Baba Black Sheep
Baba Black Sheep Baba Black Sheep
திரை விமர்சனம்

Baba Black Sheep Movie Review | இதுதான் 2K கிட்ஸ் வாழ்க்கையா... சோதிக்காதீங்கண்ணா முடியல..! :(

Johnson

மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு தற்கொலையை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா என்பதே `பாபா ப்ளாக் ஷீப்’ படத்தின் ஒன்லைன்.

சேலத்தில் உள்ள தனியார் பள்ளி RR School. இருபாலர் பயிலும் பள்ளி, ஆண்கள் பள்ளி என அந்தப் பள்ளி வளாகமே ஒரு தடுப்புச் சுவரால் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. பள்ளியின் நிறுவனர் இறந்துவிட அவரின் மகன்கள், இருபாலர் பயிலும் பள்ளி, ஆண்கள் பள்ளி என பிரிந்திருக்கும் பள்ளியை ஒன்றாக மாற்றிவிடுகிறார்கள். எனவே இரண்டு பள்ளியின் மாணவர்களும் ஒரே வகுப்பில் அமர்கிறார்கள். இதனால் சில பல குழப்பங்கள் பிரச்னைகள் வருகிறது. குறிப்பாக 11வது படிக்கும் மாணவர்கள் Boys School vs Co-Ed என பிரிந்திருக்கிறார்கள். Boys School கேங்கின் தலைவர் அயாஸ் (அயாஸ்), Co-Ed கேங்கின் தலைவர் நரேந்திர பிரசாத் (நரேந்திர பிரசாத்). இந்த இரண்டு குழுவுக்கும் பல மோதல்கள், குறிப்பாக லாஸ்ட் பென்ச்சில் எந்த கேங் அமர்வது என்பது பிரதான பிரச்சனை. அதை முடிவு செய்ய அடிக்கடி கோமாளித்தமான போட்டிகள் வைத்துக் கொள்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, தற்கொலை கடிதம் ஒன்று அயாஸ், நரேந்திர பிரசாத், நிலா (அம்மு அபிராமி) கையில் கிடைக்கிறது. வாழவே பிடிக்கவில்லை, எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி தற்கொலை செய்து சாகப்போகிறேன்” என்று அதில் எழுதியிருக்கிறது. மொத்த பள்ளி மாணவர்களில் இந்தக் கடித்தை எழுதியது யார்? அவரின் தற்கொலையை இந்த மூவரால் தடுக்க முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

முதலில் படத்தில் இருக்கும் இரண்டு நல்ல கருத்துகளைப் பற்றி பார்க்கலாம். தற்கொலை ஒரு தீர்வல்ல என்று பேசியதும், மனவருத்தத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களும், அவர்களின் நண்பர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறியதும் பாராட்டுகளுக்கு உரியது.

Ammu Abirami

ஆனால் ஒரு படமாக எந்த வித தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. இந்தப் படம் துவங்கும் போது இது 2K கிட்ஸ் பற்றிய படம் என்ற இயக்குநர் ராஜ்மோகனின் வாய்ஸ் ஓவருடன் துவங்கியது. ஆனால் இதில் 2K கிட்ஸ் பற்றி என்ன பேசப்பட்டிருக்கிறது எனப் புரியவில்லை. வெறுமனே லாஸ்ட் பென்சுக்காக சண்டை போடுவதுதான் 2K கிட்ஸ் பிரச்சனையா? இந்தப் படத்தின் கதை மிகவும் பலவீனமாக இருப்பதற்கு உதாரணமாக பல விஷயங்களை சொல்லலாம். படத்தின் கதை இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையிலான மோதல் பற்றி சொல்கிறது. முதன் முதலில் அந்த இரு குழுக்களுக்கும் இடையேயான சண்டையிலேயே அது நமக்குப் புரிந்து விடுகிறது. ஆனால் அதற்கடுத்து கதை என்ன என நகராமல், மறுபடி மறுபடி லாஸ்ட் பென்ச் சண்டையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர். இந்தக் கதைக்கு தொடர்பே இல்லாமல் வருகிறது அயாஸ் - அம்மு அபிராமி இடையிலான காதல் காட்சி. அது தேவை இல்லாதது என்பது கூட பரவாயில்லை, பார்க்கவும் சுவாரஸ்யமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. விருமாண்டி அபிராமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிஜமாக நடந்த சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தும் விதமாக காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பகுதியும் படத்தின் மையக்கதைக்கு தொடர்பில்லாமல் இருக்கிறது.

இது ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்காததற்கு பிரதானமான காரணமே என்ன கதையை எப்படி சொல்லப் போகிறோம் என்ற தெளிவு இல்லாததுதான். இப்போது நாம் ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது பள்ளி பருவத்தைப் பற்றிய ஜாலியான படம் போல் தெரிகிறது, திடீரென அதில் எல்லா பாத்திரங்களும் தற்கொலை பற்றியும், தற்கொலை தீர்வல்ல என்பதைப் பற்றியும் பேசுகிறது. இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நியாயப்படுத்தும் படி கதையையும், திரைக்கதையையும் எழுதியிருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் இல்லை.

இதற்கு ஒரு உதாரணமாக படத்தின் துவக்கதை எடுத்துக் கொள்ளலாம். திடீரென பள்ளி நிர்வகம் இரண்டாக செயல்பட்ட பள்ளியை ஒன்றாக்கலாம் என முடிவெடுக்கிறது. சும்மா பாலையும் டிகாஷனையும் கலப்பது போன்றில்லை இப்படி ஒரு முடிவு. அதற்கு பின் அவ்வளவு நடைமுறை சிக்கல் இருப்பதை பள்ளி ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அதையும் தாண்டி ஒன்றாக்க வேண்டும் என்ற முடிவு எதற்கு என்ற ஒரு காரணமே இருக்காது. வெறுமனே இரண்டு குழுவுக்கு சண்டை வர வேண்டுமென்றால் பள்ளியை ஒன்றாக்க வேண்டும் என்பது போல மெத்தனமாக எழுதியிருக்கிறார்கள்.

நடிப்பு பொறுத்தவரை விருமாண்டி அபிராமி மற்றும் சிலரது நடிப்பு நன்று. ஆனால் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் அயாஸ், நரேந்திர பிரசாத் அவர்களது நண்பர்கள் எல்லோரும் மிக சுமாரான நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவர்களது யூட்யூப் வீடியோவில் என்ன மாதிரி நடிப்பார்களோ, சினிமாவிலும் அப்படியே செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் பாடல்களோ, பின்னணி இசையோ சிறிது கூட கைகொடுக்கவில்லை. இந்தப் படத்தை ஒரு படம் போல் காட்ட பெரிதாக மெனக்கெட்டிருப்பது ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன் தான்.

படத்தின் இயக்குநர் இது 2K கிட்ஸின் வாழ்க்கை என்கிறார். ஆனால் அப்படி ஒரு போலியான தோற்றத்தை மட்டுமே உருவாக்கிக் கொள்கிறது படம். படத்தின் ஒரு கதாபாத்திரம் செண்டிமெண்ட் தடியன் என ரீல்ஸ் போடுகிறது, இன்னொரு கதாபாத்திரம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வைப் வீடியோ போடுகிறது, இன்னொரு கதாபாத்திரம் ஆபாச வீடியோக்கள் பகிரும் வாட்ஸாப் குழுவின் அட்மினாக இருக்கிறது. இவை எல்லாம் தான் 2K கிட்ஸ் வாழ்க்கையா. வெறுமனே தொழில்நுட்ப ரீதியான ட்ரெண்டிங் விஷயங்களை மட்டும் படத்தில் வைத்துக் கொண்டு, 2K கிட்ஸின் வாழ்க்கையை கோட்டைவிட்டிருக்கிறார்கள். 2K கிட்ஸ் எல்லாம் BTS தாண்டி சென்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி எதையாவது எடுத்துவைத்து 90ஸ் கிட், 2K கிட் என ரீல் சுற்றுவார்களோ தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சொன்னதுதான் நினைவிற்கு வந்தது. ”என்னால் இந்த தலைமுறையினரின் காதலையோ, வாழ்வையோ படமாக்க முடியாது. என்னால் அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படியே நான் ஒரு காதல் படம் எடுத்தால் அதில் என் தலைமுறையில் நிகழ்ந்த காதலை மட்டுமே சொல்ல முடியும்” என்றிருப்பார். அந்த கருத்து உண்மைதான் என பாபா ப்ளாக்ஷீப் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். எந்த தலைமுறையினரைப் பற்றியும் படமெடுக்கலாம், ஆனால் அவர்களைப் பற்றி வெறும் நுனிப்புல் மட்டும் மேய்ந்துவிட்டு, அவர்கள் வாழ்க்கையைப் பற்றி எப்படி பேச முடியும்?

மொத்தத்தில் இந்த படம் 1 மணிநேரம் 59 நிமிடங்கள் ஓடக்கூடிய ப்ளாக்‌ஷீப் வீடியோ போன்றுதான் இருந்தது. அந்த வீடியோக்களின் பார்வையாளர்கள் நீங்கள் என்றால், அவை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கக் கூடும். மற்றவர்களுக்கு....