்பாக படம் ஏமாற்றத்தையே தரும். வழக்கமாக ராதாமோகன் படங்களில் இருக்கும் விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்காது என்பதால் அல்ல, இந்தப் படமே சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லவில்லை என்பதால். ராதாமோகன் படமா இது? என்ற ரியாக்‌ஷன் வருவதை தவிர்க்க முடியாது.